தினசரிகளை விரித்தால் இரண்டே இரண்டு செய்திகள் தான் தவிர்க்க முடியாததாய், பிரதானமாய், ஊடகங்களுக்கும் பிடித்தமானதாய் உள்ளது. ஒன்று, லஞ்சப் புகாரில் சிக்கும் அரசு பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள். இரண்டு, கள்ளக்காதலும் பிறகு அதன் இலவச இணைப்பாக, பின் விளைவுகளாக தொடரும் மரணங்களும்.
லஞ்சம் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம். முறையற்ற காமத்தையும், கள்ளக்காதலையும், அது எதனால் என்பதனையும் இந்த பதிவில் பார்ப்போம். ஊடகங்களுக்கு அவை - கிளுகிளுப்பான விஷயங்களாய், பரபரப்பு செய்திக்கு கிடைத்த தீனியாய் இருக்கலாம். ஆனால் அவை - சமூகத்திற்கு அவலமல்லவா?
கள்ளக்காதல் என்பது எப்போதும் இருந்தவை தான், அது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது பாலின வேறுபாடின்றி படுகொலைகளுக்கு - இன்று துணிந்துள்ளது தான் புதிதாக உள்ளது. கள்ளக்காதலுக்கு சொல்லப்படும் அழகான பொய், "வாய்த்த துணை ஒழுங்காக இருந்ததால் - ஏன் திசை மாறி போகிறோம்" என்பது. குற்றத்தை ஒப்புக் கொள்ள விரும்பாத, சமாளிக்கும், நியாயம் கற்பிக்கும் மனோபாவம் என்பதை தவிர வேறென்ன.
ஆனால் பொதுவாக சொல்லப்படும் காரணம், குற்றச்சாட்டு "கொழுப்பு". கொழுப்போ அல்லது அதிலும் ஒரு நியாயமான காரணம் என்பன போன்றவை ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கள்ள உறவின் சுகத்திற்காக, ஊரறிய மணந்து கொண்ட துணையை கொல்வது என்பது இப்போது பல்கி பெருகி உள்ளது - அதுவும் இந்த ஐந்தாண்டுகளாக... இதில் ஒரு மிக பெரிய கொடுமை என்னவென்றால் - இந்த காமப்போதையால், தமது பச்சிளங் குழந்தைகளையும் கூட விட்டு வைக்காமல் கொல்கிறார்கள் என்பது மிகப் பெரிய வேதனை.
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் செல்வதற்கு தான் - எத்தனை விருப்பத்துடன் படுகொலைகள் புரிகிறார்கள். ஏன் இது நிகழ்கிறது. "பிடிக்காத துணை திசை மாறி போக வைக்கிறது" என்று நியாயம் பேசுகிறவர்கள், கள்ளக்காதல் புரிகிற அளவுக்கு தைரியம் பெற்றவர்கள், தங்கள் தைரியத்தை திருமணத்தின் போதே காட்டி பிடிக்காத துணையை மணக்காமல் இருந்து இருக்கலாமே.
விவாகரத்துக்கு வழி வகுக்கலாமே. ஏன் செய்யவில்லை. குறிப்பிட்ட சில சதவிதம் பேரே வாய்த்த துணை சரியில்லாமல் போனதால் - விவாகரத்துக்கும் வழி இல்லாமல் - பல நேரங்களில் திசை மாறி போகிறார்கள். ஏனையோர் - சஞ்சலப்படும், சலனப்படும் எதிலும் திருப்தி அடையக்கூடிய மனநிலை பெறாதவர்கள். அதுவே காம கர்மங்களுக்கு காரணம்.
மேலும் இன்று ஒரு சாரரிடம் குவியும் பணம். அது அவர்களை அத்துமீற வைக்கிறது. ஆண்களிடம் பெருகிவிட்ட குடி பழக்கம் - பெண்கள் சீரழிய ஒரு வாய்ப்பை தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. மேற்குலகம் தரும் நல்லதை மட்டுமல்ல தீயதையும் நாம் சுவீகரிக்கிறோம் என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும். சரியாக சொல்வதானால் - நல்ல விஷயங்களை விட தீயதையே எடுத்து கொள்கிறோம்.
அவர்களது சுற்றுப்புற சுத்தம், அவர்களின் நேரந்தவறாமை போன்ற அம்சங்களை விட - டேட்டிங், கோயிங் ஸ்டடி, கள்ளக்காதல், ஓரின சேர்க்கை போன்றவையே கெடும் மக்களுக்கு தித்திப்பாக உள்ளது போலும். அதிகமாய் சம்பாதித்தல், "வாழ்க்கையை அனுபவிக்க தூண்டுகிறது" என்றால், அதிகமான வறுமை, "வாழ்ந்தாக வேண்டுமே" என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறது. பணியின் நிமித்தம் பிரிந்து வாழுவது - இன்றைய சூழலில் தவிர்க்க இயலாது என்றாகும்போது - தவறு செய்வதற்கு பிரிந்து வாழுதலை ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்ளக்கூடாது. ஆனால் வாய்ப்பாக எடுத்து கொள்பவர்கள் - கள்ளக்காதலில் சிக்கி சீரழிகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
கள்ளக்காதலுக்கு படித்தவர், படிக்காதவர் என்கிற வித்தியாசமில்லை என்பது தான் மிக பெரிய வேதனை. மதம், மது வரிசையில் வெறி பிடித்து அலையக்கூடிய விஷயமாக கள்ளக்காதல் இன்று உள்ளது. சினிமாவை விட தொலைக்காட்சி - மிக பெரிய விஷமத்தை விதைத்து கொண்டிருக்கிறது - இந்த இழிச்செயலுக்கு.
தேனிலவுக்கு சென்றிருந்த இடத்தில் - தம் கள்ளக்காதலனை வரவழைத்து, தம் கணவனை கொலை செய்ய பிளான் போட்டு கொடுத்த அந்த பெண் ஒரு முதுகலை பட்டதாரி. கல்யாணமான சில தினங்களிலேயே - தன் கள்ளக்காதலிக்காக தம் மனைவியை கொன்றவன், ஐ.டி துறையில் மிக பெரிய பொறுப்பு வகிப்பவன். எந்த தவறும் செய்யாதவர்களை கொல்கிறோம் என்கிற சிந்தனை துளியும் இல்லை இவர்களுக்கு.
படித்த
கல்வி பணம் சம்பாதிக்க கற்று கொடுத்ததே ஒழிய - நல்லது எது, கெட்டது எது என்று கற்று தரவில்லையா? முன்னெல்லாம் திரைதுறை சார்ந்தவர்களை மாத்திரம் சில, பல குற்றங்களுக்கு உதாரணமாக சொல்வார்கள். இன்று அவை மாற்றலாகி வேறு வேறு இடத்திற்கு சென்று விட்டது.
முறையற்ற காமத்தில் சாமானியர்களை விட - சாமியார்களும், பாதிரியார்களும் தான் எக்ஸ்பர்ட்டாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதிலும் காமச் சேட்டைகளில் மிஞ்சி நிற்பது சாமியார்களா? பாதிரியார்களா? என்று பட்டிமன்றமே வைக்கலாம் போலும். அந்த அளவுக்கு காம சகதியில் புரண்டு எழுகிறார்கள்.
பாவமன்னிப்பு தருபவரே - பாவங்கள் செய்பவராகவும்இருக்கிறார் என்பது தான் வேதனை. இது குறித்து தனியாக ஒரு பதிவில் பார்ப்போம். கள்ளக்காதல் - திருட்டை விட குற்றமானது... விபச்சாரத்தை விட பாவமானது... பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல - அவர்களின் சந்ததியினரும் தான் என்பதை புரிந்து கொள்வது நல்லது.
|
No comments:
Post a Comment