Tuesday, November 22, 2011

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் வரை நிம்மதியாக இருங்க...

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துரத்தும் நஷ்டக்கணக்கு... : புதிய கட்டண முறை, வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வு குறித்த மின் வாரியத்தின் கணிப்பு பட்டியலுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து, மாற்றமின்றி அமலுக்கு வந்தால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும்.அதேநேரம், 2012-13ம் நிதியாண்டிற்கான கணக்கில், 63,593 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆண்டு நஷ்டம், 14,500 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், வாரியத்திற்கு வரும் 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் போக, மீதமுள்ள 5,000 கோடி ரூபாய், மின் வாரிய நஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல், நிலக்கரி இறக்குமதி, வெளிச்சந்தை மின்சாரம், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பென்ஷன், தேய்மானம், பராமரிப்பு, மின்பகிர்மான இழப்பு ஆகிய செலவுகளை கணக்கிடும்போது, மின் கட்டணத்தை உயர்த்தினாலும், மின் வாரியம் மீள முடியாத நிலையையே காட்டுகிறது.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.

மக்களிடம் கருத்து கேட்பு...:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

No comments:

Post a Comment