Wednesday, July 6, 2011

2ஜி விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்தும் விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து மாறனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
 

இந்த ஊழல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் விவரங்களை இனறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்த ஊழலில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிப்போம். இந்த ஊழல் குறித்த முழு விசாரணையும் 3 மாதத்தில் முடிவடையும்.

2ஜி விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம்.

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தராமல் தயாநிதி இழுத்தடித்தார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த ஆக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கியதும் தெரிய வந்துள்ளது. இதனால் 2ஜி விவகாரத்தில் அவரது பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஏர்செல்லுக்கு உரிமம்..இழுத்தடித்தார் தயாநிதி-முன்னாள் செயலாளர்:

இந் நிலையில் 2003-04ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று அவரது முன்னாள் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

தனது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனம் பலன் அடைய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்காமல் தயாநிதி இழுத்தடித்தார் என்று நிருபேந்திர மிஸ்ரா சிபிஐ விசாரணையில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தயாநிதியின் பெயரை 2ஜி விவகாரத்தில் சிபிஐ சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே அந்த நிறுவனத்துக்கு 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடும் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தயாநிதியின் முன்னாள் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment