கூகுள்  இணையத்தளம் கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத்  தளமாக உள்ள  நிலையில் இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும்  அதிகாரிகளுக்கு  தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.
இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில் இணையத் தேடல் வலைத்   தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282   அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.
அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு   தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக   கூகுள் கூறியுள்ளது.
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள்   குறித்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூடியூப் வீடியோ மற்றும்   வலைபூக்களை(blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள்   தெரிவித்துள்ளது.
கூகுள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர்   பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும்,   அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப்   பெறுவதற்காக இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த நபர்களைப் பற்றிய   விவரங்களைத் தரவில்லை என கூகுள் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில் 15   கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு   தொடர்பானவை.
ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்த வரை தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும்   என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகுள் நிறுவனத்துக்கு   கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நாடுகளில் இருந்தும்   கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள   விவரங்கள் தெரிவிக்கின்றன.
| 
 | 
No comments:
Post a Comment