இயலாமையுடன் பேருந்து கட்டண உயர்வை ஏற்க வேண்டுமா அல்லது போராட வேண்டுமா? போராடுவதென்றால் எப்படி போராடுவது, அரசுக்கு எப்படி எதிர்ப்பை தெரியப்படுத்துவது; அரசை எப்படி பணியவைப்பது?
தமிழக உழைக்கும் மக்களிடம் எழுந்திருக்கும் இந்தத் தலையாய கேள்விக்கு சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’யின் போராட்ட வழிமுறை விடையளித்திருக்கிறது. நவம்பர் 24ம் தேதி சென்னை ஆவடியில் சிறு பொறியாக கிளம்பிய அந்தப் போராட்டம், இன்று சென்னை மாநகர பேருந்தில் அன்றாடம் பயணம் செய்யும் மக்களின் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளை விட விரைவாக இந்தப் போராட்ட வழிமுறை பரவி வர என்ன காரணம்? அப்படி எந்த முறையில் போராடச் சொல்லி சென்னை ’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’(புமாஇமு – RSYF) மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறது? அப்படி போராடினால் காவல்துறை மூர்க்கத்துடன் பாயாதா? அனைத்தையும் விட, அப்படியென்ன சிறப்பான போராட்டத்தை புமாஇமு கண்டுபிடித்துவிட்டது?
அடுக்கடுக்காக எழும் இந்த அனைத்து வினாக்களுக்கும் பதிலை தெரிந்து கொள்ள சற்றே காலத்தை பின்நோக்கி நகர்த்துவோம்.
(படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
நவம்பர் 24 அன்று ஆவடி பேருந்து நிலையத்தில் பயணிகள் குழுமியிருந்தார்கள். அனைவரது நாடி, நரம்புகளிலும் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மடங்காகிவிட்ட பேருந்து கட்டணம். சல்லிசாக பணத்தை எடுத்து வைத்தால்தான் அலுவலகம் அல்லது கல்லூரி அல்லது வியாபாரத்துக்கு செல்ல முடியும். மாத இறுதி. ஒருவேளை உணவை தியாகம் செய்து பேருந்துக்காக எடுத்து வைத்தப் பணம், இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், மாதம் முடிய இன்னும் 6 நாட்கள் இருக்கின்றன. என்ன செய்வது… யாரிடம் கடன் கேட்பது… எதை அடகு வைப்பது…
என மக்கள் யோசித்தபடியே தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துக்காக மக்கள் காத்திருந்தபோது -
15 மாணவ, மாணவிகள் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தார்கள். சட்டென அனைவரது கவனமும் அவர்கள் மீது திரும்பியது. காரணம், 13 பேர் சிவப்பு உடையில் இருந்தார்கள். இருவர் மட்டும் ’வேறொரு’ உடையையும் கூடவே தங்கள் முகத்தை மறைக்க ’இன்னொருவரின்’ முகம் வரைந்த முகமூடியையும் அணிந்திருந்தார்கள். அந்த உடையையும், முகத்தை மறைக்கும் முகமூடியையும் பார்த்ததுமே கோபம், வெறுப்பு, சிரிப்பு, ஆச்சர்யம்… என அனைத்தும் கலந்த உணர்வு மக்களிடம் பூத்தது. தற்காலிகமாக தங்கள் கவலையை மறந்துவிட்டு, அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
ஒருவர், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா போல் ஆடை அணிந்து, ஜெவின் முகம் வரைந்த முகமூடியை, தன் முகத்தில் ஒட்ட வைத்திருந்தார். அடுத்தவரின் தோற்றம், அச்சு அசலாக, உடன்பிறவா சகோதரியான சசிகலாவை பிரதிபலித்தது.
அந்த 15 பேரும், நின்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேருந்திலும் ஏறினார்கள். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் கவனம், தங்கள் மீது திரும்பியதும், ஜெ போல் தோற்றம் அளித்தவர் தொண்டையை கனைத்துக் கொண்டு, தன் கையில் இருந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். அதாவது, ’தவிர்க்க இயலாத காரணத்தால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக’ அறிவித்தார். பிறகு தனக்கு பக்கபலமாக அருகில் நின்றுக் கொண்டிருந்த சசிகலா போல் இருந்தவரை பார்த்து சிரித்தார்.
அவ்வளவுதான். சிவப்பு உடை அணிந்திருந்த மற்ற 13 பேரும், அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு அடித்தார்கள்! ’’மக்களோட வாழ்க்கைத் தரத்தை பத்தி எதுவுமே தெரியாம, கட்டணத்தை எப்படி நீ இஷ்டத்துக்கு உயர்த்தலாம்? நியாயமா பார்த்தா, பேருந்து கட்டணத்த முந்தையதை விட நீ குறைக்கணும்…’’ என நையப்புடைந்தார்கள்.
ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து கண்டபடி திட்ட வேண்டும் என நினைத்திருந்த மக்களும் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும், ஜெ – சசி ஆகவே நினைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.
அப்போதுதான் ’’அன்பார்ந்த உழைக்கும் மக்களே…’’என கணீரென்று ஒரு குரல் ஒலித்தது. சட்டென்று மக்கள் அமைதியானார்கள். குரலுக்கு உரியவர், அந்த 13 பேரில் ஒருவர்தான். அந்தக் குரலில் இருந்த அழுத்தம், அவர் என்னதான் சொல்கிறார் என காது கொடுத்து கேட்க வைத்தது.
பிசிறில்லாமல், அந்தக் குரலுக்குரியவர் பேச ஆரம்பித்தார். ’’’புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நாங்கள். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்க சூழலில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பன்னாட்டு முதலாளிகளுக்கும், அதிகார வர்க்க மற்றும் தரகு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் ஏழை, எளிய மக்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளின் நலன்கள்தான் முக்கியம்.
உலகின் முதல் 5 விஸ்கி வியாபாரிகளில் ஒருவனான விஜய் மல்லையா, இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை. பதிலாக தனது ’கிங் ஃபிஷர்’ஏர்லைன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி, தனக்கு மேலும் பண உதவி செய்யும்படி அரசாங்கத்திடம் மடிப்பிச்சை கேட்கிறான்.
நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்திலிருந்து அவனை காப்பாற்ற அரசு முயல்கிறது.
இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களை பேணுவதில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகின்றன. ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் அனைத்தும் விதிவிலக்கின்றி ’நலத்திட்டங்கள்’ என்னும் பெயரில் அறிவிப்பதற்கு பின்னால், முதலாளிகளின் நலன்கள்தான் இருக்கின்றன.
சாராயக் கடைகளை அரசே நடத்துகிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. ஆனால், மக்களின் அன்றாடத் தேவையான – உயிர் வாழ்க்கைக்கு அவசியமான – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன.
இந்த பாசிச நடவடிக்கையை மக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களாகிய நாம்தான். அடுத்தடுத்து நம்மீது திணிக்கப்படும் இந்த விலைவாசி உயர்வுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும்.
அது நம்மால் முடியும்.
பேருந்து கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். இதை மவுனமாக நாம் ஏற்றுக் கொண்டால், இந்த வருவாய் விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிக்கும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் பெயரில் நம்மை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவவே பயன்படும்.
எனவே டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம். ஒட்டுமொத்த மக்களும் டிக்கெட் வாங்க மாட்டோம் என்று சொன்னால், இந்த அரசால் என்ன செய்ய முடியும்? நிமிர்ந்து நிற்போம். நமது உரிமைகளை நிலை நாட்டுவோம். மக்களுக்கான அரசை நிறுவுவோம்.
அதற்கு முதல் படியாக, இன்று முதல் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…’’
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை நோக்கி அவர் பேசி முடித்த பிறகும், மவுனமே நிலவியது. ஆனால், அது சில விநாடிகள்தான்.
அதன் பிறகு, அந்தப் பேருந்தே குலுங்கும் அளவுக்கு அதிலிருந்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் கர்ஜித்தார்கள். ’’ஆம்.டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’
மக்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை சொல்லிவிட்டு, அந்த 15 பேரும், அந்தப் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அடுத்த பேருந்தில் ஏறினார்கள். முந்தைய பேருந்தில் என்ன நடந்ததோ, அதுவே இங்கும் நடந்தது. அடுத்தடுத்த பேருந்துகளிலும் நிகழ்ந்தது.
என்ன செய்வது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான கண்டனங்களை எப்படி தெரிவிப்பது, எந்த வகையில் போராடுவது என தெரியாமல் தடுமாறிய மக்களுக்கு இப்போது புதிய விடியலை கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் போராட்ட வழிமுறை நிச்சயம் பயனளிக்கும் என அவர்களுக்கு புரிந்தது. உடனே அந்த 15 பேரையும், நேசத்துடன் ’தோழர்’, ’தோழர்’ என அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தானே ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறார்கள்?
காலையில் ஆரம்பித்த பிரச்சாரம், மாலை வரை தொடர்ந்தது. மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்துக்கு பிறகு, மக்களும் உடன் இறங்கி சக பயணிகளிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…
டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வோம்…
அன்றைய பொழுது முடிந்ததும் புமாஇமு தோழர்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை மறுநாள் செயல்படுத்தவும் முடிவு செய்தார்கள். அந்த முடிவு, போராட்டத்தை மறுகட்டத்துக்கு நகர்த்துவது தொடர்பானது.
அதன்படி, மறுநாள், நவம்பர் 25 அன்று அதே 15 புமாஇமு தோழர்கள், காலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் அருகில் ஒன்று சேர்ந்தார்கள். முந்தைய தினம் போலவே இன்றும் இரு தோழர்கள் ஜெ – சசி போல உடை, முகமூடியை அணிந்துக் கொண்டார்கள். சென்ட்ரல் இரயில்நிலையம் நோக்கி செல்லவிருந்த பேருந்தில் ஏறினார்கள்.
முந்தைய தின நிகழ்வுகளே இன்றும் அரங்கேறின, ஒரேயொரு திருத்தத்துடன். ’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். எங்களுடன் இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும். வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்…’’ என முழங்கினார்கள்.
நல்ல பலன் கிடைத்தது. அந்தப் பேருந்தில் இருந்த கணிசமான மக்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். பலரும் டிக்கெட் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கச் சொல்லி வற்புறுத்திய நடத்துனர், ஒரு கட்டத்துக்கு பிறகு, தோழர்களின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்.
சென்ட்ரல் இரயில்நிலையத்தில் பேருந்து நின்றதும், தோழர்கள் இறங்கினார்கள். சாலையை கடந்து எதிர்பக்கம் வந்தவர்கள், தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.
அண்ணாநகரிலிருந்து தோழர்களை கவனித்து வந்த சிலர், இம்முறையும் தேனாம்பேட்டை செல்லும் பேருந்தில், தோழர்களுடன் சேர்ந்து ஏறினார்கள். அதில் ஒரு மூதாட்டியும் இருந்தார்.
அதே தீவிரத்துடன் பிரச்சாரம் தொடர்ந்தது. இங்கும் கணிசமான மக்கள் டிக்கெட் வாங்க மறுத்துவிட்டு தோழர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ’’ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவி எல்லாம் யார் கேட்டாங்க? பால், பேருந்து கட்டணத்தை எல்லாம் எப்படி ஏத்தலாம்?’’என குரல் எழுப்பினார்கள். பாசிச ஜெயாவின் இந்த நடவடிக்கையை ஆதரித்து எழுதும் பத்திரிகைகளை திட்டித் தீர்த்தார்கள். இங்கும் நடத்துனரும், ஓட்டுநரும் தோழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனாம்பேட்டையில் இறங்கிய தோழர்கள், சேத்துப்பட்டு செல்லும் பேருந்தில் ஏறினார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
தோழர்கள் ஏறிய பேருந்தின் நடத்துனர், தோழர்களின் போராட்டத்தை ஆதரித்தாலும் சற்றே பயந்துவிட்டார். எனவே காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருந்த காவல்நிலைய வாசலில் பேருந்தை ஓட்டுநரின் ஒத்துழைப்புடன் நிறுத்திவிட்டார்.
தோழர்களின் போராட்ட வழிமுறைகளை ஆதரித்து வந்த மக்களுக்கு இந்தச் செய்கை பிடிக்கவில்லை. ’’நியாயமான போராட்டத்தை ஏன் இப்படி ஒடுக்க வேண்டும்? நாங்கள் தோழர்கள் பக்கம் நிற்கிறோம்…’’ என அறிவித்தார்கள்.
அவர்களை அமைத்திப்படுத்திய சென்னை புமாஇமு-வின் இணைச் செயலாளரும், 15பேரில் ஒருவருமான தோழர் நெடுஞ்செழியன், நடத்துனருடன் இறங்கி காவல்நிலையத்துக்குள் சென்றார். அங்கிருந்த உயரதிகாரியிடம் ஒளிவுமறைவின்றி நடந்ததை, நடந்தவாறே சொன்னதுடன், ’’எங்களை சிறையில் அடைத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்…’’ என்றார்.
தோழர் பேசியதை காது கொடுத்து கேட்ட அந்த காவல்துறை அதிகாரி, சட்டென நடத்துனரிடம் பாய்ந்தார். ஆம், தோழரை அவர் கண்டிக்கவில்லை!
’’இங்க எதுக்குயா பஸ்ஸை நிறுத்தின..?’’
’’சார்…’’ அதிர்ந்த நடத்துனர், ’’நீங்களே இப்படி சொன்னா எப்படி சார்? இவர் சொன்னதை கேட்டீங்கல? போராடறாங்க சார்…’’
’’அதுக்கென்ன இப்ப? பஸ்ஸுக்குள்ளதான போராடறாங்க, ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த? உங்க டிப்போவுக்கு போய் பஞ்சாயத்துனா பேசிக்க, இல்ல சமரசம்னா பண்ணிக்க… போ… போ…’’
அதற்கு மேல் அங்கிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்த நடத்துனர், தோழருடன் பேருந்தின் அருகில் வந்தார். அதற்குள் மற்ற தோழர்களும், பயணிகளில் சிலரும் இறங்கியிருந்தனர்.
கண்ணாடி வழியே வாடிய முகத்துடன் வந்த நடத்துனரை கண்டதும், ஓட்டுநருக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனடியாக வண்டியை கிளப்பி, பயணிகள் ஏறினார்களா இல்லையா என்றுக் கூட பார்க்காமல் வேகமாக சென்றுவிட்டார்! ஓடிப் போயந்தப் பேருந்தில் ஏறினார் நடத்துனர்.
வாசல் வரை வந்த காவல்துறை அதிகாரி, தோழர் நெடுஞ்செழியனை அழைத்து, ’’பர்மிஷன் வாங்கி போராடினா இதுமாதிரி சிக்கல் வராதே…’’ என்றார்.
’’யார்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு சொல்றீங்க?’’ விலைவாசி உயர்வுக்கு எங்களிடம் பர்மிஷன் வாங்கித்தான் வெளியிட்டார்களா? அது சரின்னா இதுவும் சரிதான் என கறாராக கேட்டார் தோழர் நெடுஞ்செழியன்.
’’உங்க அமைப்புகிட்டயே இதுதாங்க ப்ரச்னை. பதில் பேச முடியாதபடி மடக்கிடறீங்க…’’ என்று அலுத்துக் கொண்டவர், ’’தயவு செஞ்சு அண்ணா மேம்பாலத்துக்கு அந்தப் பக்கம் போய், ஏதாவது செஞ்சுக்குங்க… இங்க வேண்டாம்?’’
’’ஏன்?’’
’’அந்தப் பக்கம்னா என் லிமிட்ல வராதுங்க… புரிஞ்சுக்குங்க…’’ என்றார் பரிதாபமாக.
ஆனால், தோழர்கள், உறுதியுடன் டி.எம்.எஸ். நிறுத்தத்துக்கு சென்று சேத்துப்பட்டு பேருந்தில் ஏறினார்கள். பிறகு சேத்துப்பட்டிலிருந்து மதுரவாயில் வரை பேருந்தில் பிரச்ச்சாரம் செய்தபடியே சென்றார்கள்.
எங்குமே தோழர்கள் மட்டுமல்ல, கணிசமான மக்களும் டிக்கெட் வாங்கவில்லை. வாங்க மறுத்துவிட்டார்கள். பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை விமர்சித்தார்கள். நடத்துனர்களும், ஓட்டுநர்களும் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது.
மதுரவாயிலில் தோழர்கள் இறங்கியபோது, யாரோ அழைக்கும் குரல் கேட்டது. திரும்பினால், மூதாட்டி.
’’நீங்க பேசினது, போராடினது எல்லாம் சரி… இனிமே எங்க போனாலும் டிக்கெட் எடுக்கறதில்லைனு உறுதியா இருக்கேன்…’’
’’நன்றி பாட்டி… நாங்க உங்களுக்கு துணையா இருப்போம்…’’
’’அதைதான் போலீஸ் ஸ்டேஷன்லயே பார்த்தனே…’’ என புன்னகைத்தார் அந்த மூதாட்டி.
’’என்ன பாட்டி சொல்றீங்க..?’’
’’அட, ஆமா பசங்களா… இல்ல இல்ல தோழர்களா… அண்ணாநகர்லேந்து நீங்க என்னதான் செய்யறீங்கனு பார்க்க உங்க கூடதான் நான் வந்துகிட்டு இருக்கேன்… உங்கள மாதிரி எந்தக் கட்சிக்காரனும் எங்க கஷ்டம் புரிஞ்சு போராடினதில்ல… வூட்டுக்கு போய் அக்கம்பக்கமெல்லாம் ’எங்க போனாலும் டிக்கெட் வாங்காதீங்க’னு சொல்லப் போறேன்…’’
’’செய்ங்க பாட்டி… நாங்க வர்றோம்… ஏதாவதுனா எங்களுக்கு தகவல் கொடுங்க…’’ என்றபடி தங்கள் தொடர்பு எண்ணை அளித்துவிட்டு தோழர்கள், ’’வர்றோம் பாட்டி’’ என கிளம்பினார்கள்.
’’கொஞ்சம் நில்லுங்க… வந்து… நான் வயசுல பெரியவ. உங்களவிட எனக்கு அனுபவம் ஜாஸ்தி. அதனால நான் ஒண்ணு சொல்றேன்… அதை தட்டாம நீங்க செய்யணும்…’’
தோழர்கள் அமைதியாக பாட்டியை பார்த்தார்கள்.
’’இது மட்டும் வேண்டாம். எங்க நானே கோபம் தாங்காம இந்த பாப்பாவ, அந்த ….னு நினைச்சு கொன்னுடுவனோனு அப்பத்துலேந்து பயந்துட்டு இருக்கேன். எல்லாரும் என்னை மாதிரியே கோபத்தை அடக்குவாங்கனு சொல்ல முடியாது. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட போகுது… அதனால அந்த ராட்சசிய காட்டாம பேசுங்க… சரியா? பத்திரமா போயிட்டு வாங்க…’’
என்றபடி அந்தப் பாட்டி சென்றார்.
அந்தப் பாட்டி சுட்டிக் காட்டி, ’இதை அணியாதீர்கள்… அந்த அரக்கியை நினைவுப்படுத்தாதீர்கள்’ என்று சொன்னது ஜெயலலிதாவின் முகம் பொறித்த முகமூடியை!!!
|
No comments:
Post a Comment