Sunday, May 1, 2011

நான் ஒரு 21வயது பெண்;

நான் ஒரு 21வயது  பெண்; உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் படித்துள்ளேன். இப்போது, என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறேன், உங்களின் வழி காட்டுதலுக்காக...

என் குடும்பத்தில் நான்கு பேர். நான் சிறு வயதிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு, சந்தோஷம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். என் அப்பா, எனக்கு ஒரு அப்பாவாகவும், அம்மாவுக்கு நல்ல கணவனாகவும் நடந்து கொள்ளவில்லை; தினமும் வீட்டில் சண்டை.

பிளஸ் 2 வரை, வீட்டில் இருந்து தான் படித்தேன். கல்லூரி, அதைத் தொடர்ந்து வேலையை வெளியூரில் பார்த்து, ஹாஸ்டலில் இருந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து, நான் ஆசைபட்டது எதுவும் எனக்கு கிடைத்ததில்லை. சந்தோஷம் என்ற ஒன்று இருக்கிறது என்று, வெளியூருக்கு வந்து தான் தெரிந்து கொண்டேன் அம்மா. கஷ்டம், வேதனை இதை மட்டும் பார்த்த நான், வாழ்வில் பிடிப்பு ஏற்படாமல், தற்கொலை செய்ய முயன்றேன். என் அம்மா என்னை காப்பாற்றி, "நீ எனக்காக வாழ வேண்டும்...' என்று கூறினார்; அதனால், கடமையே என்று வாழத் துவங்கினேன்.
அப்போது, என் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த வந்தார் ஒருவர். அவர், என்னுடைய கல்லூரி நண்பர்; இருவரும் நல்ல நண்பர்கள். சில நாட்களுக்கு முன், அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் என்னை பார்த்து கொண்ட விதமும், என்னிடம் நேர்மையாக பழகிய விதமும், என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. சிறு வயதில் இருந்து எனக்கு கிடைக்காத அன்பு, அவரிடம் கிடைத்தது.

அவரை காதலிப்பதாக, அவரிடம் கூறினேன்; அவரும், என்னை நேசிப்பதாக கூறினார். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். எனக்கும், அவருக்கும், விட்டு கொடுக்கும் தன்மையும், புரிந்து கொள்ளும் தன்மையும் நிறையவே இருந்தன. நாட்கள் மிகவும் சந்தோஷமாக கழிந்தன.

இரு வீட்டாரிடமிருந்து சம்மதம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம், இருவர் மனதிலும் ஆழமாக பதிந்தது. ஆனால், என் மனதில் இப்போது மிகப்பெரிய குழப்பம் ஒன்று தோன்றியிருக்கிறது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், என்னால் உறுதியான முடிவு எடுக்க முடியும்; ஆனால், இந்த விஷயத்தில் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், இதில் அவருடைய உயிர் அடங்கியுள்ளது; அதனால் தான், நான் தயங்குகிறேன்.

அந்த விஷயம்... என் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை; ஆனால், அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. நான் அவரிடம் சொன்னதற்கு, "எனக்கு அதெல்லாம் முக்கியம் அல்ல; நீ மட்டும் தான் எனக்கு முக்கியம். ஒருநாள் வாழ்ந்தாலும், உன்னுடன் வாழ்ந்தால் போதும்...' என்று கூறுகிறார்.

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என்று அவரிடம் என்னால் கூற முடியவில்லை. ஆனால், எனக்கு நூறு வருடம் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக அவர் வாழ வேண்டும் என்று ஆசை. அவரை நான் கல்யாணம் செய்து, அவருடைய உயிருடன் விளையாட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவரை விட்டு பிரிய, அவரை இழக்க எனக்கு சக்தியும் இல்லை. நான் என்ன செய்யட்டும் அம்மா.

ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருந்து, பெண்ணுக்கு இல்லை என்றால், என்ன ஆகும்? அதெல்லாம் உண்மை என்றால், காதல் கல்யாணம் செய்தவர்கள், ஜாதகத்தை நம்பாதவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனரே எப்படி? வாழ்வதற்கு, அன்பு, விட்டு கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் முக்கியமா, இல்லை ஜாதக பொருத்தம் முக்கியமா?

அவரை திருமணம் செய்து கொள்ளவா... விட்டு விலகவா அல்லது நான் இந்த உலகை விட்டு போய் விடவா? ஏனென்றால், அவரில்லாமல் என்னால் வாழ இயலாது. அதிக குழப்பத்துடன், உங்கள் தீர்வுக்காக காத்திருக்கிறேன். அதுவரை நான் கல்யாணத்தை தள்ளி போடுகிறேன்.

பதில் :
 
  உன் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் என எழுதியிருந்தாய். உன் அப்பா, அம்மா, நீ தவிர, நான்காவது ஆள், உன் தம்பியாகவோ, தங்கையாகவோ இருக்கும் என நினைக்கிறேன்.

ஒற்றுமை இல்லாத பெற்றோருடன், பிளஸ் 2 படிக்கும் வரை வாழ்ந்த நீ, விடுதியில் தங்கி, கல்லூரி படிப்பை முடித்திருக்கிறாய். தற்சமயம் வேலை பார்த்து, "ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில்' தங்கியிருக்கிறாய் என நம்புகிறேன். உனக்கு வயது, 21 என்றிருக்கிறாய். 17 வயதில் பிளஸ் டூவும், ஏதாவது ஒரு டிகிரியை, 20 வயதிலும் முடித்திருப்பாய். 10 மாத காலமாக, ஏதாவது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாய் என யூகிக்கிறேன்.
காரணமில்லாத காரணங்களுக்காக தற்கொலை செய்ய முயல்வது, மனப் பக்குவமின்மையை காட்டுகிறது. தொடர்ந்து போராடும் மனோபாவம், எந்த பிரச்னையையும் வென்றெடுக்கும். வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது வந்தாலும், "இதுவும் கடந்து போகும்...' என நினை. கொடுமைக்கார கணவனை சகித்து, உன் அம்மா இல்லையா?

கல்லூரி நண்பனை காதலிப்பதாக எழுதியிருந்தாய். தற்சமயம், அவர் மேற்படிப்பு படிக்கிறாரா அல்லது உன்னைப் போலவே, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரா அல்லது சும்மா தான் இருக்கிறாரா? இந்த விவரங்களை, நீ, உன் கடிதத்தில் தெரியப்படுத்தவில்லை.

உன் காதலனை, இந்திரன், சந்திரன் என புகழ்ந்திருக்கிறாய். காதலிக்கும் போது, எல்லா ஆண்களும், ஹீரோ போல் தெரிகின்றனர்; கல்யாணத்திற்கு பின், சாயம் போய், வில்லன் ஆகி விடுகின்றனர். காதலன் பற்றிய உன் கணிப்பு சரிதானா என்பதை, காலம் தான் தீர்மானிக்கும். உன்னுடன் படித்தவன் என்பதால், உன் காதலனுக்கும் உன் வயது தான் இருக்கும்.

உங்களிருவருக்கும் இப்போது திருமணம் அவசியம் தானா? இருவருமே வேலைப் பார்த்துக் கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம், மேற்படிப்பு படிக்கலாமே... மூன்று வருடம், உடல் தொடா காதலை தொடரலாமே? ஒருவரின் மீது ஒருவர் கொண்டிருக்கும் அபிப்ராயம் நிஜம் தானா என சரி பார்க்கலாமே...
சரி... இப்போது உங்களிருவரின் ஜாதக விஷயத்துக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்க்க, ஜாதகங்களை எடுத்துக் கொண்டு, நீயும், உன் காதலனும் நேரடியாக ஜோதிடரிடம் போனீர்களா அல்லது உங்களிரு வீட்டாரில் ஒரு வீட்டார், "மாப்பிள்ளை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது...' எனக் கூறி, உங்களது திருமணத்தை நிறுத்தப் பார்க்கின்றனரா?

மனப் பொருத்தம் இருக்கும் நீங்கள், தலையில் ஜாதகத்தை சுமப்பது ஏன்? 

செவ்வாய் தோஷ ஆண், செவ்வாய் தோஷமில்லாத பெண்ணை மணந்தால் என்னாகும் என்ற கேள்வியை, ஜோதிடர் ஒருவரிடம் வினவினேன். "ஆணின் ஜாதகத்தை பார்த்தால் தான், கிரகங்கள் எங்கெங்கு நிற்கின்றன என்பது தெரியும். மேற்படி இருவரும் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் தோஷ ஆணுக்கு உயிர் ஆபத்து வராது; ஆனால், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே, வெப்பம் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். பரிகாரம், சஷ்டி விரதம் மாதத்திற்கு ஒரு நாள் வீதம், முதல் குழந்தை பிறக்கும் வரை இருக்கலாம் என பதிலளித்தார்.

ஜாதகத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம். அறியாமை, மாறு வேடத்தில் வரும் ஆசீர்வாதம். ஜாதகத்தை பார்க்காத ஒருவருக்கு ஒரு விபத்து நடந்தால், உயிர் பிழைத்த வரை லாபம் என நிம்மதியாக வாழ்வார். ஜாதகம் பார்க்கும் ஒருவருக்கு விபத்து நடந்தால், கண்டதையும் போட்டு குழப்பி, அடுத்தடுத்து விபத்துகளை, தானே ஏற்படுத்திக் கொள்வார்.
ஜாதகம், விதி, ஊழ்வினைப் பயன் எல்லாவற்றையும் விட பிரமாண்டமானது அன்பு. அது, சுயநலம் தொலைக்கும்; 

எதிலும் லாப - நஷ்டக் கணக்கு பார்க்காது. பிரபஞ்ச விதிகளை வகுத்தவன் இறைவன். ஒருவர் மீது அதை பிரயோகிக்க அல்லது பிரயோகிக்காமலிருக்க, அவன் நாட்டமே அதிமுக்கியம்.

மூன்று வருடம் கழித்து, உன் காதலனையே மணந்து கொள்; அவனை விட்டு விலகாதே... மிரட்டல் வார்த்தையாக, "தற்கொலை'யை பயன்படுத்தாதே!
பெஸ்ட் ஆப் லக்!

No comments:

Post a Comment