Thursday, December 15, 2011

பாலை–திரை விமர்சனம்-2300 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கை

தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை..தமிழர்கள் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு உண்ண, தூங்க மட்டுமே தெரியும் என்று தான் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் இங்கு சில மக்கள் வாழ்ந்தார்கள் அவர்களுக்கு உடுத்துவதற்கு உடை செய்ய தெரியும், குடிசை வீடு கட்டி வாழ்ந்தார்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை தெரியும் எனும் விளக்கத்துடன் படம் ஆரம்பமாகிறது.


”பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்” என காயம்பு எனும் பாலை நிலத்து பெண் ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லபடுகிறது. செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் மக்கள் ஒரு வறண்ட பகுதியில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அமைதியாய் போய் கொண்டிருந்த அவர்களது வாழ்வில் மீண்டும் புயலாய் பிரச்சனை கிளம்புகிறது. பலமானவர்கள் பலகீனகாரர்களை அடித்தால் அமைதியாக தான் போவார்கள், பலகீனமானவர்கள் பலம் பெற்றால் பலமானவர்களுடன் சண்டை போடுவார்கள் அதைபோல சொந்த மண்ணிலிருந்து விரட்டியவர்களின் மாட்டு வண்டி பாலை நிலத்தை கடக்கும் போது அங்கிருக்கும் இளைஞர்கள் அதை மடக்குகிறார்கள், அதில் ஒருவன் பலி ஆகிறான்.
இந்த பிரச்சனை பெரிதாக கூடாது என்று பாலை நிலத் தலைவன் சமாதானம் பேச போகும் இடத்தில் வளன் எனும் இளைஞன் அடிமையாக்கப்பட்டு மற்றொரு இளைஞன் கொல்லப்படுகிறான். சமாதானம் சண்டையில் முடிந்து பிரச்சனை பெரிதாகிறது. பாலை நிலத்து மக்கள் வளனை காப்பாற்றினார்களா என்பது தான் மீதி கதை.

2300 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கை சூழல் என்பதால் படப்பிடிப்பு இடங்கள் அனைத்தும் வெட்டவெளியிலும் காடுகளிலும் செம்மண் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. உணவுக்காக மீன் பிடிப்பதும், மாட்டை கொன்று அதன் கறியை பயன்படுத்துவதும் அப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் தமிழர்கள்.உடன்போக்கு, வந்தேறிகள் என்றெல்லாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிற தமிழர்கள் மறந்து போன தமிழ் வார்த்தைகளை நினைவூட்டுகிறது.

பழங்கால படங்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவில் சிரத்தை காட்டவேண்டி வரும், அதை செய்து இருக்கிறார் அபிநந்தன் இராமனுஜம்.. ஏ கொல்லரே, மாயமா பாடல்கள் இசை அமைப்பாளர் வேத் ஷங்கரை பாராட்ட வைக்கிறது. (ஏ.ஆர்.ரகுமானிடம் இசை பயின்றவராமே…!!!)

காயம்புவாக வரும் ஷம்முவை தவிர மற்ற அனைவருமே புது முகங்கள் தான். குறிப்பாக வளனாக வரும் சுனிலின் நடிப்பு பாராட்டுக்குரியது.

பத்து அடி தூரத்தில் வருவது யார் என்று தெரியாமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் எத்தனை பேர் வருகிறார்கள் என்று தரையில் காது வைத்து காலடி சத்தத்தால் கண்டு பிடிப்பது , நேரத்தை கணக்கிட செம்மண்ணால் ஆன தொட்டியில் தண்ணீர் ஊற்றி பார்ப்பது, போருக்கு தீயை பயன்படுத்துவது, அனைவரும் கூட்டமாக உட்கார்ந்து பானம் குடிப்பது , தொலைதொடர்பு இல்லாத காலத்தில் புகையின் மூலம் பேசிக்கொள்வது என ஒவ்வொரு விசயத்தையும் தேடி தேடி செய்து இருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். பெயருக்கு ஏற்றார் போல் தமிழ் உணர்வை பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment