ஆம். கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவோடு இணைத்தால், முல்லைப்பெரியார் பிரச்சினைக்கு புதிய வழி பிறக்கும். கீழ்காணும் பதிவை படித்தால் புரியும்
திருவிதாங்கூர் ஆட்சியின் கீழிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் ஒன்றில் தமிழ்நாட்டோடு இணைந்து 56 ஆவது வருடம் இன்று பிறந்துள்ளது.
இந்தியாவின் தென்னெல்லையான கன்னியாகுமரி முக்கடல் சூழ்ந்த மாவட்டமாகும். மா, பலா, வாழை என முக்கனிகள் மட்டுமின்றிப் பனை, உயர் தர ரப்பர், ஏலம், கிராம்பு முந்திரி முதலான பணப்பயிர்களும் விளையும் மாவட்டம்; நெல் உற்பத்தியில் முன்னணியில் இருந்ததால் திருவாங்கூரின் களஞ்சியம் எனப் போற்றப்பட்ட -- நன்செய்யும் புன்செய்யும் நிறைந்து மலையும் காடுகளும் கவிந்து ஒழுகும் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம்; கல்வி அறிவில் முன்னிலையில் நிற்கும் மாவட்டம்; காற்றாலை மின் உற்பத்தியில் முதன்மை இடம் பிடித்த மாவட்டம்; அரிய வகை கனிம வளமான இல்மனைட் மோனோஸைட் பெருமளவில் கிடைக்கும் மாவட்டம்; தமிழ்நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95 % தரும் மாவட்டம் எனப் பல பெருமைகளைப் பெற்றது கன்னியாகுமரி மாவட்டம்.
இம்மாவட்டம் திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. நம்பூதிரி பிராமணர்களும் நாயர்களும் அரசர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இம்மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீனவர் முதலானோர் தீண்டாமைக் கொடுமையினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் செருப்பணியவோ மேலாடை அணியவோ உரிமையில்லை. பெண்களும் தம் மார்பை மறைக்க முடியாத கொடுமை நிகழ்ந்தது. அவர்கள் இடுப்பில் நீர்க்குடம் சுமந்து செல்லக்கூடாது. தலையில் குடத்தை வைத்து நடக்க வேண்டும்
நாடார் சாதி ஆண்கள், வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது. தலையில் துணி கட்டக் கூடாது.
பனையேறுபவர்களது தொழிற்கருவிகளான வெட்டுக்கத்தி, கம்புதடி அனைத்திற்கும் வரி.
அவர்கள் திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. வரிசையாக வீடு கட்டக்கூடாது.
தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனை ஓலையைச் சுற்றிக் கட்டுவது தான் தாலி.
படிக்கக்கூடாது. பொதுக் குளத்தில் குளிக்கக்கூடாது.
இப்படிப் பல கொடுமைகள். இதிலிருந்து விடுதலை பெற்றுத் தமிழ்நாட்டு நாடார்களைப்போல வாழ விடுதலைப்போராட்டம் துவங்கினர்.
மலையாள மொழி தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியதாலும் தமிழர்களும் தமிழர் பகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தப்பட்டதாலும் நாடார்கள் போராட்டம் என்பது முஸ்லிம்களும் பிற சாதியினரும் இணைந்த விடுதலைப் போராட்டமானது.
திருவாங்கூரில் நம்பூதிரிகளாலும் நாயர்களாலும் மிக இழிவாக நடத்தபட்ட ஈழவர்களை முன்னேற்ற நாராயண குரு, அவர்களுக்குத் தன்மானத்தை ஊட்டினார். தாழ்த்தப்பட்ட ஈழவர்களுக்கு உயர்சாதிப் பெயர்களான ராகவன், கேசவன், கோவிந்தன், நாராயணன் எனப் பெயர் வைக்கத் தூண்டினார். அதுபோல அய்யா வைகுண்டர் என அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமியும் புரட்சி செய்தார். முடிசூடும் பெருமாள் எனும் பெயர் கொண்ட அவர் அப்பெயரால் அழைக்கப்படக்கூடாது என ஆதிக்க சாதியினர் நிர்பந்தித்ததால் முத்துக்குட்டி சாமி ஆனார் அவர். மேலாடை அணிய உரிமையற்றிருந்த தம் மக்களை மகுடம் போல் தலைப்பாகை அணியச் சொன்னார். இழிவு தரும் இந்து மத சாமிகளையும் வழிபாட்டு முறைகளையும் புறக்கணித்துத் தம்மையே கண்ணாடியில் பார்த்து வணங்கும் புதிய வழிபாட்டு முறையைக் காட்டி "அய்யாவழி" என்ற சமயத்தை உருவாக்கினார்.
இப்படி ஆன்மீக அரசியல் தளங்களில் நடந்த போராட்டங்களால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. அதே தினம்தான் தமிழகப் பகுதிகளாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரைப் பகுதிகளையும் மெட்ராஸ் ப்ராவன்சியில் இருந்த மலபாரையும் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானங்களையும் காசர்கோடு தாலுக்காவையும் இணைத்து இன்றைய கேரள மாநிலமும் உருவானது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது தீண்டாமைக் கொடுமையாலும் சாதி இழிவினாலும்தான். இன்று கல்வி அறிவு பெருகிப் பொருளாதாரம் மேம்பட்ட பின் ஒரு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைக்க வேன்டும் எனப் போராடுகிறது.
குமரி மாவட்ட இணைப்பின்போது முதல்வர் காமராசர், "நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இணைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம்" என்று சொன்னதை இவர்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டார்கள் போலும்!
குமரி மாவட்டம் அப்படிக் கேரளத்தோடு இணைக்கப்பட்டால் முல்லைப்பெரியாறு அணை இருக்கும் தமிழகப் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு சிக்கலும் தீரும்.
|
No comments:
Post a Comment