Wednesday, July 6, 2011

பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?

"பாலாக்குட்டிக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கே. யாரு எடுத்தது இந்த ட்ரெஸை?” என்றேன்.

தங்கமணி முறைத்தார்.

சூப்பரா இருக்குன்னு தானே சொன்னோம், ஆனாலும் சுனாமிக்கான அறிகுறி தெரியுதே ஏன்ன்னு குழம்பிப்போய், “என்ன?” ன்னு கேட்டென். கிணத்துக்குள்ள இருந்து வர்ற சத்தம் மாதிரி ’என்ன’ வந்துச்சு.

“அது 3 மாசம் முன்ன உங்க பிள்ளைக்கு முதல் முதலா நீங்க எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்.”ன்னு சொல்லுச்சு. நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.

இது ஒன்னும் நமக்குப் புதுசில்லை. அப்படித்தான் நாங்க டெல்லில இருக்கும்போது திடீர்னு “போன ஜுலை மாசம் என்ன சொன்னிங்க?’ன்னு கேட்டுச்சு.

ஒரு மாசத்துல ஒரு மனுசன் என்னென்னமோ சொல்லி இருப்பான், இதெல்லாம் என்ன கேள்வின்னு யோசிசுக்கிட்டே”என்ன சொன்னேன்?”ன்னு கேட்டேன்.

பதிலுக்கு “உங்க பேச்சை தண்ணில தான் எழுதி வைக்கணும்’னு சொல்லுச்சு.

நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்.

“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.நான் “அப்படியா?’ன்னு கேட்டேன். கடுப்பாகிட்டாங்க. நான் எப்ப அப்பிடிச் சொன்னேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. ஆனா அவங்க சொன்னாங்க பாருங்க பதிலு..

“அன்னிக்கு வெள்ளிக்கிழமை, காலைல..நீங்க ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. இட்லி அவிச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு கிளம்பினீங்க. வொயிட் கலர், ப்ளூ கோடு ப்போட்ட சட்டை போட்டிருந்தீங்க. ஆஃபீஸ்ல சுட்ட பேனா நாலு நம்ம வீட்ல வச்சிருப்பீங்கள்ல..அதுல ஒன்னை எடுத்து அந்தச் சட்டைல சொருகி இருந்தீங்க. ஜீன்ஸ் பேண்ட் வேற. சேர்ல கிடந்த சிவப்புக்கலர் துண்டை எடுத்துக் கையைத் துடைச்சுக்கிட்டே..”

”ஆமா நான் சொன்னேன்..சொன்னேன்..போதும் தாயி உன் டீடெய்லு”ன்னு சரணடைஞ்ச அப்புறம் தான் விட்டாங்க.

கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது?

அது மட்டுமில்லாம அவங்க வீட்டு ஆட்களைப் பத்தி ஏதாவது கமெண்ட் அடிச்சோம்னாத் தொலைஞ்சோம். ஜென்மத்துக்கும் மறக்காம ஞாபகம் வச்சிருக்காங்க. (ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடி படிச்சாச்சா?).

நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ‘எப்படிங்க இவங்க நாம எப்பவோ சொன்னதை எல்லாம் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சிருக்காங்க’ன்னு புலம்பித் தள்ளிட்டாரு. அவர் பெருசா ஒன்னும் சொல்லிடலை.

கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் சின்ன வயசுல நாலோ அஞ்சோ படிக்கும்போது குப்புற விழுந்து நாக்குல பல்லு வெட்டிடுச்சு. இப்பவும் அந்த வெட்டு, நாக்குல தெரியும். விழுந்தது மட்டும் தான் எங்களுக்க்கு ஞாபகம் இருக்கு. அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு) கொஞ்ச மாசம் முன்ன நாங்க பார்த்தோம்.

அது அவனைப் பார்த்துமே அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு அம்புட்டுத் துல்லியமா சொல்லுச்சு.”அன்னிக்கு வாயெல்லாம் ரத்தமா நாக்கை வெளில நீட்டிக்கிட்டு பத்ரகாளி மாதிரி நீ நின்னே. அப்போ செங்கோவி ’பேச்சு வருதான்னு பார்ப்போம். ஏதாவது பேசுலே’ன்னு சொன்னான். நீயும் ‘அம்மா அப்பா’ன்னு சொன்னே. ’இப்படிச் சொன்னா எப்பிடிலே தெரியும்..ஆட்டுப் புழுக்கை அரைக்கிலோ’ன்னு சொல்லுலேன்னு செங்கோவி சொன்னான். நீயும் ‘ஆத்துப் புதுக்கை அதைக்கிதோ’ன்னே..அய்யய்யோ, மொட்டை நாக்கனா ஆயிட்டமேன்னு நினைச்சு அழுதே. ஆனா கொஞ்சநாள்லே சரி ஆயிடுச்சு’ன்னு சொல்லுச்சு. எங்களுக்கு இவ்வளவு தெளிவால்லாம் ஞாபகமே இல்லை.

பொம்பளைப் பிள்ளைங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும்போதெல்லாம் ‘அவங்க வெளில ரொம்பச் சுத்த மாட்டாங்க. அதான் இப்படி மார்க் எடுக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போ தான் தெரியுது. அவங்களுக்கு ஆண்டவன் ரொம்ப பவர்ஃபுல் மெமரியைக் கொடுத்திருக்கான் போல.(குமரி பெற்ற மெமரி-ன்னு தலைப்பை மாத்திடலாமா..)

’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி’-ன்னு என்னென்னமோ கவிஞர்கள்லாம் சொல்வாங்களே..ஒருவேளை அவங்க சொன்ன சக்தி ‘ஞாபக சக்தி’ தானோ என்னமோ?

ஆனா அதை ஆக்கப்பூர்வமாப் பயன்படுத்தாம, இப்படி அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்..(ச்சே ச்சே..எனக்கு இருக்கிறது ஒரு தங்கமணி தாங்க..பொதுவாச் சொல்றேன்..) தங்கமணிகள்லாம் தயவு செஞ்சு யோசிக்கணும். நன்றி.

No comments:

Post a Comment