Thursday, December 15, 2011

லைட்ஸ.. கேமரா.. காதல்!

காட்சி 75

பகல்/எக்ஸ்டீரியர்

மும்பை ஒபேரியா மால்

ராகவன் நீல கலரில் கற்கள் பதித்த அந்த பவுச்சை தேர்ந்தெடுத்த போது அவன் அருகில் மிக நெருக்கமாய் நின்று அவனை அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டு இருந்தார் தீபிகா. நீல கலர் பவுச்சை கையில் எடுத்து திருப்பித் திருப்பி பார்த்தான் ராகவன். அவனுக்குப் பிடிக்கவில்லை. திரும்பவும் அதே ஸ்டேண்டில் மாட்டி வைத்தான். அவன் திரும்பவும் அதே ஸ்டேண்டில் மாட்டி வைத்தான், யப்பா.. அவன் மாட்டி வைத்தது இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஐம்பத்தி இரண்டாவது பவுச்.

தீபிகாவுக்கு பவுச் வாங்குவது நோக்கமல்ல; தேவையும் இல்லை. அவளின் அத்தனை ஆடைகளுக்கும் விதவிதமாய் வெரைட்டியான கலரில் பவுச் வைத்திருக்கிறாள். அவளுக்குத் தேவை, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இந்த மும்பையில் அவளுடன் ஊர் சுற்ற வேண்டும்; கதை பேச வேண்டும். இவள் அழகை அவன் ரசிப்பதை புகழ்வதை உள்ளூர ரசிக்க வேண்டும், அவ்வளவுதான்.


இறுதியாக சிவப்புக் கலரில் ஒரு பவுச்சை செலக்ட் செய்தான். தீபீகா, 'ராகவ் சூப்பர்' என்றதும், விலை கூட கேட்காமல் கிரடிட் கார்டைக் கொடுத்தான். அந்த மும்பை ஒபேரியோ மால் எட்டாவது மாடியிலிருந்து எஸ்கலேட்டரில் இறங்கும் போது இடம், பொருள், ஏவல் என எதுவும் பார்க்காமல் ராகவனே எதிர்பார்க்காத நேரம் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ராகவன் சிரித்தான். இந்த சிரிப்பு ஹோட்டல் அறைக்குப் போனதும் 'உனக்கு பலமான விருந்து காத்திருக்கிறது டார்லிங்' என்பதை சொல்லும் சிரிப்பு. புரிந்து கொண்டதால் அர்த்தத்துடன் சிரித்தாள்.



-cut-



காட்சி 16

பகல்/இன்டீரியர்

ஹீரோயின் கிராமத்து வீடு



மீனாவுக்கு தலைகால் புரியவில்லை. மெட்ராஸிலிருந்து 'மாமா வருகிறார்; எப்படியாச்சும் ஒரு வாரம் ஊரில் இருப்பார்' என்ற நினைப்பே அவளுக்கு வானத்தில் மிதக்கின்ற உணர்வை தந்தது. 'காதல் ஒரு போதை' - இது கூட அவள் மாமா அடிக்கடி சொல்லும் வார்த்தை.



'மீனா மனுசனுக்கு இந்த போதை மட்டும் இல்லேன்னா இந்த உலகம், எப்படி தோன்றுச்சோ அப்படியேதான் இருந்திருக்கும். புல்லு, பூண்டு மாதிரி மனுஷனும் ஒரு செடியா மரமாத்தான் இருந்திருப்பான். காதல் தான் இந்த உலகம் வளரக் காரணம். இதையெல்லாம் நான் சொன்ன உனக்குப் புரியாது. நான் சில புக்ஸ் தர்றேன் படி! அப்பத்தான் உனக்கும் உலகம் தெரியும். இல்லாட்டி இந்த கள்ளிமந்தையமும் பழநியும் உங்க அப்பனும் தான் உலகம்னு நெனச்சிட்டிருப்ப.'

போனமுறை மாமா ஊருக்கு வந்த போது சொன்னது. இந்த முறை நிச்சயமா ஏதாச்சும் புக்ஸ் கொண்டு வந்து தருவார். மீனா மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.



'மாமா வந்ததும் எப்படியாச்சும் தங்கம் தியேட்டர்ல ஒரு படம் பார்க்கணும், நேத்து டிவில சமைச்சு காட்டின மாதிரி ஒரு மட்டன் கொழம்பு வச்சு அவர அசத்தணும். அப்புறம் மாமா சொன்னமாதிரி சேலையை நீட்டா மடிப்பு வச்சு, ஸ்டைலா கட்டணும். தலைக்கு எண்ணெய வச்சு வழிச்சு வாராம, மாமா சொன்ன மாதிரி வாரணும். கையில இத்தன கண்ணாடி வளையில மாட்டாம, மாமா சொன்ன மாதிரி ஒரே ஒரு வளையல சிம்பிளா மாட்டணும். நெத்தியில் இத்தன பெரிய சாந்து பொட்டு வைக்காம சின்னதா ஸ்டிக்கர் பொட்டு வைக்கணும். இன்னிக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்க்குப் பழநிக்குப் போகும் போது, இதெல்லாம் மறக்காம வாங்கிட்டு வரணும்.' அடுப்பில் வைத்த குழம்பு வற்றி அடிப்பிடித்த நாற்றம் மீனாவின் கனவைக் கலைத்தது.



-cut-



காட்சி - 76

இரவு/இன்டீரியர்

மும்பை ஹோட்டல் தாஜ்லேண்ட் எண்ட்



ஹோட்டல் தாஜ்லேண்ட் எண்ட், ரூம் நம்பர் 207-ன் சுவர்கள் வெட்கத்தில் தலை குனிய முடியாமல் நிமிர்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. ராகவன், திபீகாவின் திருவிளையாடல்கள் வாத்ஸாயனாரின் படைப்பையும் விஞ்சி நின்றது. ராகவனின் இந்த இறுக்கமும் உருக்கமும்தான் தீபீகா அவனை உடும்புப் பிடியாக பிடித்திருக்க வைத்திருந்தது. ஒவ்வொரு முறையும் முதல் முறையாக அவளை பார்ப்பது போல்தான் இருக்கும். அவனின் ஒவ்வொரு அணுகுமுறையும். 'இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம். ஒன்றை வருடங்களாகி விட்டது, இந்த உறவுக்கு. ஆனால் இன்னும் ஒரு இன்ஞ் கூட அன்பு குறையாமல், ஆசை தளராமல் நடந்து கொள்கிறானே ராகவ், ரியலி ஐ யம் ஸோ லக்கி.' தீபிகா மனதால் குளிர்ந்தாள்; சிலிர்த்தாள்.

'எல்லாம்' முடிந்ததும் அவன் மார்பில் தலை வைத்து அவன் தாடையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி, "ராகவ் நாம எப்பவும் இப்படியே இருப்போமில்ல. உன்னோட லவ், அஃபெக்ஷன் தான் இந்த உலகத்துலயே எனக்கு பிரிஸியஸ். நான் சம்பாதிக்கிற இந்த பணம், புகழ் எல்லாம் எனக்கு எப்பவும் நிம்மதியக் கொடுத்ததில்லை. இந்த நிமிஷம் உங்க கூட இவ்ளோ அன்னியோன்யமா இருக்கேன்ல... இதுதான் எனக்கு நிம்மதி, இதுதான் எனக்கு சந்தோஷம். இது எனக்கு நிரந்தரமா வேணும் ராகவ்... ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்."



தீபீகா பேசப் பேச, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே "நீயில்லாத ஒரு வாழ்க்கைய என்னால கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியாது தீபு. நீ என் தேவதை, என் வாழ்க்கையோட வரம்," என்றான் கண்களில் தேக்கிய அன்புடன்.



"ராகவ், இது நீ பண்ற படத்தோட டயலாக் இல்லியே," என்று அவள் கேட்க, அணைப்பில் மறுப்பை சொன்னான்.



-cut-



காட்சி - 17

பகல்/எக்ஸ்டீரியர்

ஹீரோயின் வீடு



மாமா ஊருக்கு வந்து விட்டு போன நினைவுகளில் திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓட்டிக் கொண்டிருப்பதிலேயே தன் நாட்களை கழித்தாள் மீனா.



'மீனா ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ சாரதிராஜா சார்கிட்ட அஸிஸ்டெண்டா ஜாயின் பண்ணிட்டேன். கெடைக்கிற காசுல வாடகைக்கு ஒரு வீடு மட்டும் பார்த்துட்டு உன்ன வந்து கூப்பிட்டுப் போயிடுறேன். உங்கப்பாகிட்ட முறைப்படி பொண்ணு கேட்டா தர மாட்டார். அதெல்லாம் நடக்குற காரியமில்ல. உங்கப்பாவ பொறுத்தவரைக்கும் மாச சம்பளம் வாங்குறவன் மட்டும்தான் உசத்தி, புத்திசாலி பொழைக்கத் தெரிஞ்சவன். மத்தவனெல்லாம் கூமுட்டை. அந்தாளுகிட்ட வந்து நா பேசி வெட்டுக்குத்துல முடியறதுக்குப் பதிலா, என்ன நம்பி நீ வா, நான் ஒரு ரெண்டு படம் அஸிஸ்டெண்டா பண்ணிட்டு நிச்சயமா தனியா படம் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் நீ மகாராணியாட்டம் இருப்ப. நீ என்னை முழுசா நம்பினா என்னோட வா, உங்கப்பாவுக்குப் பயந்தா உங்க வீட்டுலய, தினமும் சோறாக்கி குழம்பு வச்சு, ஆட்டுக்குத் தீவனம் போட்டு பழநிக்கு போயி டைப்ரைட்டர 'லொட்டு லொட்டு'னு தட்டுகிட்டு காலத்த கழிச்சிடு. ஆனா ஒண்ணு, நீ இல்லாத வாழ்க்கை பொணத்துக்கு சமமான வாழ்க்க. அத மட்டும் புரிஞ்சுக்கோ'



மாமா கண்ணீர் மல்க கைகளை பிடித்துக் கொண்டு குண்டு மல்லித் தோட்டத்தில் பேசிய வார்த்தைகளை பள்ளிக் கூட பிள்ளைகள் தமிழ் செய்யுளை வாய் விட்டு கத்தி கத்திப் பிடித்து மனப்பாடம் செய்வது போல் மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள். திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளுடனேயே வாழ்ந்ததாலோ என்னவோ தீர்க்கமாக முடிவு எடுத்தாள்.



இந்த விறகு அடுப்பு வேண்டாம். ஆட்டுப் புழுக்கை கூட்டி அள்ளும் வேலை வேண்டாம். லொடலொட டைப்ரைட்டிங் வேண்டாம். என் மாமா மட்டும் போதும். பச்சை விறகை அடுப்பில் வைத்து ஊதி ஊதி அது எரியாமல் புகை மட்டும் பொங்கி எழுந்த தருணத்தில் உறுதியாக முடிவெடுத்தாள்.



-cut-



காட்சி - 78

பகல்/எக்ஸ்டீரியர்

சென்னை ஏர்போர்ட்



தீபீகா ராகவனின் இரு கைகளுக்குள் தன் கையை பொத்தி வைத்துக் கொண்டாள். "ராகவ், என்னால ஹோட்டல்ல இருக்க முடியல. தனியா ஃபிளாட் எடுத்து இருக்கேன். அப்பத்தான் நீயும் ஃபிரியா வந்து போகலாம். இல்லாட்டா மீடியாகாரன் எவன் கண்ணுலயாவது பட்டுட்டா... இந்த ஊருக்கே நாமதான் சப்பி சாப்புடுற சாக்லேட்டாயிடுவோம். உன் மேனேஜர்கிட்ட சொல்லி அண்ணாநகர் இல்லாட்டா போயஸ் கார்டன் பக்கமா ஒரு ஃபிளாட் பாக்கச் சொல்லு. ப்ளீஸ். உன்ன ஒரு நாள் கூட என்னால மிஸ் பண்ண முடியாது."



தீபீகா வார்த்தைகளை அடுக்க அடுக்க ராகவன் அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவர்கள் வந்த ஃபிளைட் சென்னையை தொட்ட சில நிமிடங்களில் தனிக்குடித்தன முயற்சியின் வெற்றிக் கதவு திறந்தது.



-cut-



காட்சி - 18

பகல்/எக்ஸ்டீரியர்

ஹீரோ வீடு



வடபழனி பஸ் ஸ்டண்ட் ஐயங்கார் பேக்கரிக்குப் பின்புறம்... நான்கு வீடுகள் கொண்ட ஒண்டிக் குடித்தனத்தில் புதுப் பெண்ணுக்கு உரிய வெட்கத்தையும் மஞ்சளையும் சேர்த்து பூசிக் கொண்டிருந்தாள் மீனா.



"இது கள்ளிமந்தையம் இல்ல, சென்னை. இப்படி மஞ்சள் பூசுறத விடு" - மாமாவின் வார்த்தைகளை கட்டளையாக நினைத்தாள். மாமாவுடன் இரண்டு முறை மெரினா பீச்சுக்கு போனாள். கடலில் சின்ன குழந்தையைப் போல் விளையாடினாள். ஆனால் மாமா கடலை பார்த்து எந்த வித குதூகளம் காட்டாமல் இருந்தது மீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.



"ஏன் மாமா," என்ற கேள்விக்கு "அடி போடி, ஆறு வருஷமா இதே கடலைத் தான் பாக்குறேன்," என்ற பதிலில் ஒரு சலிப்பு தெரிந்தது. மூன்றாவது முறையாக மீனா மாமாவுடன் மெரீனாவுக்கு வந்த போது ஐந்து மாத கர்ப்பிணி! அவள் மாமாதான், அவளுக்கு தாயும் தந்தையுமாக இருந்து கவனித்தான். அடி பைப்பில் தண்ணி அடிக்க விடாமல், பம்ப் ஸ்டவ்வில் கிடந்து கஷ்டப்பட்டு சமைக்க விடாமல் எல்லா வேலைகளையும் செய்து வைத்து விட்டு வேலைக்குப் போனான். அவனுடைய அன்பும் கரிசனமும் அவளை இன்னும் இன்னும் அதிகமாய் காதலிக்க வைத்தது.



-cut-



காட்சி - 79

இரவு/இன்டீரியர்

ஹீரோயின் 2 ஃபிளாட்



ராகவை தீபீகா பார்த்த பார்வையில் ஆச்சர்யம் அதிர்ச்சி, ஆசை, காதல் அத்தனையும் மெத்தெனக் கொட்டிக் கிடந்தது. ஆறேழு லட்சம் விலையில் வைர நெக்லஸை அவன், அவள் கழுத்தில் மாட்டிய போது 'உலகின் நெம்பர் ஒன் காதலர்கள் நாம்தான் ராகவ்' என்று கத்த வேண்டும் போலிருந்தது தீபீகாவுக்கு. கத்த முடியாததால், அதை முத்தமாகக் கொடுத்தாள்.



"ராகவ் இந்த நிமிஷம் அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு. அத்தன சந்தோஷம் ராகவ்" என்று அவள் எந்த ஆல்கஹாலும் சாப்பிடாமல் உளற, "உலகத்துல எந்த பொம்பளையும் இந்த டயலாக்கை சொல்லாம இருக்க மாட்டீங்களா," என்று அவன் சொன்ன போது... தீபீகா 'அவன்' பற்றியும் ராகவ் 'அவள்' பற்றியும் ஒரு முறை ஒரு கணம் நினைத்துக் கொண்டார்கள்.



-cut-



காட்சி - 25

பகல்/இன்டீரியர்

அரசு மகப்பேறு மருத்துவமனை



கோஷோ ஆஸ்பத்திரியில் மீனா இரட்டைக் குழந்தைகளுடன் படுத்திருந்த போது, 'இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி' என்று நினைத்துக் கொண்டாள். மீனாவின் காலடியில் அவள் மாமா உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தான். இராப் பகலாக தனி ஆளாக நின்று பிரசவ அறைக்கும் வார்டுக்கும் அலைந்த அலைச்சல் அவனை உட்கார்ந்து கொண்டே தூங்க வைத்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்ததும் பக்கத்து வீட்டு அம்மா ஆரத்தி எடுத்துக் கொண்டே "உன் புள்ளைங்க பிறந்த நேரம், நீ எங்கயோ போகப் போற," என்று சந்தோஷமாக சொன்ன நேரம் பலித்தது..



மீனாவின் மாமா தன் லட்சியத்தின் முதல் படியைத் தொட்டாள். தன் கனவில் உருவாகி வைத்திருந்த வெற்றிகள் ஒவ்வொன்றும் அவனை தூக்கி வைத்துக் கொண்டாடின. வெற்றியின் வாசம் வடபழனி ஒண்டிக் குடித்தனத்திலிருந்து ஆர்.ஏ.புரத்துக்கு ட்ரிபிள் பெட்ரூம் ஃபிளாட்டுக்கு, சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறினாள். கைகளில் டேட்டூ போட்டுக் கொண்டாள். உடம்பு குறைய ஜிம் போனாள். கண்ணாடியில் பார்க்கும் போது 'ஆஹா எத்தனை ஸ்மார்ட்டா மாறிட்டோம்' என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டாள். இப்போதெல்லாம் யாரிடமும் பேசினாலும் 'ஆக்சுவலி' என்றுதான் ஆரம்பிக்கிறாள். 'யாயா, இன்ட்ரஸ்டிங், கொயட் குட், அன்பிளீவபிள்' என்ற இங்கிலீஷ் வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறாள். மனம், 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் மீனா' என்றது. கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு வரைதான் இந்த சந்தோஷம் நீடித்திருந்தது.



-cut-



காட்சி - 80

முப்பொழுதும்/எல்லா இடங்களிலும்

ஹீரோ வீடு



இப்போதெல்லாம் மீனாவின் அழகான கண்களில் நிலையான மென் சோகம் வன்முறையாக குடிபுகுந்து விட்டது. தமிழ் பேப்பரைத் திருப்பினால், 'இயக்குநர் ராகவன், தீபீகா காதல்'. இங்கிலீஷ் பேப்பரைத் திருப்பினால் அங்கும் அதே செய்தி! வாரப் பத்திரிகையை புரட்டினால், ராகவ் - தீபீகா க்ளோசப் போட்டோஸ். 'இது, உண்மையா பொய்யா' என்று மாமாவை கேட்க முடியாது. வீட்டுக்கு வந்தால்தானே கேட்க முடியும்.



கல்யாணமான பத்து வருஷத்துல, ஷூட்டிங் முடிஞ்சா வீடு, வீடுதான் பழியாக் கிடப்பார். இந்த ரெண்டு வருஷமா ஏற்தோ கெஸ்ட் மாதிரி ஒரு மணிநேரம் ரெண்டு மணிநேரம் அப்பப்ப வந்துட்டு போறார். "மாமா... மாமா... மாமா... என்று காதலால் கசிந்துருகி, ஊரை விட்டு, உறவை விட்டு நீயே கதி என ஓடி வந்தேன். நீயும் அத்தனை காதலோடு, அன்போடு என்னை நேசித்தாய். உன் காதல் சுமை தாங்காமல் சில சமயங்களில் பெருமூச்சு விட்டிருக்கிறேன் மாமா. என்னிடம் கொஞ்சியும் கெஞ்சியும் பேசிய அதே வார்த்தைகளை, என்னிடம் செய்த அந்த தீராத விளையாட்டுகளை அவளிடமும் தொடர்ந்து கொண்டிருக்கிறாய். நீ கொடுக்கும் பணம், நீ கொடுக்கும் வசதிகள், நீ கொடுக்கும் அந்தஸ்து என்னை, உன்னிடம் கேள்வி கேட்கும் தைரியத்தை குலைக்கிறதா மாமா!"



மீனா கொஞ்ச காலமாய் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள். பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஒட்டுதலில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு இதே மாமாவுடன் காதல் வந்த போதும் இதே நிலைதான். அதே மாமாவுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் வந்ததும் இதே நிலைமைதான்.!



இந்த மாமாவுக்காகத்தானே அப்பாவுக்குத் தெரியாமல் ஆட்டுக்குட்டிகளை வித்து ஆயிரம் ஆயிரமாய் அனுப்பிருக்கிறேன். கல்யாணத்துக்கு ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி அம்மை வந்து ரொம்ப சீரியஸா இருந்தப்ப.. கள்ளிமந்தையத்துலயிருந்து பழநிக்கு நடந்தே பாதயாத்திரை போனேன். ஒருமுறை அவசரமாக பணம் வேணும்னு போன் செய்த போது கழுத்தில் இருந்த 5 பவுன் செயினில் 8 கண்ணியை மட்டும் வெட்டி, வித்து பணம் அனுப்பினேன். அதெல்லாம் உங்களுக்கு எப்படி இனி மனசுல இருக்கும் மாமா?



மாமாவை கேள்வி கேட்க முடியாது. கேட்டால் என்ன சொல்வார்? "மீனா இன்னும் நீ அந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியிலயே இருக்க, அந்த மனச மாத்து, அதுதான் நல்லது" - இதைத் தவிர மாமாவால் வேறு எதுவும் சொல்லவும் முடியாது; செய்யவும் முடியாது. அப்பா அம்மாவிடம் போய் கம்ப்ளெயிண்ட் பண்ணவும் முடியாது. கள்ளிமந்தையமாக இருந்தால் ஊரைக் கூட்டி நியாயம் கேட்கலாம்... இங்கு யாரை கூட்டி நியாயம் கேட்பது?



'இந்த நிமிடம் கூட மாமா ஊட்டி ஷூட்டிங்கில் தீபீகாவுடன்தான் இருக்கிறார் என்னிடம் பேசிய அந்த வார்த்தைகள், என்னிடம் விளையாடிய அந்த திருவிளையாடல்கள் அவளிடமும். ஐயோ... ஐயோ கடவுளே இதிலிருந்து எனக்கு விமோசனமே இல்லையா' மீனாவின் புலம்பல்கள் அவள் மூளையை, புத்தியை, உணர்வுளை கரையானாக அரித்தன.



'என்னிடம் பேசிய அதே வார்த்தைகள், என்னிடம் விளையாடிய அதே விளையாட்டுகள்' மீனா இப்படி நினைக்க நினைக்க அவளுக்குள் இருந்த அழகான, குணமான, பண்பான மீனா உருவமிழக்க ஆரம்பித்தாள். இந்த சிந்தனையின் கொடுமையிலிருந்து இவர்கள் இருவரும் தரும் உளவியல் வன்முறையிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். எனக்கு விடுதலை வேண்டும்.. எனக்கு விடுதலை வேண்டும்' மீனா மனதுக்குள் கத்த ஆரம்பித்தாள். அதையே கத்திக் கொண்டிருந்தாள்.



no cut... continiues



காட்சி - 81

முப்பொழுதும் /எல்லா இடமும் 

ஹீரோ வீடு



"நான் உங்ககிட்ட பேசுறதுல உங்களுக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லியே மதி? டைரக்டர் சார் கூட நீங்க ரெண்டு மூணு தடவ எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க தெரியுமா? என்ன ஒரு தடவ உங்க பைக்ல ஸ்பென்ஸர் பிளாசா கூட்டிட்டு போயிருக்கீங்க தெரியுமா? உங்க டைரக்டர் சொல்லித்தான். ஆக்சுவலி, ஒரு டைம் நாம லேண்ட்மார்க் போயிருக்கோம் தெரியுமா? இட் வாஸ் கொயட் இன்ட்ரஸ்டிங் மதி..."



மீனா இப்போதெல்லாம் இடைவெளி இல்லாமல் மொபைல் போனில் பேச ஆரம்பித்திருக்கிறாள்!



தினம்தினம் ராகவ் - தீபீகா க்ளோஸப் போட்டோ ஏதோ ஒரு பத்திரிகையில் வந்து கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment