ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பமாக இருந்த இவர், கடந்த 11ம் தேதி யாருக்கும் தெரியாமல் பள்ளி கழிவறையில் தாமாகவே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றார். அதை மறைத்து வைத்து வகுப்பறையில் இருந்த போது, குழந்தையின் அழுகுரல் அவரை காட்டிக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாயை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களிடம் குழந்தையுடன் மாணவியை ஒப்படைத்து, ‘டிசி’யையும் கொடுத்தனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா புனித ஜெயராணி விசாரணை நடத்தினார். இதில் மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குழந்தை பெற்ற மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்காக மாணவியை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.*கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது : *
தனது இந்த நிலைக்கு காரணமானவர் குறித்து வாய் திறக்க மாணவி மறுக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையும், மாணவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாணவி இருமுறை கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் சட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
|
No comments:
Post a Comment