மின் கட்டணம் செலுத்த இனி அலைய வேண்டிய அவசியமில்லை வீட்டில் இருந்தபடியே செலுத்தும் நடைமுறை வந்துள்ளது. இது குறித்து சிதம்பரம் மின்துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மின் நுகர்வோர் கட்டணம் செலுத்துவதற்கு அலையும் நிலையை தவிர்க்க மூன்று எளிய முறைகளில் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் தங்கள் வீடுகளில் இருந்த படியும் அல்லது இன்டர்நெட் மையங்களிலும் சென்று மின் கட்டணம் செலுத்தலாம். (ஆன் லைன் பேமென்ட்) அத்துடன் அந்தந்த பகுதி மின் வாரிய அலுவலகத்திலும் செலுத்தலாம்.
சிதம்பரத்தில் உள்ளவர்கள் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமைந்துள்ள அனைத்து மின் வாரிய மின் கட்டண வசூல் மையங்களில் செலுத்தலாம். தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின்படி கம்ப்யூட்டர் வசதியுள்ள தபால் நிலையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம். சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட அண்ணாமலை நகர், ஒரத்தூர், பி.முட்லூர், புவனகிரி, கிள்ளை, சிதம்பரம் கிழக்கு, சிதம்பரம் தலைமை அலுவலகம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, லால்பேட்டை, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, பின்னலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், டி.நெடுஞ்சேரி, வல்லம்படுகை, கம்மாபுரம் தபால் நிலையங்களில் மின் கட்டணத்துடன், 5 ரூபாய் சேவைக் கட்டணமாக கூடுதலாக செலுத்தி மின் கட்டணம் செலுத்தலாம்.
புதிய முறைகளில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியத்தால் வழங்கப்படும் 10 இலக்க மின் இணைப்பு எண் கொண்ட வெள்ளை அட்டை அவசியமாகும். தங்கள் பகுதிக்கு வரும் மின் கணக்கீட்டாளரிடம் இலவசமாக மின் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள 30 நாள் மின் கணக்கீடு மற்றும் 30 நாள் மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தின் படி மின் கணக்கீடு செய்யும் தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment