ஆக, மின்னல் என்னும் மின்சாரத்தை நம் கண்களால காண முடியும், ஆனால் அது மிகவும் ஆபத்தானது! இல்லீங்களா?!
மின்னல், மின்சாரம், நரம்புகள்; ஒரு தொடர்பு!
மின்னல் எனும் இயற்கை மின்சாரத்தை பார்க்க முடியுமென்றால், மனிதனால் உருவாக்கப்பட்டு, நம் வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களில் ஒளி உண்டாக்கும் மின்சாரத்தை நம்மால பார்க்க முடியுமா? கண்டிப்பா முடியாது. ஏன்னா, கட்டிடங்களுக்குள் இருக்கும் மின்சாரம், நம் பாதுகாப்பிற்க்காக ‘வயர்’ என்னும் வேதியல் பொருளால் சுற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது!
நம் உடலுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான நரம்புகளுக்குள்ளும் ஒரு வகையான மின்சார சமிஞ்ஞைகள்/தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. நம் வீட்டினுள் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நம்மால் எப்படி பார்க்க முடிவதில்லையோ, அதே போலத்தான், நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் நரம்பு மின்சாரத்தையும் பார்க்க முடியவில்லை விஞ்ஞானிகளால்!
இதுவரைக்கும்தான் பார்க்க முடியல, ஆனா இனிமே பார்க்க முடியும் அப்படீங்கிறாங்க ஜெர்மனி நாட்டின், ஹெய்டெல்பெர்க் நகரிலுள்ள, மேக்ஸ் ப்ளான்க் மருத்துவக் கல்வி நிறுவனத்தைச் (Max Planck Institute for Medical Research) சேர்ந்த விஞ்ஞானிகள்! இந்த ஆய்வின்மூலம், நரம்புகளுக்குள்ளே நிகழும் பல்வேறு செயல்பாடுகளை இனி கண்கானிக்க முடியும் என்கிறார்கள்?! அடேங்கப்பா…..!
நரம்பியல் ஆய்வுத்துறையின் ஒரு மைல்கல்லாக கருதப்படும் இந்த ஆய்வை ஸ்விட்சர்லாந்து, மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து சாத்தியப்படுத்தியுள்ளனர் ஜெர்மனிய ஆய்வாளர்கள்!
இந்த ஆய்வினால, நமக்கு என்னப்பா நன்மைன்னுதானே கேக்க வர்றீங்க? அதப் பத்திதான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப் போறோம். என்ன, நம்ம நரம்புகளுக்குள்ளே ஒரு சுற்றுலா போய்ட்டு வருவோம் வர்றீங்களா…..
பச்சோந்தி புரதமும் கண்ணடிக்கும் நரம்புகளும்!
நரம்புகளுக்கு மத்தியில் ஏற்படும் சமிஞ்ஞைகள், தகவல் தொடர்புகளாலேயே நம் பல்வேறு உணர்வுகள், உணர்ச்சிகளாக உருவெடுக்கின்றன. இந்தத் தகவல் தொடர்பானது, action potentials என்னும், சில தாது உப்புகளின் ஒரு வகையான செயல்பாடுகளால்தான் சாத்தியப்படுகிறது. இந்தச் செயல்பாட்டினில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தாது உப்பு நம் எலும்புகளில் உள்ள கால்சியம் (calcium). ஒரு நரம்புத் தொடர்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய, இதுவரை நரம்பு மண்டலத்துக்குள் அல்லது அனுவுக்குள், எலக்ரோட்ஸ் என்னும் ஒரு வகை மின்சார கம்பிகளை வைத்தே முயற்ச்சித்து வந்தனர் விஞ்ஞானிகள்.
இம்முறையினால், மின்சாரக்கம்பிகள் பொருத்தப்படும் தசைகளும், அனுக்களும் இறந்து விடுவதுண்டு. இதனால், மேற்கொண்ட முயற்ச்சியில் பலனடைவது மிகவும் கடினம். ஆனால், முதல் முறையாக, இந்த பிரச்சினைகள் ஏதுமின்றி தசைகளில், அனுக்களில் ஏற்படும் நரம்புத் தொடர்பினை காண, பச்சோந்தி புரதம் என்னும் ஒரு வகையான புரதத்தை கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனிய விஞ்ஞானிகள்!
அதாவது, action potentials என்னும் நரம்புத் தொடர்பின் ஆரம்பத்தை குறிக்கும் ஒரு செயல்பாட்டினை செய்வது கால்சியம் என்னும் தாது. இந்தத் தாதுப்புடன், பளபளக்கும் வண்ணத்தைக் கொண்ட fluorescent calcium indicator protein, என்னும், ஆய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வகை புரதங்களை இணைத்தால், நரம்புத் தொடர்பு ஏற்படும்போது நீள வண்ணத்திலிருந்து மஞ்சள் வண்ணத்துக்கு மாறும் தன்மை கொண்டவை இப்புரதங்கள். இத்தகு வண்ண மாற்றுத் தன்மை கொண்ட புரதங்கள் என்பதால் இவற்றை பச்சோந்தி புரதம் (cameleon protein YC3.60) என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
கண்ணடிக்கும் நரம்புகளால் கண்கூடாகும் நியாபகங்கள், உணர்வுகள்!
இவ்வகை பச்சோந்தி புரதங்களை எலியின் மூளைக்குள் செலுத்தி, அந்த சோதனை எலிகளுக்கு ஒரு வகையான வாசனையுடன் கூடிய காற்றை சவாசிக்கக் கொடுத்திருக்கிறார்கள். எலிகள் சுவாசிக்கத் தொடங்கியவுடன், சுவாசத்துக்கு காரணமான மூளைப்பகுதியின் நரம்புகள் பளபளக்கத் தொடங்கினவாம். ஆக, எலிகள் சுவாசிப்பதை திட்டவட்டமாக, குறிப்பிட்ட மூளைப்பகுதியின் மூலம், இவ்வகை கண்ணடிக்கும் புரதங்களால் காண முடியும் என்பதை, உலகில் முதல்முறையாக நிரூபித்துக் காட்டியுள்ளார் விஞ்ஞானி மசாஹிர் ஹாசன்!
இப்புதிய முறையின் துணையுடன், ஒரு மனிதனின் மூளைக்குள் உருவாகும் பல வகையான உணர்வுகளை சுலபமாக படிக்க, கண்கூடாக பார்க்கவும் முடியும் என்கிறார் ஹாசன். உதாரணமாக, மூளைக்குள் உருவாகும் நியாபகங்கள், சுவாசம், கோபம், சோகம் என பல்வேறு வகையான உணர்வுகளின் தன்மையை, சம்பந்தப்பட்ட மூளைப்பகுதியை இனி குறிப்பிட்டு உற்று நோக்கி, ஆய்வு செய்ய முடியும் என்கிறார். அப்படிப்போடு!
நரம்பியல் துறையில் ஒரு புதிய புரட்ச்சியை ஏற்படுத்தியுள்ள இப்பச்சோந்தி புரதம், முன்பு ஆய்வு செய்ய முடியாத பல்வேறு மூளைச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இனி சுலபமாக ஆய்வு செய்து, பல முன்னேற்றங்களை காண முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
ஒளியின் துணைகொண்டு ஒரு குறிப்பிட்ட நரம்பியல் நிகழ்வை, மிகத்துள்ளியமாக ஆய்வு செய்ய உதவும் இப்புதிய முறையினால், ஒரு மனிதனின் மூளைக்குள் நியாபகங்கள் எப்படி உருவாகின்றன, அவை எப்படி அழிந்து போகின்றன என்பதை ஆய்வு செய்ய முடியும். உதாரணமாக, வயதாகும்போது ஏற்படும், அல்ஷெய்மர்ஸ் நோய் (Alzheimer’s disease), பார்க்கின்சன்ஸ் நோய் (Parkinson’s disease) மற்றும் ஷீஷோஃப்ரீனியா (schizophrenia) போன்ற நியாபகங்களை சிறுக சிறுக அழித்துவிடக்கூடிய தன்மை கொண்ட நோய்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்கிறார் ஹாசன்!
இதுக்குப் பேருதான் விஞ்ஞானம் போலிருக்கு! என்னென்ன அதிசயங்கள்லாம் நடக்குது பாருங்க ஆய்வுலகத்துல!!
|
No comments:
Post a Comment