மனித மூளையோட வினோதமான மர்மங்கள்னு கனுவுல ஆரம்பிச்சு நியாபக ஏணி வரைக்கும் பதிவோட முதல் பாகத்துல பார்த்தோம். அந்த வரிசையில, அடுத்தது சிரிப்பு! அதனாலதான், பதிவை சிரிப்போட ஆரம்பிச்சிருக்கோம். வாங்க சிரிச்சுக்கிட்டே மேல படிப்போம்…..
6. சிரிப்பு (Brain Teaser)
இந்தச் சிரிப்பு இருக்குங்களே, மனுசனோட செய்கைகள்/உணர்ச்சிகள்லேயே ரொம்ப மர்மமான, மனித மூளையாள இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி அது?! அட ஆமாங்க, உதாரணத்துக்கு பதிவுத் தொடக்கத்துல நீங்க படிச்ச மூன்று வெவ்வேறு பாடல் வரிகளையே எடுத்துக்குங்களேன். முதல் (பாடல்) வரி என்ன சொல்லுதுன்னா, சிரிப்பிலே ஏற்படும் ஒலியில் ஒரு சங்கீதமே இருக்குது அப்படீன்னு சொல்லுது. சங்கீதம்னா ஒரு ஆறுதல்/சந்தோஷம்/சுகம் இப்படி பலவாறான அர்த்தங்கள் இருக்கு!
இரண்டாவது பாடல் வரியை எடுத்துக்கிட்டா, வாழ்க்கையை ஒருவர் எப்படி வாழ வேண்டும்/வாழக் கூடாது என்பதை சுட்டிக்காட்டும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைக்கூட சிரிப்பு மூலமாக சொல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது! மூன்றாவது பாடல் வரியை பார்த்தீங்கன்னா, ஒருவரின் சோகத்தைக்கூட அவரின் சிரிப்பின் மூலம் அறிந்துகொள்ள/விளங்கிக்கொள்ள முடியும் என்பதற்க்கான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது! ஆக, சிரிப்பு எனும் ஒரு உணர்வு கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது!
சரி, இனி நாம சிரிப்பைப் பற்றிய அறிவியல்பூர்வ/விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களைப் பார்ப்போம். ஒருவரின் சந்தோஷமான சிரிப்பின்போது, மூளையின் மூன்று பாகங்கள் தூண்டப்படுகின்றனவாம்! அவை
- சிரிப்பிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மூளையின் சிந்திக்கும் பகுதி
- தசைகளை அசையச் சொல்லி உத்தரவிடும் உடல் அசைவினை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி
- சிரிப்பினால் உண்டாகும் ஒருவித சந்தோஷ/உளைச்சளற்ற உணர்வினை ஏற்படுத்தும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி
இது எல்லாம் தெரிஞ்சும்கூட, நம்ம வடிவேல் காமெடி ஒன்னை சினிமாவுல பார்க்கும்போதோ, நம்ம நண்பர் ஒருத்தர் ஜோக் அடிக்கும்போதோ, நாம ஏன் சிரிக்கிறோம்ங்கிறதுக்கான காரணம்/அறிவியல்பூர்வமான விளக்கம் இன்னும் தெரியல சிரிப்பை ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளுக்கு!
ஆனா, அமெரிக்க ஆய்வாளர் ஜான் மோர்ரியல் (John Morreall, who is a pioneer of humor research at the College of William and Mary) அவர்களின் கூற்றுப்படி, “சிரிப்பு என்பது இயல்புநிலை எதிர்ப்பார்ப்புகள்/வரையரைகளை கட்டுடைத்து வரும் ஒரு உணர்ச்சியே! பிற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சிரிப்பு என்பது பிறருக்கு இது ஒரு விளையாட்டான விஷயம் என்பதை உணர்த்தப் பயன்படும் ஒரு உணர்வு!
ஆமா, இதைப் படிக்கிற உங்களோட கூற்று என்ன? எது எப்படியோங்க, சிரிச்சா நாமளும் நல்லாயிருப்போம். நம்மைச் சுத்தியிருக்குரவங்களும் நல்லா இருப்பாங்க. அது போதுமில்ல நமக்கு?!
7. மரபனுவும் இயற்கையும் (Nature vs. Nurture)
மனுசனோட உணர்வுகள்/எண்ணங்களையும், பண்புநலன்களையும் கட்டுப்படுத்துவது அவனுடைய மரபனுக்களா இல்லை சுற்றுச்சூழலா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, குடுமிப்பிடி சண்டை போடாத அளவுக்கு வெவ்வேறு கருத்துக்கள்/பதில்களோட விஞ்ஞானிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தாலும், அடிப்படையான காரணம்/பதில் மரபனுவும் சுற்றுச்சூழலும் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றாகத்தானிருக்கும் என்கிறார்கள்!
ஒவ்வொரு மரபனுவையும் தனித்தனியாக ஆய்வு செய்யும்போது, ஒவ்வொரு பண்புநலனுக்கும் ஒவ்வொரு மரபனு காரணமாக இருக்கிறது என்று தெரியவந்தாலும், ஒருவரின் செயல்கள்/எண்ணங்கள் அனைத்துக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்கள்/சுற்றுச்சூழலும் பெருமளவில் பங்களிக்கிறது அல்லது பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள் விஞ்ஞானிகள்! எனக்குக் கூட அப்படித்தாங்க தோனுது!
8. மரண மர்மம் (Mortal Mystery)
ஒருவர் இறந்துபோவதற்க்கு, “அவர்களின் விதி முடிந்து எமதர்மன் பாசக்கயிற்றால் பிடித்துப்போய் சொர்க்க/நரகத்தில் சேர்த்துவிடுகிறான் என்பதில் தொடங்கி, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் (தெய்வம் கொல்வதாக), ஊழ்வினை பலன் இப்படி எத்தனையோ காரணங்களை நம் பெற்றோர்கள், புராணங்கள்/இதிகாசங்கள் மற்றும் நீதி நூல்கள் முன்வைத்தாலும், அறிவியலைப் படித்து சுவாசித்த மனது என்னவோ ஒத்துக்கொள்ள மறுக்கிறது என்பதே நிதர்சன/யதார்த்தமான உண்மை!
ஒருவர் ஏன் மூப்படைகிறார்னு ஆய்வாளர்கள்கிட்டே கேட்டா, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே நோய்களை எதிர்த்து போராடும் சக்தியையும், புண்களை ஆற்றிக்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கிறான் என்றபோதும், வயதாக வயதாக அவை எல்லாம் வலுவிழந்து போகின்றன என்பது இயற்க்கை! அதனை விளக்க விஞ்ஞானிகள் முன்வைக்கும் கோட்பாடுகள் இரண்டு, அவை
- மனிதனின் பிற குணங்களைப் போலவே மூப்படைதலும் மரபனுவியலின் ஒரு அங்கம். அது ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதும் கூட?!
- மூப்படைதல் என்பது குறிக்கோள் இல்லாத, உடல் அனுக்களை அழிக்கும்/சேதப்படுத்தும் ஒரு உடலியல் நிகழ்வு. ஆய்வாளர்களில் ஒரு சாரார், கூடிய விரைவில் மூப்படைதலை தாமதப்படுத்தும் அல்லது மனிதனின் (இப்போதைய) வாழ்நாளை இருமடங்காக உயர்த்தும் அதிசயத்தை விஞ்ஞானம் நிகழ்த்தியே தீரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்! அட….இது நல்லாருக்கே?!
9. ஆழ் உறையவைத்தல் (Deep Freeze)
சாகாவரம் பெறுவது என்பது என்னவோ சாத்தியமில்லைதான்! ஆனால், இரண்டு வாழ்க்கை பெறுவது சாத்தியம்?! என்ன பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு பார்க்குறீங்களா? அட உண்மைதாங்க! வாழ்நாட்களை நீட்டிக்கும் விஞ்ஞானத்துறை என்று நம்பப்படும் க்ரையோனிக்ஸ் (cryonics) துறை மூலம், தற்போதைக்கு மருந்து/சிகிச்சையில்லாத ஒரு கொடிய நோயின்மூலம் இறந்தவரின் உடலை, எலும்பு சில்லிடும் அசுர குளிரான மைனஸ் 320 டிகிரி ஃபாரென்ஹீட் (minus 320 degrees Fahrenheit/78 Kelvin), திரவ நைட்ரஜன் வாயுவில் உறைய வைத்து, குறிப்பிட்ட அந்த நோய்க்கான மருந்தோ/சிகிச்சையோ கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அதைக்கொண்டு மீண்டும் அந்த இறந்தவுடலை உயிர்பிக்க முடியும் என்று நம்பப்படுகிறது!
இப்படித்தான் அமெரிக்காவின் (மறைந்த) தலைசிறந்த பேஸ்பால் வீரரான டெட் வில்லியம்ஸின் (Ted Williams) உடலை, அல்கார்ஸ் (Alcor’s) என்னும் உடல் உறையவைக்கும் நிறுவனம் ஒன்று உறையவைத்து பாதுக்காத்து வருகிறதாம்! இறந்த உடலை தலைகீழாக வைத்துதான் உறைய வைப்பாங்களாம். தவறுதலாக டேங்க் உடைந்து, திரவ நைட்ரஜன் சிந்தினாலும் மூளைமட்டும் திரவத்திலேயே மூழ்கி பாதுகாப்பாக இருக்குமாம். அது சரி!
ஆனா, இப்படி பாதுகாத்துக்கிட்டிருக்குற எந்த உடலும் இதுவரை மீண்டும் உயிர்பிக்கப் படவில்லையாம்! ஏன்னு கேக்குறீங்களா? ஏன்னா, இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் அப்படியோரு தொழில்நுட்பம் சாத்தியமேயில்லைங்கிறதுனாலதான்! (குறைந்தபட்சம் ஒரு அறிவியல்) காரணம், இறந்த ஒரு உடலை சரியான வெப்பத்தில் உறைய வைக்கவில்லையென்றால், அவ்வுடலின் அனுக்களெல்லாம் பனிக்கட்டியாகி தூள் தூளாக வெடித்துச்சிதறிவிடும் என்பதுதான்!
10. சுய நினைவு (Consciousness)
இரவு உறக்கம் முடித்து, காலையில் கண் விழித்து எழும் உங்களுக்கு, புல்லின்மேல் பனித்துளி அதனைத் தொட்டு உறவாடி ஜொலிக்கும் சூரியக் கதிரொளி, முற்றத்திலிருக்கும் நெற்கதிர்களை கொரிக்கும் சிட்டுக் குருவிகளின் சத்தம் இப்படி காலையின் அடையாளங்களையெல்லாம் நம்மால பார்க்க/உணர முடியும் இல்லீங்களா? ஆமா, முடியும். அதுக்குக் காரணம் நம்ம சுயநினைவு!
அதெல்லாம் சரிதான், ஆமா சுயநினைவுன்னா என்ன? அதாவது, சுய நினைவுன்னா அறிவியல்பூர்வமான அர்த்தம் என்ன? அதத்தான் பல நூற்றாண்டுகளாக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா, திட்டவட்டமான ஒரு பதில்தான் இன்னும் கெடைக்கலை! அதுக்காக விஞ்ஞானிகள் சும்மா ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நெனைக்காதீங்க. சமீப காலங்களாதான், சுயநினைவு பத்தின ஆய்வை மிகத்தீவிரமா நடத்த ஆரம்பிச்சிருக்காங்க!
அதன் பலனா, சுயநினைவு பத்தின சுவாரசியமான சில/பல கேள்விகள், ஆரம்பநிலை புரிதல்கள்/விளக்கங்கள்னு நிறைய விஷயங்கள கண்டுபிடிச்சி, இன்னும் முன்னேறிகிட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!
|
No comments:
Post a Comment