சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றியை தக்க வைத்த, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அடைந்த மோசமான தோல்வியால், துவண்டுபோய் உள்ளனர். பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஓட்டு போட்ட வாக்காளர்கள், எம்.எல்.ஏ.,க்களை தேடும் நிலை தான் அதிகம் உள்ளது.
ராஜ்ஜியம்: தமிழகத்தில், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்த வேளையில், 2005ல் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு, தே.மு.தி.க., எனும் கட்சியை உருவாக்கினார் நடிகர் விஜயகாந்த். "அ.தி.மு.க.,- தி.மு.க., இரண்டு கட்சியுமே, ஊழல் நிறைந்த கட்சி, எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது; மக்களுடன் மட்டுமே கூட்டணி' என, மார்தட்டிக் கொண்டிருந்தார். பா.ம.க., போன்ற கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள் எல்லாம், தே.மு.தி.க.,வில் இணைந்து கட்சி பதவிகளை பிடித்தனர். தனியாக களமிறங்கி, ஓரளவு ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் தே.மு.தி.க., தனித்துவமிக்க கட்சியாக வளர்ந்துள்ளது என, போகும் இடமெல்லாம் விஜயகாந்த் கூறி வந்தார்.
பால பாடம்: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், கட்சி இல்லாமலே போய் விடும். கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் வற்புறுத்தலால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தனர். தேர்தலில், அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆளும் கட்சியாகவும், 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தன. ஆளுங்கட்சியின் தயவால், எப்படியும் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என, தே.மு.தி.க.,வினர் மனக்கணக்கு போட்டனர். இருப்பினும், சட்டசபையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியைப் பற்றி முன்னுரையுடன் பேசிய போது, எங்களுக்கு பால பாடம் நடத்த வேண்டாம் என, முதல்வர் கூறியதைக் கேட்டு, நொந்து போயினர்.உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, ஓரளவு உள்ளாட்சி பதவிகளில் அரியாசனம் ஏறலாம் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வேளையில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பைக் கேட்டு, விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க.,வினர், கதிகலங்கிப் போயினர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர்.
கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்கள், தாங்களும் தலைவர், கவுன்சிலர் பதவியில் அமரலாம் என நினைத்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவில், மோசமான தோல்வியைத் தழுவியதால், கட்சியின் நிலை என்ன என்பது தெரியாததால், கட்சியை விட்டே சென்று விடும் முடிவுக்கு பலர் வந்துள்ளனர்.
ரமணா: ஒரு சிலர், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். தேர்தலுக்குப் பின் ஆளுங்கட்சி தயவில், நாலு காசு பார்த்து விடலாம் என கணக்கு போட்டு செலவு அளித்த நிர்வாகிகள், செய்வதறியாது நிற்கின்றனர். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் நிலையோ பரிதாபமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த, "எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எந்த ஒரு கான்ட்ராக்டிலும் கமிஷன் வாங்கமாட்டார்கள். கமிஷன் வாங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிப்பேன்' என உறுதிமொழியளித்தார். லட்சக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற பிறகு, போட்ட காசை எடுக்க வேண்டாமா என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் முணகுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் எங்கே இருக்கின்றனர் என, பொதுமக்கள் தேடும் நிலை உள்ளது.மக்களின் அடிப்படை பிரச்னைகள், மக்கள் நலப்பணியாளர் நீக்கம், பஸ், பால் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆதரவாக, சாதாரண அமைப்புகளே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் போது, மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல், தே.மு.தி.க.,வினர் இருப்பது, பொதுமக்களையும், ஓட்டு போட்ட வாக்காளர்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
ஊமை விழிகள்: ஆரம்பத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் வலம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், இப்போது, "கப்சிப்' என உள்ளனர். தொகுதி பக்கமும் செல்வதில்லை. உள்ளாட்சி நிர்வாகிகள் கட்சி தாவும் நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களில் சிலர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக நேரம் பார்த்து வருகின்றனர். மக்கள் பிரச்னைக்காக போராடாத கட்சியினர், எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள். அரசியல் என்ன லாபம் பார்க்கும் வியாபார தலமா என, எதிர்க்கட்சியினர், தே.மு.தி.க.,வை கேலி செய்யும் நிலை உள்ளது. இதற்கிடையில், விஜயகாந்தின் நடவடிக்கையை வைத்து, அதிரடி நடவடிக்கையில் இறங்க, ஆளுங்கட்சி தரப்பிலும் காய் நகர்த்தும் படலம் துவங்கி விட்டது. கணிசமான எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் மூலம், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சிக்கல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுநாள் வரை, கட்சியினர் மத்தியில், நானே ராஜா, நானே மந்திரி என ராஜநடை போட்டு வந்த வல்லரசு, இப்போது தனது கட்சியின் பூந்தோட்டத்தை ( எம்.எல்.ஏ.,க்களை) பாதுகாக்க வேண்டி, காவல்காரனாக வலம் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கேயும் விருந்தா...:தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி அடைந்தவர்களுக்கு விருந்து வைத்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அவர்களை கட்சியிலேயே தொடர்ந்து நீடிக்க வைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.தேர்தலில் தோற்றவர்களைத் தேற்றவும், வெற்றி பெற்றவர்களை, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்க வைக்கும் புது வியூகத்தை, தே.மு.தி.க., தலைமை அரங்கேற்றி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலில் வெற்றி, தோல்வி அடைந்த நிர்வாகிகள், அதற்காக உழைத்த தொண்டர்களை வரவழைத்து விருந்து நடத்தப்படுகிறது. சமீபத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், புழலில் முதலில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய நான்கு சென்னை மாநகராட்சி மண்டலங்கள் இடம்பெறுகின்றன. அதனால், இந்த விருந்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற தே.மு.தி.க.,வினர் பலர் பங்கேற்றனர்.வழக்கமாக தே.மு.தி.க., விழாக்களில் மட்டன், சிக்கன் வறுவல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கார்த்திகை மாதம் என்பதால், அசைவ உணவுகளுக்கு பதில், "மஸ்ரூம்' பிரியாணி, முந்திரி அல்வா, பாதாம் கீர் ஆகிய சைவ உணவுகள் மட்டும் பறிமாறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.,விலும் இதேபோன்ற விழா அரங்கேறியுள்ளது. இவ்விழாவின் போது, விஜயகாந்த் எழுதிய வாசகங்கள் அடங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனர். சில மாவட்டங்களில் தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, "உற்சாக' விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாணியில் அடுத்தடுத்து விருந்தளித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருக்கிறது.
நாள் குறிச்சாச்சு நாளை மறுநாள் உண்ணாவிரதம் : பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து வரும் 24ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மதுரையில், நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் பேசிய அவர்,"விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார். அதன்படி வரும் 24ம்தேதி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அதேநாளில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment