Sunday, December 18, 2011

முல்லைப்பெரியாறு தற்போதைய நிலை. ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்


உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பிரவம் தொகுதியின் இடைத் தேர்தல் வெற்றிக்காக காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து வரும் அரசியலில் அப்பாவிப் பொது மக்களும் உணர்ச்சி வயப்பட்டு கேரளா மாநிலத்துக்குள் வரும் தமிழர்களைத் தாக்குவதும், தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்குவதும் தமிழ்நாட்டில் உள்ள கேரளத்தவர்களின் வணிக நிறுவனங்களைத் தமிழ்நாட்டினர் அடித்து நொறுக்குவதும் இந்தியர்கள் என்ற போர்வையைத் தாங்கி ஒருமைப் பாட்டை பேணிவரும் இந்தியாவுக்கு அழகல்ல.
பெரியாறு அணை உடைந்து 35 லட்சம் மக்கள் உடனே பலியாகி விடுவார்கள் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் விளையாட்டுகளே அன்றி வேறில்லை. பெரியாறு அணை கட்டி 116 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என முதல்வர் உம்மன் சாண்டி குரல் கொடுத்து வரும் நிலையில் கேரள மாநில அட்டர்னி ஜெனரல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் அணையின் பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என்றும் ஊடகங்களின் பூதாகார பிரச்சாரத்தாலேயே மக்கள் பீதி அடைந்து இருப்பதாகவும் அணை உடைந்தாலும் அருகில் உள்ள இடுக்கி, செறுதோணி அணைகள் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமை படைத்தவை என்றும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கேரள உயர் நீதிமன்றத்திலேயே உண்மையைப் போட்டு உடைத்தார்.

உண்மையைக் கூறி நியாயத்தின் பக்கம் நின்றதற்காக கேரளா மாநில அட்டர்னி ஜெனரலை மாற்ற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேரக் குரல் கொடுத்தன. இப்போதைய நிலையில், தமிழகத்தால் கேரளத்துக்கு நன்மை அதிகமா, கேரளத்தால் தமிழகத்துக்கு நன்மை அதிகமா என்று பட்டிமன்றம் போடுவதால் பலன் ஒன்றும் இல்லை.

கேரள மாநில மக்களும் தமிழகத்தின் நியாயமானக் கோரிக்கையை மனதில் கொண்டு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி வன்முறையில் இறங்கி இரு மாநிலத்தவர்களின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாம்.

மம்தா போன்ற வலிமையானக் கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தைச் சார்ந்து இருந்திருந்தால் காங்கிரஸ் இன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைக்கும் அதிகமாகவே செவி சாய்த்து இருக்கும். அது போன்ற வலிமையான தலைவர்கள் தமிழகத்தைச் சாராதது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல கேரளத்தின் அதிர்ஷ்டமும் கூட.

இரு மாநில மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக ஞானதேசிகனும் சென்னிதாலாவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கப் போவதில்லை. தமிழக காங்கிரஸ் தலைவரும் கேரள காங்கிரஸ் தலைவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளப்போவதில்லை. கேரள பாஜக தலைவர்களும் தமிழக பாஜக தலைவர்களும் தங்களுக்குள் முட்டிக்கொள்ளப்போவதில்லை. கேரள கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களுக்குள் வாள்வீட்டு நடத்தப்போவதில்லை. கேரளத்தவரான நயன்தாராவைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தமிழ் திரைவானில் பிரகாசிக்கும் பிரபுதேவா, தமிழகத்தின் பக்கம் நின்று அவரை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துவிடப் போவதுமில்லை.

சுருக்கமாக, முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் பண வசதிப்படைத்த மேல்தட்டு வர்க்கத்தினரும், பிரபலங்களும் இரு மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக முதலான கட்சியினரும் முட்டி மோதிக் கொள்ளப் போவதில்லை என்ற உண்மையை உணர்ந்து இரு மாநில மக்களும் இவ்விஷயத்தில் உணர்ச்சி வசப் படாமல் நியாயம் வெல்வதற்குத் துணை நிற்க வேண்டும். அதை விடுத்து அற்ப அரசியல்வியாதிகளின் பசிக்கு இரையாகி இரு மாநில நல்லுறவைக் கெடுத்துக் கொள்ளும் வகையில் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் இழப்பு நாட்டுக்கும் சாதாரண அப்பாவி பொதுமக்களும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment