2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுறுத்தல்படியே, முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா செயல்பட்டதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சாட்சியம் அளித்தார்.
இருவரும் இணைந்தே முடிவுகளை எடுத்ததால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிமணியன் சுவாமி கேட்டுக்கொண்டார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கக் கோரும் வழக்கில், முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நீதிபதி ஓ.பி.சைனியிடம் அவர் சாட்சியம் அளிக்கையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா மட்டுமே தனியாக குற்றவாளியாக முடியாது. ப.சிதம்பரத்துடன் இணைந்து தான் அவர் குற்றம் புரிந்தார்.
கடந்த 2003 அமைச்சரவை முடிவின்படி, ராசாவும் சிதம்பரமும் தான் ஸ்பெக்டரம் விலையை நிர்ணயிப்பதற்கு அதிகாரம் படைத்தவர்களாவர்.
மாநிலங்களவையில் நடப்பு ஆண்டு 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்கையில், '2003-ம் ஆண்டின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில், மத்திய நிதியமைச்சகமும், தொலைத்தொடர்புத் துறையும் சேர்ந்து, விலை நிர்ணயம் விவகாரத்தைப் பார்த்துக் கொண்டது,' எனக் குறிப்பிட்டிருக்கிறார்," என்று நீதிபதியிடம் சுவாமி விளக்கினார்.
மேலும், சில ஆவணங்களை முன்வைத்து, சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு சாட்சியத்தை அளித்தார்.
இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமியின் சாட்சியம் வரும் ஜனவரி 7-ம் தேதி தொடரும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி சைனி அறிவித்தார்.
இந்த வழக்கை ஜனவரி 7-க்கு ஒத்திவைத்ததைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, " 'நீங்கள் அளித்துள்ள நான்கு ஆவணங்களின் நகல்கள் போதுமானதாக இருப்பின், எந்த சாட்சிகளையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லாது போக சாத்தியம்' உண்டு என்று நீதிபதி குறிப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் மூலம், தேவைப்பட்டால், விசாரணைக்கு நேரடியாகவேச் சென்றுவிடலாம்," என்றார்.
|
No comments:
Post a Comment