Tuesday, December 6, 2011

எத்தனை பேர் அடையாளம் கண்டு கொள்வார்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பப்பாசி) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை படித்தேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அச்செய்திகள் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்திவரும் சங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் படித்ததும் என் மனதில் புத்தகக் கண்காட்சி குறித்துத் தோன்றிய சில எண்ணங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இது. 
முதலாவதாக, புத்தகக் கண்காட்சியை ஏன் ஜனவரியில் நடத்த வேண்டும்? அந்த மாதத்தில்தான் சென்னையில் இசை விழா, நாட்டிய விழா, சுற்றுலா தொழில் பொருள்காட்சி, சென்னை சங்கமம், தமிழ் சங்கமம், சர்வதேச திரைப்பட விழா, புத்தாண்டு பொங்கல் தள்ளுபடி விற்பனை, பொங்கல், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள், திருவள்ளுவர் தின நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு, தொலைக்காட்சிகளில் பொங்கல் அல்லது விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஏராளமான நிகழ்ச்சிகள் வந்து சென்னை மக்களை பிஸியாக ஆக்கி வைக்கிறது. 

மேலும் இக் கண்காட்சியை ஏன் 14 நாள்கள் மட்டும் நடத்த வேண்டும்? முதல் நாள் மாலையில் தொடக்க விழா நடைபெறும். எனவே அன்றைய நாளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இறுதி நாளன்று பெரும்பாலான அரங்கங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அன்றைய நாளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள முடியாது. ஆக முழுதாக 12 நாள்கள்தான். அதுவும் கண்காட்சி நேரம் என்பது தினசரி மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரை. (விடுமுறை நாள்களில் காலை 11 மணிக்கு தொடங்கும்) ஏன் இத்தனை கெடுபிடி? காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (உணவு இடைவேளை தவிர) கண்காட்சிக்கு பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன சிரமம்? 

புத்தகக் கண்காட்சி வாசலில் டிக்கெட் கொடுப்பதற்காக நான்கைந்து கவுண்டர்கள் இருக்கும். நாம் ஒரு கவுண்டரில் நின்று கொண்டேயிருக்கும்போது திடீரென்று அந்தக் கவுண்டரை மூடிவிட்டு மற்றொரு கவுண்டருக்குப் போகச் சொல்கின்றார்கள். அங்குபோய் வரிசையில் நின்று 10 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் கேட்டால் சில்லறை இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதை நடைமுறைச் சிக்கல் என்று கூற முடியாது. ஒரு சினிமா தியேட்டர் டிக்கெட் விற்பனையாளரைப் போலவோ கிரிக்கெட் ஸ்டேடிய டிக்கெட் விற்பனையாளர் போலவோ புத்தகக் கண்காட்சி விற்பனையாளர் நடந்துகொள்ளக் கூடாது. 

மேலும் ஏன் டிக்கெட் வைக்க வேண்டும்? இது வெறும் கண்காட்சிதானே? அந்த டிக்கெட்டில் நம் அட்ரûஸ எழுதிப் பெட்டியில் போட்டால் அதிர்ஷ்டக் குலுக்கலில் பரிசு (புத்தகங்கள்?) கிடைக்குமாம். அறிவின் சுடர் எரியும் வளாகத்தில் அதிர்ஷ்டத்துக்கு என்ன வேலை? அப்படியே வாசகர்களை ஈர்க்கும் ஓர் உத்தியாக இது இருந்தாலும் அந்த டிக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று கேள்விகளைக் கேட்டுச் சரியாகப் பதில் எழுதுகிறவர்களைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதிர்ஷ்டக் குலுக்கலுக்குப் போகலாம். தமிழ் வாசக உலகம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய படைப்பாளிகள் பற்றியும் படைப்புகள் பற்றியும் அக் கேள்விகள் இருக்கலாமே. 

அடுத்து, பல பதிப்பகங்களின் புத்தக விவரம் அடங்கிய பட்டியலை (கேட்லாக்) வாங்கிப் பார்த்த பின்புதான் ஒரு வாசகன் தனக்குத் தேவையான நூல்களை வாங்க முடியும். ஒரு மூல நூலுக்கு பல உரையாசிரியர்கள் உரையெழுதியிருக்கின்றனர். ஒரே படைப்பாளியின் ஒரு படைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. எது சிறந்த உரை, எது சிறந்த பதிப்பு என்று தேர்வு செய்வது வாசகனின் கடமையாகிறது. மேலும் ஒவ்வொரு பதிப்பகத்தின் விலையையும் அவன் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 



ஆனால், துரதிருஷ்டவசமாக கண்காட்சியின் பெரும்பாலான கடைகளில் முதல் நான்கு நாள்கள் "கேட்லாக்' வரவில்லை என்று கூறுகிறார்கள். கடைசி நான்கு நாள்கள் தீர்ந்துவிட்டது என்று கூறுகின்றனர். எனவே, வாசகனுக்குத் தேர்வு செய்யும் வசதியில்லை. கிடைத்ததை வாங்க வேண்டியதுதான். 



மற்றொன்று, நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளுக்கு மேலும் சில விழுக்காடுகள் கழிவு என்று அறிவிக்கலாம். ஏனெனில் படைப்பாளிக்குத் தரவேண்டிய ராயல்டி எனப்படும் உரிமைத் தொகை இந்நூல்களுக்காக எவருக்கும் கொடுக்கப்படுவதில்லைதானே? 



அடுத்ததாக, பதிப்பக அரங்கங்களில் இருக்கும் பலருக்கும் படைப்பு பற்றியோ பதிப்பு பற்றியோ எதுவும் தெரிந்திருப்பதில்லை. ஏனெனில், பதிப்புத் துறைக்குத் தொடர்பில்லாத ஒருவர் அங்கு இருக்கிறார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் மொத்த பில் தொகையில் பத்து சதவீதம் கழித்து பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். குறிப்பிட்ட எழுத்தாளரின் வேறு புத்தகம் என்ன வந்திருக்கிறது? - தெரியாது. குறிப்பிட்ட நூலின் அடுத்த பதிப்பு எப்போது வெளிவரும்? - தெரியாது. குறிப்பிட்ட புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது? - தெரியாது. இந்தப் பதில்களைக் கேட்டால், ஒரு தீவிர வாசகனுக்கு மனச்சோர்வு ஏற்படத்தானே செய்யும். 



மேலும் அவர்களுக்கு எந்தப் படைப்பாளியையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு சிறந்த எழுத்தாளர் அந்த அரங்கினுள் வந்தாலும் அவர்களுக்குத் தெரியாது. யாராவது அறிமுகம் செய்தாலும் ஒரு புன்னகையோடு சரி. அந்த எழுத்தாளர் ஏதாவது கேட்டால் மறுபடியும் தெரியாது பாட்டுதான். ஒருமுறை எழுத்தாளர் சிட்டி கண்காட்சிக்கு வந்தபோது பெரும்பாலான அரங்கத்தில் இருந்தவர்களுக்கு அவரைத் தெரியவில்லை. இன்றும் ஆ. மாதவன், தோப்பில் முகமது மீரான், கு. சின்னப்ப பாரதி, கே.பி. நீலமணி போன்று தனது படைப்புகளால் மட்டுமே அறியப்பட்ட பொது நிகழ்ச்சிகளிலோ ஊடகங்களிலோ அதிகம் தலைகாட்டாத - படைப்பாளிகளைப் பார்த்தால் எத்தனை பேர் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால், ஒரு சிறிய அரசியல் பிரமுகரோ சினிமா நடிகரோ வந்துவிட்டால் பலரும் சூழ்ந்து நின்று செல்போனில் படம்பிடித்துக் கொள்கின்றனர். 



பெரும்பாலான ஸ்டால்களில் நாம் வாங்கிய புத்தகங்களைப் போட்டு வைத்துக்கொள்ள கவர் கொடுப்பதில்லை. கைகளிலே வைத்துக்கொண்டு அலைய வேண்டியதாக இருக்கிறது. அழகான காகித உறைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதற்கென ஒரு சிறு தொகையைத் தர வாசகர்கள் நிச்சயம் தயாராக இருப்பார்கள். 



அங்கு நடத்தப்படுகிற உணவகம் மற்றும் காபி, டீ போன்றவற்றின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். தரத்துக்குப் பெயர்பெற்ற ஓர் உணவகத்தோடு ஏன் இவர்கள் ஒப்பந்தம் போடக்கூடாது? எல்லோரும் காசு கொடுத்துத்தானே வருகிறார்கள். 



அடுத்து கண்காட்சி அரங்கின் வாயிலில் தினசரி நடக்கும் மாலை நேரக் கூட்டங்கள், சொற்பொழிவுகள். அவை சொல்லும் தரமன்று. இது தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் கண்காட்சிதானே. நம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலுள்ள சிறந்த படைப்பாளிகளை - குறிப்பாக, தங்களது தகுதியால் ஞானபீடம், சாகித்ய அகாதெமி, பாரதீய பாட்சா பரீஷத், சரஸ்வதி சம்மான், குமாரன் ஆசான் போன்ற விருதுகளை வென்றெடுத்தவர்களை அல்லது அத்தகைய விருதுகளைப் பெறத் தகுதியுடையவர்களை அழைத்துவந்து உரையாற்றவோ அல்லது கட்டுரை வாசிக்கவோ சொல்லக் கூடாதா? அது படைப்புப் பற்றியும் இலக்கியம் பற்றியும் அவர்களின் பார்வையை நாம் அறிந்துகொள்ள உதவியாக இருக்காதா? அல்லது குறைந்தபட்சம் சென்னைக்கு வெளியே இருக்கும் சிறந்த எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களை உரையாற்ற வைக்கக்கூடாதா? பட்டிமன்றத்தில் கேட்டு கேட்டு புளித்துப்போன அசட்டு ஜோக்குகளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் சங்கப்பாடல்களையும் எத்தனை முறைதான் கேட்பது? ஒரு தேர்ந்த வாசகனுக்கு இது ஓர் அவமானமல்லவா? 



கடைசியாக ஒரு வார்த்தை. முடிந்தால் வரும் ஆண்டு புத்தகக் கண்காட்சியைப் பழையபடி காயிதே மில்லத் கல்லூரி வளாகத்துக்கே மாற்றுங்கள். சென்னையின் இதயமாக இருக்கும் அண்ணாசாலையிலிருந்து எந்தப் பகுதிக்கும் பேருந்து வசதி இருக்கிறது. ஆட்டோவும் எளிதில் கிடைக்கும். அத்தகைய உத்தரவாதம் தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்துக்குக் கிடையாது.

No comments:

Post a Comment