Sunday, May 1, 2011

தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. கவனமின்மையால் பல திட்டங்களில் குடிநீர் இழப்பு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் 10 முதல் 15 சதவீத குடிநீர் வீணாவதாக தெரியவந்துள்ளது.

குடிநீர் வீணாகிறதா என கண்காணிக்கும் அதிநவீன கண்காணிப்பு வசதி 10-க்கும் குறைவான திட்டங்களில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக கோவை பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் டெலி மெட்ரி என்ற கண்காணிப்பு வசதி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 3 குடிநீர் திட்டங்களில் இந்த வசதி செய்யப்பட்டது.

நீர் இழப்பை கட்டுப்படுத்த கண்காணிப்பு வசதியை அதிகரிக்க நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டது. குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி 4 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.7 கோடியில் புதிய பணிகளுக்கான உத்தரவை பிறப்பித்தார்.

 இதன்மூலம் குடிநீர் சப்ளையை கண்காணிக்க ஸ்கேடா (குடிநீர் சப்ளையை மேற்பார்வை செய்தல், விவரம் சேகரித்தல், தகவல் சேமித்தல்) என்ற திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூ.1.5 கோடி ரூபாய் செலவில் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டத்துக்கான பணிகள் ஓரிரு மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முத்தூர் காங்கயம், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய இடங்களை தொடர்ந்து மற்ற குடிநீர் திட்டங்களிலும் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்கேடாவும், டெலி மெட்ரியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தொழில்நுட்பம். நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் சப்ளையாகும் குடிநீரை ஸ்கேடா கருவி 24 மணி நேரமும் கண்காணிக்கும். சப்ளையாகும் குடிநீர் அளவு, குறைகிற மற்றும் அதிகரிக்கிற அளவு ஆகியவற்றை குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கண்காணிப்பு மானிட்டரில் கண்டறியலாம்.

குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ, உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்தாலோ குழாயின் குடிநீர் அழுத்தம் மூலமாக அதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேடா பயன்பாட்டுக்கு வந்தால் குடிநீர் இழப்பு 90 சதவீதம் வரை தடுக்கப்படும்.

No comments:

Post a Comment