ஒரு ராஜாவிடம், இரண்டு புலவர்கள் இருந்தனர். ஒரு நாள், இரண்டு புலவர்களையும் கூப்பிட்டு, "உங்களுக்கு தினமும் நாலுபடி பால் வேண்டுமா அல்லது மாடும், கன்றும் வேண்டுமா?' என்று கேட்டான் ராஜா. "நாங்கள் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டு வந்து சொல்கிறோம்...' என்றனர்.
வீட்டுக்குப் போயினர் புலவர்கள். மனைவியிடம், "பால் வேண்டுமென்று சொல்லவா, மாடு வேண்டுமென்று சொல்லவா?' என்று கேட்டார் ஒரு புலவர்.
"தினம், நாலு படி பால் கொடுக்கச் சொல்லுங்கள்...' என்றாள் ஒரு புலவரின் மனைவி.
மற்றொரு புலவரின் மனைவி, "மாடும், கன்றுமே கொடுக்கச் சொல்லுங்கள்...' என்றாள். அதன்படியே ராஜாவும் உத்தரவு போட்டான்.
அதன்படி, ஒரு புலவரின் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்தது. புலவரின் மனைவி தினமும் பால், தயிர், வெண்ணை, பால் பாயசம் என்று விதவிதமாக சாப்பிட்டாள்.
மற்றொரு புலவரின் வீட்டுக்கு மாடும், கன்றும் வந்தன; புலவரின் மனைவிக்கு சந்தோஷம்.
உடனே, மாட்டுக்கு ஒரு கொட்டகை போடச் சொன்னாள். தினமும் அதற்கு வைக்கோல், புல் கட்டு வாங்கிப் போட வேண்டியிருந்தது. தினமும் கொட்டகையை, சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. பால் கறக்க ஒருவனை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
ஒரு நாள் வருவான், ஒரு நாள் வராமலே விட்டு விடுவான். அன்றைக்கு கன்றுக் குட்டிக்கு தான் பால் கிடைக்கும். பால் கறக்க சொம்புடன் போனால், மாடு உதைக்கும். அன்றைக்கு பால் அவ்ளோதான்.
தினமும் இப்படி மாட்டுடன் போராட வேண்டியிருந்தது. மற்றொரு புலவர் வீட்டுக்கு தினமும், நாலு படி பால் வந்து விடுவதைக் கேள்விப்பட்டு, கணவரிடம், "நீங்களும் ராஜாவிடம் போய் தினமும் பால் அனுப்பச் சொல்லுங்கள்...' என்றாள்.அதற்கு அந்தப் புலவர், "மீண்டும் ராஜாவிடம் போய் அப்படி கேட்க முடியாது. ஒரு முறை கேட்டபடி அவர் கொடுத்து விட்டார். மீண்டும் போய் அது வேண்டாம், இது வேண்டும் என்று சொல்ல முடியாது...' என்று சொல்லி விட்டார். இப்போது புலவரின் மனைவி மாட்டையும் கட்டி, சாணியையும் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு புலவரின் மனைவியோ தினமும், நாலு படி பால் வாங்கி இஷ்டம் போல் பயன்படுத்துகிறார்.
அதாவது, இனாமாக கிடைக்கிறது என்றாலும், நாம் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் முன்னதாகவே தீர்மானம் செய்வது நல்லது.
|
No comments:
Post a Comment