39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.
நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.
வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.
|
No comments:
Post a Comment