Wednesday, July 6, 2011

காஜல் அகர்வாலுக்கு எதிராக திரையுலகம் கொந்தளிப்பு

தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது.


ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல்.

ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்னை தமிழ் அல்லது தெலுங்கு நடிகை என்று சொல்ல வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. நான் வட இந்தியப் பெண் என்பதுதான் எனக்குப் பெருமை", என்றார்.

அவரது இந்தப் பேட்டி வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டார்கள் தென்னிந்திய நடிகர் நடிகைகள். இன ரீதியான அவமானமாக இதை அவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தியில் சீண்டுவாரில்லை என்பதால்தானே, தமிழ் அல்லது தெலுங்குக்கு வந்தோம். இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதையெல்லாம் யோசிக்கக் கூட மறுக்கிறார்கள் காஜல் அகர்வாலைப் போன்ற சிலர். காஜல் பேச்சு அநாகரீகமானது. தவறானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார் சக நடிகை ஒருவர்.

பதிலுக்கு பதில்...

இயக்குநர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், "இரண்டு வாரத்துக்கு முன் ஹைதராபாதுக்கு வந்த காஜல் அகர்வால், இந்த ஊர் பிரியாணி, முத்துக்கள், ரசிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ஐ லவ் ஹைதராபாத் என்றார். அடுத்த வாரம் சென்னையில் இருந்தார். அங்கே, ஒரு படத்துக்கு ஒப்பந்தமான அவர், ஐ லவ் சென்னை. இந்த ஊர் மாதிரி எதுவும் இல்லை, என்றெல்லாம் பேட்டியளித்தார். இது அவரது தொழில் நிர்ப்பந்தம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல ஐ லவ் மும்பை என்று சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு, 'என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமையில்லை' என்று அவர் கூறியிருப்பது, அநாகரீகமானது. நம்மை அவமானப்படுத்தும் செயல். இதைவிட பெரிய அவமானத்தை அவர் பதிலுக்கு பெற வேண்டி வரும். நாங்களும் அவரை அப்படியே நடத்துவோம்," என்றார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறுகையில், "காஜல் தனது இன வெறியைக் காட்டியுள்ளார். சினிமாவுக்கு இது நல்லதல்ல. அவர் இங்கே நடிப்பது யாருக்குமே நல்லதல்ல. காஜலுக்கு வாய்ப்பு மறுப்போம்," என்றார்.

No comments:

Post a Comment