Sunday, December 18, 2011

சாதுவாக இருந்த கோயில் யானை திடீரென பாகனை தந்தத்தால் குத்திக் கொன்றது! - கேரளாவில் சம்பவம்


சாதுவாக நின்று கொண்டிருந்த கோவில் யானை, திடீரென அருகே இருந்த பாகனை தந்தங்களால் குத்தியும், அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியும் கொன்றது. பக்தர்களின் கண் முன்னால் நடந்த இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கேரளா கொல்லம் மாவட்டம் கரிக்கோடு அருகே பேரூரில், கருநல்லூர் பகவதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மார்கழி மாதம் 1ம் தேதி என்பதால், காலை 8:45 மணிக்கு, ஏழு வயதுடைய சிவன் என்ற கோவில் யானையை, பாகன்கள் விஜயன்,45, விஷ்ணு,19, ஆகியோர் குளிப்பாட்டி, கோவிலுக்குள் அழைத்து வந்தனர்.

பாகன்களில் விஷ்ணு, காலை உணவுக்காக வெளியே சென்றார். கட்டிப் போடப்படாமல் சாதுவாக நின்று கொண்டிருந்த யானையுடன் பாகன் விஜயன் இருந்தார். அப்போது அங்கு வந்த பக்தர், யானையிடம் காசு கொடுத்தார்.

அது தும்பிக்கையால் பிடிக்க முடியாமல், கீழே விழுந்தது. அதை பார்த்த பாகன் தன் கையில் இருந்த தடியால் யானையின் தும்பிக்கையில் ஓங்கி அடித்தார்.

ஆத்திரமடைந்த யானை திடீரென விஜயனை தந்தத்தால் குத்தியது. அவர் சுதாரிப்பதற்குள், யானை அவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது.

சற்று தொலைவில் போய் விழுந்த அவருக்கு பலத்த காயமேற்பட்டு அலறினார்.அதை பார்த்த பக்தர்கள் பலரும் அலறியதை கேட்டு, கோவில் நிர்வாகிகள் ஓடி வந்து பாகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாகன் இறந்தார். அதற்குள் யானை, கோவிலை விட்டு வெளியே சென்று அங்குள்ள மரத்தடியில், ஏதும் நடக்காதது போல் நின்றது.

காலை உணவுக்கு சென்ற பாகன் தகவலறிந்து ஓடி வந்து யானையை மரத்தடியில் கட்டிப் போட்டார். காலை நேரத்தில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கண்முன் நடந்த இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பக்தர்கள் ஓட்டம்:கடந்த ஒரு மாதமாக, சபரிமலை பாண்டித்தாவளம், பம்பை, பெரியானை வட்டம், ஐரேஞ்ச், ஹில்டாப், நிலக்கல் ஆகிய பகுதிகளில், காட்டு யானைகள் நடமாடுவது வழக்கமாகி விட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, நிலக்கல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே வந்து, அமைதியாக நின்றுகொண்டிருந்தன.

அதை பார்த்த பயணிகள், அலறி அடித்து ஓடி விட்டனர். அவற்றில் சில யானைகள், என்ன நினைத்ததோ தெரியவில்லை, திடீரென அங்கிருந்த மினி பஸ்கள், வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை தாக்கி சேதப்படுத்தின.

அதற்குள் வனத் துறையினர் விரைந்து வந்து, பதிவு செய்யப்பட்டிருந்த புலியின் உறுமலை ஒலிக்கச் செய்து, காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

அடுத்த சில நிமிடங்களில், காட்டு யானைகள், பம்பையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலும், சக்கு பாலம் அருகேயும் நடமாடின.

அதை பார்த்த பக்தர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதற்குள் யானை அங்கிருந்த சில பஸ்களின் கண்ணாடிகளை தாக்கி உடைத்தது.

வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்ததால், அங்கிருந்து ஓடிய யானைகள், அடுத்த சில நிமிடங்களில், கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்துமிடத்தில் மீண்டும் தென்பட்டன.

அதை பார்த்து, பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். மீண்டும் வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை எறிந்தும், அவற்றை காட்டுக்குள் விரட்டினர்.

இவ்வாறு, காட்டு யானைகள் நிலக்கல் மற்றும் பம்பையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் 10:30 மணி வரை, மூன்று மணி நேரம் பக்தர்களை அச்சுறுத்தின.

No comments:

Post a Comment