Sunday, April 24, 2011

`ரப்பரின்’ கதை!


`ரப்பர்’ இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் முக்கியத்துவம் புரியும்! `ரப்பர்’, பல்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக வளர்ந்தது, அதன் தன்மையைப் போலவே `நீ…ளமானது’. 1800-களின் தொடக்கத்தில் நி இங்கிலாந்தில் வாழ்ந்தவர் சார்லஸ் குட் இயர். மரத்திலிருந்து கிடைக்கும் `ரப்பர்’ என்ற பொருளைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தார் அவர். நன்கு இழுக்கக்கூடியதாகவும், மீண்டும் பழைய நிலையை அடையக்கூடியதாகவும் ரப்பர் இருப்பது சார்லஸ் குட்இயருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ரப்பரால் `வாட்டர் புரூப்’ செய்யப்பட்ட புதுவகை பூட்ஸ்களையும், மழை கோட்களையும் அந்தக் காலத்தில் பலரும் வாங்கினார்கள். ஆனால் அந்தப் பொருட்கள் எல்லாம் கோடை காலத்தில் ஒட்டக் கூடியதாகவும், மழைக்காலத்தில் விரிசல் விடக்கூடியதாகவும் இருந்தன. எனவே ஆரம்பத்தில் அவற்றில் ஆர்வம் செலுத்தியவர்களும்கூட பின்னர் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

சார்லஸ் குட்இயருக்கு மட்டும் ரப்பர் மீதான ஆர்வம் குறையவே இல்லை. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ரப்பரில் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்த்து, அதை எப்போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க அவர் உழைத்தார். ரப்பரை மென்மையாக்க அதனுடன் டர்பன்டைன் கலக்கப்படுவதை குட்இயர் அறிந்தார். அதனால் வெவ்வெறு மென்மையாக்கும் பொருள்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தார். புதுவித ரப்பர் தயாரானவுடன் சுருட்டி வைத்துவிட்டுக் காத்திருப்பார். குளிர் காலம் வந்தவுடன் விரிசல் விழுகிறதா என்று சோதிப்பார். தோல்வி மேல் தோல்வி. அதனால் குட்இயர், பணத்தையெல்லாம் இழந்து ஏழையாகிப் போனார்.
குட்இயர் ஒருநாள் ரப்பரில் நைட்ரிக் அமிலத்தைக் கலந்தார். காத்திருந்தார். வெற்றி கிடைத்தது போல் இருந்தது. அவருடைய `அமில வாயு’ முறைக்கு காப்புரிமை கிடைத்தது. அமெரிக்க தபால்துறைக்கு புதிய ரப்பர் பைகள் தயாரிப்பதற்கான ஆர்டரும் கிடைத்தது. சில மாதங்களியே அந்தப் பைகள் ஒட்டிக்கொள்கின்றன என்று திருப்பி அனுப்பப்பட, குட்இயர் நொந்துபோய்விட்டார்.
குட்இயர் ஒருநாள் ரப்பரை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கொஞ்சம் கந்தகமும், வெள்ளை காரீயமும் அதில் விழுந்துவிட்டன. அப்போது அவர் அதைக் கவனிக்கவில்லை. மறுநாள் எடுத்துப் பார்த்தபோது அந்த ரப்பர், தோல் போல மென்மையாக இருந்தது. நன்றாக வளைந்தது. ஒட்டவும் இல்லை.
அந்த விபத்து, குட்இயரின் ஆராய்ச்சியை சரியான திசையில் திருப்பியது. வெப்பமும், வேதிப்பொருட்களும் சேர்ந்துதான் ரப்பரை பயன்படுத்தக்கூடியதாக மாற்றும் என்று அவர் அறிந்துகொண்டார். 1844-ல் அந்த முறைக்கு `வல்கனைசேஷன்’ என்று குட்இயர் காப்புரிமை பதிவு செய்தார். ரோமானிய நெருப்புக் கடவுளின் பெயர் `வல்கன்’ என்பதாகும்.

No comments:

Post a Comment