எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், “அவன் இவன்” மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பாலா இயக்கத்தில் நானும், ஆர்யாவும் இணைந்து நடித்த “அவன் இவன்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.அந்த படத்தில் நான் 200 நாட்கள் நடித்தேன். அதுவும் ஒன்றரை கண் ஆசாமியாக. அப்படி நடித்தபோது எனக்கு ஏற்பட்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் கண் வலி மற்றும் தலை வலி தாங்க முடியாமல் அழுது இருக்கிறேன்.
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன். இதுதான் என் கடைசி படம் என நினைத்து நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் நடித்தபோது, உயிர் போய் விட்டதாகவே நினைத்தேன். எவ்வளவு சிரமமான காட்சியில் நடித்தாலும், பாலா யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். அவன் இவன் படத்தில், 70 அடி உயர மரத்தில் நான் எந்த பிடிமானமும் இல்லாமல் நடப்பது போல் ஒரு காட்சி. அதுவும், ஒன்றரை கண் உள்ளவனாக நடித்தேன். படத்தில் அது 400 அடி நீளம் வரும்.
அந்த காட்சியை டப்பிங்கில் பார்த்துவிட்டு பாலா அழுது விட்டார். தியேட்டருக்கு வெளியே வந்து, எப்படிடா நடிச்சே? என்று கேட்டு என் முதுகில் பலமாக அடித்துவிட்டு, சூப்பர்டா என்று பாராட்டினார். ஒன்றரை கண் உள்ள மனிதனாக இதுவரை யாரும் நடிக்கவில்லை என்பதால், கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அதற்கான முயற்சி நடக்கிறது.
அவன் இவன் படத்தில் நான் நடிப்பதற்கு ஆர்யா தான் காரணம். 16 வருடங்களாக நாங்கள் இருவரும் நண்பர்கள். அவன் ஒரு அதிசயப்பிறவி. அவனுக்கு கர்வம், தாழ்வு மனப்பான்மை இரண்டும் கிடையாது. சில காட்சிகளில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் பொறாமைப்படவில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு, இனிமேல் எப்படிப்பட்ட படங்களில் நடிப்பது? என்று தோன்றாமல் கதை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.
ஒரு மாறுதலுக்காக, பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறேன். இது, “சவுர்யம்” என்ற தெலுங்கு படத்தின் தழுவல். இப்போதைக்கு “பிரபாகரன்” என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்துக்காக, நான் அவசரப்படவில்லை. இன்னும் 2 வருடங்கள் போகட்டும் என்று விட்டுவிட்டேன் என்றார்.
|
No comments:
Post a Comment