இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:தினசரி உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கறி, பழங்கள் இருதயநோய்/மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய உபாதைகள் ஏற்படுவதை குறைப்பதோடு, உடல் நலக்குறைவு மற்றும் கிருமித்தொற்றுகள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன என்கிறது மருத்துவ உலகம்! இதுவே காய்கறி மற்றும் பழங்களின் இன்றியமையாமைக்கு சான்று!
ரத்தக்கண்ணீர் அப்படீன்னு நம்மகிட்ட யாராவது சொன்னா, நமக்கு உடனே நியாபகம் வர்றது ரெண்டு விஷயங்கள். ஒன்னு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் நடிச்ச “ரத்தக்கண்ணீர்” திரைப்படமும், அந்தப் படத்துல அவர் பேசி-நடிச்சு, தமிழகத்தின் பட்டி-தொட்டிகளிலெல்லாம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் “அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா” அப்படீங்கிற அழியா வசனமும்தான்!
எம்.ஆர்.ராதா-ரஷீதா கட்டூன்-ரத்தக்கண்ணீர், ஒரு தொடர்பு!
ஆனா, இனிமே உங்ககிட்ட ரத்தக்கண்ணீர்னு யாராவது சொன்னாங்கன்னா, எம்.ஆர்.ராதா அவர்களோட சேர்த்து, “ரஷிதா கட்டூன்” அப்படீங்கிற பேரும், “ஹீமோலேக்ரியா” அப்படீங்கிற மிக மிக அரிதான கண் சம்பந்தப்பட்ட மருத்துவக்குறைபாடும் உங்களுக்கு நியாபகம் வரும் (வரனும்?)!
என்னங்க, நல்லா தெரிஞ்ச ரத்தக்கண்ணீர் படத்தைப்பத்தி சொல்லிட்டு, ஹீமோலேக்ரியா, மருத்துவக்குறைபாடு அது இதுன்னு சொல்லி பீதியக் கெளப்புறானேன்னு யோசிக்கிறீங்களா?
உண்மைதாங்க, இதுவரைக்கும் ரத்தக்கண்ணீர் அப்படீங்கிற வார்த்தையை கேட்டவங்க (தமிழர்கள்), ஒருத்தரோட அளவுக்கதிகமான சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தையாகத்தான் அதை பார்த்து/பயன்படுத்த/புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனா, சமீபத்தில் லண்டன் செய்தித்தாளான “த சன்”னில் வெளியான ஒரு மருத்துவச் செய்தியின்படி, ரஷீதா கட்டூன் என்னும் இந்தியப் பெண் ஒருவருக்கு உண்மையாகவே கண்களில் ரத்தம்/ரத்தத்துடன் கூடிய கண்ணீர் வழிவதாக தெரியவந்துள்ளது! ஆக, ரத்தக்கண்ணீர் படத்துல மட்டுமில்ல, உண்மையாவே இருக்கு!!
இந்தச் செய்தியை படிச்சவுடனே கொஞ்சம் பகீர்னுதான் ஆகிப்போச்சு. ஏன்னா, இம்மாதிரியான இயற்கை/உடலியல் நிகழ்வு சாத்தியமில்லைன்னுதான் இதுவரைக்கும் நெனச்சிக்கிட்டு இருந்தேன். அனேகமா, உங்கள்ல பலரும் அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருந்திருப்பீங்க?! ஆனா, ஒருவரால் ரத்தக்கண்ணீர் வடிக்க முடியும், இருந்தாலும் இது மிக மிஅக் அரிதான ஒரு மருத்துவக்குறைபாடு அப்படீன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. வாங்க அதைப்பத்தி இன்னும் கொஞ்சம் விவரமா தெரிஞ்சிக்குவோம்…..
ரத்தக்கண்ணீர்/ஹீமோலேக்ரீயா!
கண்களில் ரத்தம் கலந்த கண்ணீர் ஏற்படுவதற்க்கு “ஹீமோலேக்ரீயா” என்னும் மருத்துவக்குறைபாடுதான் காரணம். அதாவது, “கஞ்சக்டீவே” (conjunctivae) என்னும் கண் விழியைச் சுற்றியுள்ள ஒரு மெல்லிய தோல் பகுதியில் ஏற்படும் காயம் அல்லது, “கஞ்சக்டிவிடிஸ்” (conjunctivitis) என்னும் கண் சம்பந்தப்பட்ட ஒருவகை கோளாறு காரணமாகவும் கண்களில் ரத்தம் அல்லது ரத்தத்துடன் கலந்த கண்ணீர் வழிவதையே ஹீமோலேக்ரீயா என்கிறார்கள் மருத்துவர்கள்!
இது தவிர ஹீமோலேக்ரியாவுக்கு வேறு சில காரணங்களும் உண்டு என்கிறார் அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக்கழக மருத்துவர் ராச்சல் வ்ரீமேன் அவர்கள். உதாரணமாக,
- சில வகை புற்றுநோய்கள்
- ரத்தக்கசிவு குறைபாடுகள்
- கண்ணீர் நாளத்தில் ஏற்படும் காயங்கள்
- காச நோய்
ஆனா, வேடிக்கை என்னன்னா, நாம மேலே பார்த்த எந்த மருத்துவக் குறைபாடு/காரணமும் இல்லாமலே, இந்தியரான ரஷீதா கட்டூனுக்கு கண்களில் ரத்தம் வடிகிறது அப்படீங்கிறதுதான்! அதுமட்டுமில்லாம, இப்படி ஒரு பிரச்சினை இருக்குறது தெரிஞ்ச மக்கள், ரஷீதாவுக்கு அன்பளிப்புகளும், புனிதமான ஒரு சில பொருள்களையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுசரி, இந்தியான்னா இப்படித்தான் இருக்கனும்?!
ஆனா, இதுல புரியாத புதிர் என்னன்னா, இப்படி ரத்தம் வடிவதால் தனக்கு எந்தவித வலியோ/பிரச்சினையோ இல்லை என்கிறார் கட்டூன்?! அதெப்படி கண்களில் ரத்தம் வடியும்போது ஒருவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம இருக்கும் அப்படீன்னு ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியல அப்படித்தானே? உண்மைதான். இருந்தாலும், ரஷீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்தவித குறைபாடும் இல்லை என்பதை உறுதிசெய்துள்ளார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் வ்ரீமேன், சில பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தின்போது கண்ணீரில் சிறிது ரத்தமும் கலந்திருப்பது இயல்பு என்கிறார். ஆனால், அத்தகைய பெண்களின் கண்ணீரானது முழுமையான சிவப்பு நிறத்தில் இருக்காது. மாறாக, கண்ணீரில் ரத்தம் கலந்திருப்பதே தெரியாது என்கிறார்.
இந்தியாவில் மற்றுமோர் ரத்தக்கண்ணீர் நிகழ்வு!
அது சரி, இம்மாதிரியான ரத்தக்கண்ணீர் நிகழ்வுகள் மருத்துவ உலகில் எந்த அளவுக்கு பரிச்சயம்? ஹீமோலேக்ரீயா/ரத்தக்கண்ணீர் என்பது மிக மிக அரிதான ஒரு மருத்துவக் குறைபாடுதான் என்றாலும், காரணமே இல்லாத ரத்தக்கண்ணீர் என்பது அதிசயம்தான் என்கிறார்கள். ஆனால், இதே அதிசயம் முன்பே ஒருமுறை இந்தியாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
கடந்த 1984 ஆம் ஆண்டு, இண்டியன் ஜேர்னல் ஆஃப் ஆஃப்தால்மாலஜி என்னும் மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், எந்தவித கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளும் இல்லாமலேயே, இந்தியப்பெண் ஒருவருக்கு கண்களில் ரத்தக்கண்ணீர் வழிந்ததாக பரபரப்பான ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு மயக்கம் மற்றும் தலைவலி பிரச்சினைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று!
இம்மாதிரியான ரத்தக்கண்ணீர் ஏற்படுவதற்க்கான காரணங்கள் இன்னதுதான் என்று திட்டவட்டமாக இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், மருத்துவர்களின் அனுமானப்படி ஹிஸ்டீரியா அல்லது மூளைக்கோளாறுகளுக்கும் ரத்தக்கண்ணீருக்கும் தொடர்வு இருக்கலாம் என்று கருதப்படுகிறது!மருத்துவர்களின் கருத்து இப்படீன்னா, ரத்தக்கண்ணீருடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள ரஷீதா கட்டூனுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறதாம்!
இருக்காதா பின்ன, ரத்தக்கண்ணீர் படத்துல, தன்னை ஏமாற்றிவிட்ட காதலியை எண்ணி எம்.ஆர்.ராதா சாதாரணமான கண்ணீர் வடிக்கும்போதே, அதைப்பார்க்குற நமக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமாப்போயிடுது! காரணமேயில்லாம, தினமும் கண்ணுல ரத்தக் கண்ணீர் வடிஞ்சா எப்படி இருக்கும்??
|
No comments:
Post a Comment