வளைகுடா நாடுகளில் நிறைய பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். நன்றாக படித்து விட்டு படிப்புக்கேற்றார் போல் வளைகுடாவில் வேலை செய்கிற கணவனோடு ஒன்றாக இருந்து பாதுகாப்பான நல்ல சூழலில் வேலை செய்பவர்கள்.
மைக்ரோ பேமிலி சூழலால் இவர்களுக்கும் சில சிரமங்கள் இருக்கின்றன. நான் எனது மனைவியை சவூதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருந்த காலத்தில் மற்ற நண்பர்கள் எப்படி இங்கு சமாளிக்கிறார்கள் என்று அறிவதற்காக புதிதாக குடும்பத்தை அழைத்து வந்திருந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியிடம் பேச்சு கொடுத்தேன்.
என்னம்மா சவுதி எப்படி இருக்கு? வசதிகள் எப்படி? என்று கேட்டது தான் போதும் யாராவது இந்த கேள்வியை கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தது போன்று கடகடவென்று சலிப்போடு பதில் சொன்னார். கை குழந்தையோடு இவுக கூட்டிகிட்டு வந்துட்டாக ஊரில் இருந்தவரை மாமியார், அவரின் மூன்று தங்கைகள் இப்படி மாத்தி மாத்தி தூக்கி வைத்துக் கொள்வார்கள். குழந்தை இருந்த சிரமமே தெரியவில்லை.
ஆனால் இங்கு யாரும் இல்லை. நான் தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேலையும் செய்ய முடியவில்லை அழுது கொண்டே இருக்கிறான். அக்கம் பக்கத்து வீடுகளிலும் தெரிந்தவர்கள் இல்லை. பேச்சு துணைக்கு ஆள் இல்லை காலையில் டூட்டிக்கு போகிறவர் மாலை தான் வீட்டுக்கு வருகிறார் போரடிக்குது ரொம்ப கஷ்டமுண்ணே என்றார்.
அவரிடம் ஆறுதல் சொல்லும் விதமாக இணைய வசதி இருக்குலே ஒரு பிளாக் ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே நிறைய சகோதரிகள் (சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமால், பயணிக்கும் பாதை அஸ்மா, குட்டி சுவர்க்கம் ஆமினா, இனிய வசந்தம் அயிஷா அபுல்,டிரங்குப் பேட்டி ஹுஸைனம்மா, என் இனிய தமிழ் மக்களே அன்னு) சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களோடு இணைய நட்பும் ஏற்படும். அப்புறம் உங்களுக்கு நேரமே கிடைக்காது என்று சொன்னேன்.
இப்படி தனிமை, வேலைப்பளு, பாருங்கே எல்ல வேலைகளையும் நானே செய்ய வேண்டியதாகி இருக்கு போன்ற கஷ்டங்கள் இரண்டாம் பிரிவினருடன் ஒப்பிடும் போது சாதராணமானவை.
இரண்டாவது பிரிவினர் மருத்துவமனைக்கு தாதிகளாக(நர்ஸாக) வேலைக்கு வரும் பெண்கள், வீட்டு வேலைக்கு வரும் பணிப் பெண்கள். நர்ஸாக வருபவர்களுக்கு ஒரளவுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்கிறது. ஆனால் வீட்டில் தங்கி வேலை பார்க்கும் வீட்டு வேலைக்கார பெண்களின் பணிச்சூழல் பயங்கரமானது. நான் ஆரமபத்தில் லேசு மாசாக அவர்களின் கஷ்டங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் ‘நிஷாந்தி’ என்கிற இலங்கையை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்னை சந்தித்த பிறகு அதன் முழு கஷ்டத்தையும் உணர்ந்தேன். அரபிகளில் இவ்வளவு மட்டமான மிருகங்களும் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன்.
சவுதி அரசாங்கம் நடத்தும் இஸ்லாமிய குர்ஆனிய வகுப்புகளில் அரபி இலக்கணம் படிப்பதற்காக நான் சேர்ந்து இருந்தேன். எங்களுக்கு தமிழ் பிரிவு ஆசிரியராக இருந்த இலங்கை மெளலவியுடன் நான் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டேன் அவர் குர்ஆன் இலக்கனம் கற்று தருவார். நான் அதிகாலையில் அவருக்கு யோகா உடற்பயிற்சி இவைகளை கற்றுக் கொடுப்பேன் இப்படி நட்பு இறுக்கமாகி அவர் குடும்பத்தில் ஒருவனாகி அவர் கூடவே திரிந்தேன்.
பொதுவாக இலங்கை தமிழர்கள் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம். அவர்கள் தூய தமிழ் பேசும் அழகு இருக்கே கேட்டுகிட்டே இருக்கலாம். நாம் எறங்கி என்று சொல்வதை அவர்கள் இறங்கி என்று சரியாக உச்சரிப்பார்கள். அவர்கள் அந்த தமிழில் நம்மை திட்டினாலும் கோபம் வராது. திட்டும் போதும் கூட அவர்களின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பேன். அவர் குர்ஆன் வகுப்பு எடுக்கும் போது நமக்குத் தெரியும் என்று சொல்லுவதற்குப் பதிலாக எங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பிப்பார். அப்போது நான் மெளலவி உங்களுக்கு தெரியும் .ஆனால் எங்களுக்கு தெரியாதுல்லே என்று சீண்டுவேன்.
சில நேரங்களில் பஞ்சாயத்துக்கள் அவரிடம் வரும். பாதிக்கப்பட இலங்கை,பிலிப்பினி, இந்தோனேஷியா பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விவாகரங்களாக இருக்கும், சிலர் போனில் இவரை தொடர்பு கொள்வர்கள். ஒரே நாளில் பல இடங்களில் வகுப்பு எடுப்பதால் அவர் பிஸியாக இருப்பர் அதுபோன்ற சமயங்களில் என்னை அனுப்பி அவர்களை சந்திக்க சொல்வார். அப்படி ஒரு நாள் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவரை சந்தித்தேன்.
இலங்கை ரெஸ்டராண்ட் போ அங்கு அந்த பெண் வருவார். இந்தா நம்பர் என்று அவரின் மொபைல் நம்பரை தந்தார்.அங்கு காத்திருந்தேன் மொபைல் சினுங்கியது. அஸ்ஸாமு அலைக்கும் என்று ஸலாம் சொன்னார் ஸலாம் தவறாக சொல்லும் போதே கவனித்தேன். அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் சாந்தியும் சமாதனமும் உண்டதாவதாக என்று பொருள். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்கள் மீது மரணம் உண்டாவதாக என்று பொருள்.(இதுபோன்று முஹம்மது நபி (ஸல்) காலத்தில் யூதர்கள் அறிந்தே சொன்ன வரலாறு உண்டு.) தன்னை பாத்திமா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் வெளியில் நிற்கிறேன் என்றார். சரி இதோ வருகிறேன் என்று நான் வெளியேறும் போதே அவரை பார்த்து விட்டேன். பதட்டத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்.
சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு மவுனமாக இருந்தார் தலைகுனிந்து இருந்தார். மறுபடியும் கேட்டேன் என்ன பிரச்சனை உங்களுக்கு சும்மா சொல்லுங்க உங்க கூடப் பிறந்த சகோதரனாக நினைத்து சொல்லுங்க. எங்களால் முடிந்தால் கண்டிப்பாக உதவுவோம்.
தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். நான் இங்கு ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்கிறேன் காலையிலிருந்து இரவு 12 மணி வரை வேலை என்றவரிடம். சரிங்க லேபர் வேலைக்கு வந்த எல்லோரும் அப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு பிரச்சனையா? என்றேன். நிமிர்ந்து பார்த்து கலங்கிய கண்களோடு பேச ஆரம்பித்தார் அது பிரச்சனை இல்லேண்ணே என் அரபி முதலாளிக்கு ஐந்து பசங்க. என்னை இரவில் தூங்க விடாம தினமும் மாறி மாறி வந்து............
அட வெறி நாய்களா! இதை அந்த வெறி நாய்களை பெற்ற தகப்பன் கிட்ட சொன்னீங்களா? என்று நான் கேட்க அவர் "சொல்லிட்டேன் கண்டுக் கொள்ளவேயில்லை. ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய் விட்டான் அந்த கிழவன். ஒரு நாள் நான் சமைக்கும் போது பின்புறமாக வந்து உரசிக் கொண்டு கட்டி புடித்தான். நான் எதிர்ப்பு தெரிவித்த போது என்னை ஒங்கி அறைந்து விட்டு தூக்கி கொண்டு போய்...............
என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு சவூதிச் சட்டப்படி தலையை வெட்டி விடுவார்கள் அப்படியிருந்தும் எப்படி துனிகிறார்கள்? என்ற கேள்வி மனதை துளைத்தது.
இந்தோனேஷியா பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்ததற்காக அரபியின் தலை வெட்டப்படுகிறது
ஆனால் அவரை என்ன செய்தாவது காப்பற்ற வேண்டும் என்று மனது துடித்தது. சரி நீங்க வீட்டுக்கு போங்க அரபி போன் நம்பர், ஏரியா அட்ரஸ் சொல்லுங்க நாளைக்கு வர்றோம்.
போன் நம்பரும் அட்ரஸும் கொடுத்து விட்டு போனார். அவரை அன்று அந்த வீட்டுக்கு அனுப்பக் கூட எனக்கு மனமில்லை. இன்றும் இரவு வருமே என்ன செய்வார் இவர் என்று நினைத்துக் கொண்டே மெளலவியிடம் விசயத்தை சொன்னேன் அவர் நாளை காலை அவனை சந்திப்போம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை அவளின் அலறல் சத்தம் கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எப்போது விடியும் என்று காத்திருந்தேன்.
மறுநாள் காலை அவர் கொடுத்த அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து போய் சேர்ந்தோம். மெளலவி காரை பார்க் பன்னி விட்டு வந்து விடுகிறேன். நீ முன்னாடி போயி அவன் கிட்ட பேசிக்கிட்டு இரு நான் வந்து விடுகிறேன் என்று காரை நிறுத்த போய் விட்டார். நான் கதவை தட்டினேன். ரிமோட்டால் உட்கார்ந்து கொண்டே கதவை திறந்தவர் (பத்தல்) உள்ளே வா என்றார்.
உள்ளே போனேன் என்ன விஷயம் என்ன வேனும். உங்க வீட்டுலே பாத்திமான்னு ஒரு பெண் வேலை பார்க்கிறாங்களே அவங்க என் சொந்தக்காரவுங்க அவங்க ஊருக்கு போகனும்னு சொல்றாங்க அவங்கள (ல்வு ஜாமா) தயவு செய்து அனுப்பி வையுங்கள்.(ஜஸாக்கல்லாஹ் கைர) அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை செய்வான் என்றேன்.
கோபம் தலைக்கேறிய கிழட்டு அரபி (கஃல்ப் மீன் அந்தே ) நீ யாருடா நாயே அவ கள்ளகாதலணா, அவகூட எத்தனை தடவை படுத்தே என்று கத்திக் கொண்டே காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி எறிந்ததில் என் முகத்தில் பட்டு கிழே விழுந்தது.துப்பாக்கி எடுத்து உன்னை சுடுகிறேன் பாரு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது. மெளலவி உள்ளே வந்தார். ஏன் அவனை அடித்தாய் என்று அதட்டினார். நாங்க யார் தெரியுமா? அங்குள்ள பிரபலமான மதகுருவின் பெயரைச் சொல்லி அவரின் மாணவர்கள் என்றதும் அவன் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.
மௌலவி அவனை, ‘‘இன்னும் இரண்டு நாட்களில் வருவேன். அவள் ஊருக்கு போறதுக்கு டிக்கேட் எடுத்து வை. இல்லை, சட்டப்படி உன்னை சந்திப்பேன்’’ என்று எச்சரித்தார். அந்த பெண், அனைத்தையும் அழுத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாளே, பாத்திமாவிடமிருந்து போன். ‘‘அண்ணே, நான் வீட்டைவிட்டு ஒடிவந்து விட்டேன். இங்கே ஒரு ரெஸ்டாரென்டில் நிற்கிறேன். தயவு செய்து கூட்டிட்டு போங்கள்’’ என்றார்.
எனக்கு கோபமாக வந்தது. வீட்டு வேலைக்கு வருபவர்கள் சொந்த ஊர் திரும்பவேண்டும் என்றால், முதலாளி ஒப்புதல் தேவை. திருடிவிட்டதாகவோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவோ புகார் செய்தால் நமக்குத்தான் சிக்கல். ‘‘இரண்டு நாளில் முடியவேண்டிய காரியத்தை இப்படி பண்ணிட்டீங்களே’’ என்று கடிந்து கொண்டேன். பாத்திமாவின் உண்மையான பெயர், நிஷாந்தி. வேலைக்காக முஸ்லிம்போல நடித்திருக்கிறார்.
பிறகு நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி, விமான கட்டணம் வசூல் பண்ணி, நிஷாந்தியை ஏர்லங்கா பிளைட்டில் ஏற்றி விட்டோம். மனம் நிம்மதியடைந்தது. ஆனால், ஒரு நிமிடம்கூட அது நீடிக்கவில்லை. புதிதாக வந்திறங்கிய இலங்கை விமானத்திலிருந்து, கூட்டம் கூட்டமாக இலங்கை பெண்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
‘‘வளைகுடா நாடுகளுக்கு வரும் இலங்கை பெண்களில், ஆண்டுதோறும் குறைந்தது 100 பேராவது இயற்கை விபத்துக்கள், பாலியல் பாலத்கார கொலைகள், நேரடித் தக்குதல்கள் போன்றவற்றிக்கு பாலியாகி சடலமாக திரும்புகிறார்கள்.’’ என்கிறது இலங்கை காவல்துறை. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக ஆதிகாரப்பூர்வ செய்தியில், 2009&ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010&ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்நியச் செலவாணி என்ற ஒன்றுக்காக மட்டும் ஆண்டுதோறும் இப்படி நூற்றுகணக்கானவர்களை பலிகொடுத்து வருகிறது இலங்கை அரசு. இங்கே, வீட்டு வேலைக்காக வரும் பெண்கள், அரபிகளால் மட்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. அந்த வீட்டில் டிரைவர்களாக வேலை பார்க்கும் நம்மூர் ஆட்களாலும் சீரழிக்கப்படுகிறார்கள். இது மட்டுமில்லை. சில பெண்கள் முதலாளியின் கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். இவர்களை நம்மூர் ஆட்கள், குறிப்பாக கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி வைத்து, பலான தொழிலே செய்து வருகிறது.
பாலியல் பலாத்காரங்களுக்கு அரபுச் சட்டப்படி பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்கிறார்கள். அப்படி இருந்தும் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்தவரை இதற்கான அடிப்படைக் காரணம் முதிர் ‘கண்ணன்கள்’தான். இங்கே திருமணத்தின்போது, பெண்ணுக்குத்தான் வரதட்சனை கொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய பணக்காரனும், அவனுக்கு சமமான குடும்பத்தில் பெண் எடுத்து வரதட்சனை கொடுக்க தயங்குகிறான். அதே சமயம், வசதி குறைவான பெண்ணையும் அந்தஸ்து கருதி திருமணம் செய்வதில்லை. எனவே, சவுதி முழுக்க ஏகப்பட்ட முதிர்கண்ணன்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக்கொண்டால், நரகம்தான்.
‘‘சட்டம்தான் கடுமையாயிற்றே, நீங்கள் புகார் கொடுத்தால் என்ன?’’ என்று கேட்கலாம். நடைமுறையில் பல விஷயங்கள் நமக்கு சாத்தியமில்லை. பழங்குடி இனத்தவரை ஏவிவிட்டு நம்மைக் கொலை செய்யக்கூட அரபிகள் தயங்குவதில்லை. எனவேதான் வாயை மூடிக்கொண்டோம். வயிற்றுப் பிழைப்புக்காக வரும் பெண்ணொருத்தி, கடுமையான வேலைகளுக்கு நடுவே ஒவ்வொரு நாளும் ஐந்து பேரால் பலாத்காரத்துக்கு உள்ளாவதை நினைத்துப் பாருங்கள். இது ஒரு சாம்பிள்தான். கண்ணுக்கு தெரியாதவை ஏராளம்.
படத்தில் இருப்பவரின் பெயர் மனோகரன் பவானி (வயது 31)இரண்டு குழந்தைகளுக்கு தாய். நல்ல கண்பார்வையோடு இங்கு வந்தவர் இரண்டு வருட சம்பள பாக்கியை கேட்ட குற்றத்திறகாக அரபி ஒருவனால் கண்களில் ராசயன கலவையை ஊற்றப்பட்டு பார்வை இழந்து நாடு திரும்பி குருடாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
|
No comments:
Post a Comment