ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !
ஒரு காலம் இருந்தது.
18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு
மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம்.
இப்போது அப்படியே தலைகீழாகி
விட்டது நிலைமை.
சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே
என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை
கலைஞர் வேண்டும் சூழ்நிலை !
பொதுவாக ஜெயலலிதாவுடன் காங்கிரஸ்
கூட்டணி வைக்கும்
நிலை ஏற்படக்கூடாது என்பது
சிதம்பரம் அவர்களின் கருத்து.
விஜய்காந்துடன் சேர்ந்தால் –
ஜெயிப்பது நிச்சயம் இல்லாத நிலை
என்பதுடன் விஜய்காந்துடன்
நெருங்கி இருப்பவர்கள் ஜிகே வாசனும்,
இளங்கோவனும் என்பதால் அதுவும் சரிவராத நிலை.
எனவே காங்கிரஸ் கட்சிக்கு –
இருப்பதற்குள் சிறந்த வழி –
திமுக வுடன் கூட்டணி தொடர்வதே.
ஆனால், அதே சமயம்
திமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர வேண்டும். அதிக அளவு இடங்களில்
போட்டி இடுவதுடன்
ஒருவேளை ஜெயித்தால் –
தமிழ் நாட்டில் காங்கிரஸ் + திமுக கூட்டணி அரசும்
அமைய வேண்டும்.
அதற்கு வழி ?
தமிழ் நாட்டில் ராஜாஜிக்குப் பிறகு இது வரை
கலைஞர் தான் சாணக்கியராக இருந்தார்.
தன் ராஜதந்திரத்தால் அனைவரையும் ஆட்டி வைத்தார்.
இப்போது, கலைஞரை மிஞ்சக்கூடிய
அடுத்த சாணக்கியராக உருவெடுத்திருப்பது -
ப. சிதம்பரம் அவர்கள்.
நாட்டில் உள்ள இத்தனை அரசியல்வாதிகளிலும்
ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றியோ,
ராஜாவைப் பற்றியோ
இதுவரை கருத்து எதுவும் சொல்லாத
ஒரே தலைவர் ப.சிதம்பரம் மட்டும் தான்.
அதே சமயம் இது பற்றிய
அனைத்து விவரங்களையும் அறியக்கூடிய நிலையில்
இருப்பவரும் அவர் ஒருவர் மட்டும் தான்.
(மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பதால்)
இன்று நீரா ராடியா டேப் மூலம்
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரம் நாடு பூராவும்
விஸ்வரூபம் எடுக்க மூல முதற் காரணமாக
இருந்தவர் யார் ?
எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் -இன்று
இந்த உரையாடல்கள் வெளிவரக் காரணமாக
இருந்தவர் இந்த நாட்டிற்கு பெரும் பணி
ஆற்றி இருக்கிறார் !
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களைப்
பதிவு பண்ண அனுமதி மட்டும் தான் நாங்கள்
(மத்திய உள் துறை அமைச்சகம்) கொடுத்தோம்.
மற்றபடி உள்துறை அமைச்சர்
(ப.சிதம்பரம் அவர்கள் ) கூறி நான் தான்
(உள் துறை செயலாளர் – ஜிகே பிள்ளை )
இந்த உரையாடல்கள் ஊடகங்களில்
கசியும்படி செய்தோம் என்று சிலர் கூறுவது தவறு -
- என்று இன்று (சனிக்கிழமை) மாலை
உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை அவர்கள்
செய்தி வெளியிட்டு உள்ளார்.
நாமும் நம்புவோம் -
“என் அப்பா குதிருக்குள் இல்லை” என்கிற
தமிழ்ப் பழமொழி அவருக்குத் தெரியாது என்று !!
|
No comments:
Post a Comment