(இதுல எதாவது மாற்றம் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்த்தீங்கன்னா, அதைப்பற்றிய சிறு விளக்கத்துடன் கூடிய ஒரு மறுமொழி அல்லது மின்னஞ்சலை padmaharij@gmail.com முகவரிக்கு கொஞ்சம் தட்டிவிட்டீங்கன்னா, மாற்ற முயற்ச்சி செய்யறேன். நன்றி!)
இனி நாம, இன்றைய 60 நொடி அறிவியலுக்குப் போவோம்…..
அறிவியல்: உணவுக்குழாய், மார்பகப் புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் ‘பெர்ரி’ பழங்கள்!
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பலவகையான மூலிகைத் தாவரங்கள், காய்கள், பழங்கள் பற்றி இதுவரைக்கும் நாம நெறைய படிச்சி, கேள்விப்பட்டு இருப்போம். அந்த வரிசையில, நமக்குக் கொஞ்சம் பரிச்சயமில்லாத பழங்களான 7 வகையான பெர்ரி பழங்கள் உணவுக்குழாய் (Oesophageal cancer) மற்றும் மார்பகப் புற்றுநோயைக் (Breast cancer) கட்டுபடுத்துவதாக, சமீபத்தில் அமெரிக்காவின் ஓஹையோ மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பழங்களின் பெயர்கள் பின்வருமாறு: கருப்பு, சிவப்பு மற்றும் நீல பெர்ரி (black raspberries, red raspberries, blueberries) ஸ்ட்ராபெர்ரி (strawberries) நோனி பெர்ரி (noni berries) அகாய் பெர்ரி மற்றும் நரி பெர்ரி [açai berries and wolfberries (also called goji berries)]. இந்த முடிவு எலிகளில் செய்யப்பட்ட சோதனையிலிருந்துதான். மனிதர்களில் அல்ல என்பதை நினைவில் கொள்க. ஆனால், பழங்கள் அதிகமான உணவுப்பழக்கத்தால் புற்றுநோய் வராமல் காத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவ உண்மை! மேலதிக தகவல்கள் இங்கே
மருத்துவம்: உடலின் குறைகளைக் காட்டும் ‘எச்சில் சோதனை’உடம்புல பிரச்சினை எதனால வருது, எப்படி வருதுன்னு கண்டுபிடிக்க இந்த 21-ஆம் நூற்றாண்டுல ஆயிரக்கணக்கான வழிகள் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, யாருக்கும் தெரியாதது என்னன்னா, அந்த வழிகள்ல எது சிறந்தது/ நம்பிக்கையானது அப்படீன்னுதான்! இப்படித்தான், எச்சில் மூலம் உடலின் எந்தெந்த ஹார்மோன்கள் சரியான அளவில் இல்லை என்பதை கண்டறிந்து, அதற்கேற்றார்போல் மருத்துவச் சிகிச்சைகளை சுலபமாக செய்துகொள்ள எச்சில் சோதனைன்னு ஒன்னு இருக்குதாம். அச்சோதனையின் முடிவுகளான Salivary hormone profiles என்னும் விவரத்தை நம் மருத்துவரிடம் கொடுத்தால், குறைபாடுகளுக்கேற்றவாறு அவர் மருந்து/சிகிச்சை மேற்கொள்ள முடியுமாம். இது பரவாயில்லன்னாலும், இதன் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக போதிய ஆய்வுகள் இல்லாமையால், மருத்துவர்கள் கொஞ்சம் குழப்பத்துடனே இதை அணுகுகிறார்களாம். ஆமா, இந்த மாதிரி எச்சில் சோதனையெல்லாம் நம்ம ஊருல இருக்குதுங்களா? மேலதிக தகவல்கள் இங்கே
தொழில்நுட்பம்: எண்ணைக் கசிவுகளை கண்டுபிடிக்க உதவும் அதிநவீன “க்ளைடர் ரோபாட்கள்”!
அமெரிக்க கடல்களில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு ராட்சத எண்ணைக் கசிவு உலகை கொஞ்சம் உலுக்கித்தான் விட்டது. அந்த எண்ணைக்கசிவுகளால் மனிதர்களுக்கு எத்துனை பிரச்சினைகள் ஏற்படுமென்று தற்போது சொல்ல முடியாது என்றாலும், நிச்சயம் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை! இதுல என்ன பிரச்சினை அப்படீன்னா, ராட்சத குழாய்களிலிருந்து கசிந்த எண்ணை கடலின் எந்தப் பகுதிக்கு, எவ்வளவு தூரம்வரை சென்றுள்ளது, இனி எந்தத் திசையில் செல்லும், இதனால் தண்ணீரின் தன்மை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கனும்னா, அதற்க்காக ஆகக்கூடிய பொருட்செலவு, மனிதசக்தி எவ்வளவுன்னு உங்களால யூகிக்க முடியும். ஆனா, இந்த எல்லாக் கேள்விகளுக்கும் உக்காந்த இடத்துல இருந்தே விடை கண்டுபிடிக்க (ஆதாங்க, இந்த நோகாம நோம்பு கும்பிடுறதுன்னு சொல்வாங்களே அப்படி!) ஒரு அட்டகாசமான ரோபாட்டை கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ( Rutgers University oceanographer Oscar Schofield). இந்த ரோபாட்டுக்கு ‘க்ளைடர் ரோபாட்’டுன்னு பேரு (Glider robots). தண்ணிக்குள்ள சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு மாதிரி வளைஞ்சி வளஞ்சுப் போயி, தண்ணீரோட வெப்பம், கலந்த எண்ணை அளவு இப்படி எத்தனையோ விஷயங்களை கண்டுபிடிச்சி, கணினிக்கு தானே அனுப்பியும் விடுமாம். நல்லாருக்குல்ல?! மேலதிக தகவல்கள் இங்கே
மர்மம்: மனித ஹார்மோன் சுரந்து “பெண்ணாக மாறிய” மரம்!விந்தை…..விந்தை…. விந்தை! என்ன அப்படிப் பார்க்குறீங்க. இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கிற மர்மங்களுக்கு, ஒரு எல்லையே இல்லாமப் போச்சு இப்பெல்லாம். அட ஆமாங்க, இதுவரைக்கும் மனிதர்களில் (பெண்கள்) மட்டுமே சுரக்கும் என்று எண்ணப்பட்டு வந்த ‘ப்ரொஜஸ்டிரோன்’ (progesterone) அப்படீங்கிற பெண் செக்ஸ் ஹார்மோன், walnut tree அப்படீங்கிற ஒருவகையான மரத்துலயும் சுரக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுல என்ன பிரச்சினைன்னா, மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ள வித்தியாசமே இவ்வகையான ஹார்மோன் சுரக்கும் தன்மையிலும்தான் என்பதுதான்! ஆக, மனிதர்களில் மட்டுமே சுரப்பது என்று நினைக்கப்பட்ட இந்த ஹார்மோன் எப்படி தாவரங்களில் சுரந்தது என்று கேட்டால், தாவரங்கள் தோன்றுவதற்க்கு கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்த ஹார்மோன் தோன்றியிருக்கக்கூடும் அப்படீன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! எல்லாம் மர்மமே…..நமக்குத் தெரியாதவரை! மேலதிக தகவல்கள் இங்கே
|
No comments:
Post a Comment