சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.
எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.
ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.
மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.
|
No comments:
Post a Comment