இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மனித சமுதாயத்தின் அங்கமாக இருக்கக் கூடிய பெண் இனம் சேர்க்கப்பட்டு விடும் என்பதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகப் பெண்கள் தினம், பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று பல்வேறு இனிப்பு தடவப்பட்ட வார்த்தைப் பிரயோகங்களை இந்த உலகம் உச்சரிக்கத் தெரிந்த அளவுக்கு, பெண் இனத்தின் மீது எந்தளவு மதிப்பு வைத்திருக்கின்றது என்று பார்த்தால், இனி தேடிப் பிடிக்க வேண்டிய இனமாக பெண் இனம் ஆகி விடுமோ என்ற கவலை தான் பிறக்கின்றது.
அறியாமைக்கால மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்தில் தான் பெண்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இன்னும் பெண்களுக்கு உயிர் உண்டா என்று கூட கேட்கப்பட்டதுண்டு. இன்று நாகரீகம் பேசும் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளில் வாழும் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் கூட அவர்களாக அடைந்து கொண்டதல்ல, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் கிடைத்த ஒன்றே!
அன்றைக்கு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அழித்தார்கள். இன்றைக்கு சிசுவிலேயே கண்டறிந்து அழித்து விடுகின்றார்கள். அன்றைக்கு பெற்றோர்கள் மட்டும் இந்த மாபாதகததைச் செய்தார்கள். இன்றைக்கு மனசாட்சியை விற்று விட்டு, காசுக்காக பிழைப்பு நடத்தும், பிழைப்பு வாத மருத்துவர்கள் செய்கின்றார்கள். என்ன வித்தியாசம் அன்றைய காலம் அறியாமைக்காலம் நாகரீகமற்ற காலம் எனப் பட்டது. இன்றைக்கு மனிதன் நாகரீகமடைந்து விட்டான் என்று கூறப்படுகின்றது. ஆனால் மனிதன் மிருகமாகிக் கொண்டிருப்பதை புள்ளி விபரங்கள் மனித நேயம் உள்ளவர்களை எச்சரிக்கின்றன.
நமது இந்திய தேசத்தின் மொத்த மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் ஆண் பெண் விகிதாச்சாரம் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் இருக்கின்றார்கள். மேலும் 0-6 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் இந்த அளவு படு பாதளத்தில் உள்ளது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 793 பெண் குழந்தைகளே உள்ளன.
நாடளவில் ஹரியானாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 820 என்றும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 897 என்றும், இன்னும் படித்தவர்கள் அதிகம் பேர் வாழக் கூடிய பஞ்சாப், மற்றும் சண்டிகாரில் இந்த அளவு 1000 ஆண் குழந்தைகளுக்கு 845 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது. டில்லியில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 865 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது.
மேலே நாம் பார்த்த வட மாநிலங்கள் யாவும் அதிகம் படித்த மற்றும் பணக்கார விவசாயிகள் வாழக் கூடிய மாநிலங்களாகும். இத்தகையவர்களிடையே பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் தாழ்ந்த போயிருப்பதானது, பெண் குழந்தைகள் மீது அவர்கள் வைத்திருக்கும் பிரியத்தை?க் காட்டுகின்றது.
இந்த மாநில மக்கள் தான் உலக வளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா என்றும் ஐரோப்பா என்றும் பறந்து சென்று பொருளீட்டக் கூடிய மக்களாக இருக்கின்றார்கள். இன்னும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பார்க் என்றும் பீச் என்றும் பிக்னிக் என்றும் ஊர் சுற்றுவதற்கும் இன்னும் பாரம்பரிய லஸ்ஸி மற்றும் மோர் போன்றவைகளை விட்டு விட்டு, கொக்கோ கோலா என்றும் பெப்ஸி என்றும் பீர் என்றும் செலவழிக்கத் தெரிந்த இவர்களுக்கு, பெண் பிள்ளையைப் பெற்று வளர்ப்பது மிகவும் கடிமான.., பாரமானா செயலாகப் போய் விட்டதென்பது, பெண் குழந்தைகள் மீது அவர்களுக்கு இருக்கக் கூடிய மதிப்பை? வெளிக்காட்டுகின்றது.
இந்த அளவு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதன் காரணம் என்னவெனில், கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுவது தான் காரணமாகும். இந்தப் பிஞ்சுகள் வெளி உலகத்தை எட்டிப் பார்ப்பதே இல்லை. இந்த விகிதாச்சாரக் குறைவு இயற்கை ஏற்படுத்தியதல்ல, மாறாக மனிதன் கடைபிடிக்கும் பலவீனமாக கொள்கைகள் தான் காரணமாகும். இந்த உலக வாழ்க்கையை அனுபவிப்பது ஒன்றே அவனது பிறப்பின் நோக்கம் என்று கருதியதன் விளைவு, தன்னைப் போலவே தோற்றமெடுக்கக் கூடிய ஒரு உயிரின் உரிமையை அவன் பறித்து விடுகின்றான்.
ஆனால் பெண்களுக்கு இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று குரல் எழுப்புபவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம். முஸ்லிம் சமுதாயம் இந்திய தேசத்தின் மொத்த ஜனத் தொகையில் 15-20 விழுக்காடுகள் இருக்கின்றனர். அவர்களிடம் இத்தகைய புள்ளி விபரக் கணக்குகளை எடுத்துப் பார்த்தால், மற்ற சமுதாயங்களை விடவும் பெண் பிள்ளைகளை கருவிலேயே அழிக்கும் மடமைத்தனம் குறைவாகத் தான் இருக்கும். இன்னும் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இடையே இவ்வளவு பெரிய இடைவெளி இருக்காது.
காரணமென்னவெனில், பிறந்து விட்ட ஒவ்வொரு உயிருக்கும் அதற்குத் தேவையான வாழ்வாதாரத் தேவைகளை அள்ளிக் கொடுப்பவன் படைத்தவனான அல்லாஹ் தான் என்ற நம்பிக்கையாகும்.
அவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;.
இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே இந்த படுபாதகச் செயலைத் தடுத்து நிறுத்த முடியும். ஏற்றுக் கொள்வோமா?
|
No comments:
Post a Comment