Friday, April 29, 2011

பொய் வழக்குப்போடும் மருமகளை தண்டிப்பது எப்படி?


மாப்பிள்ளை வீட்டார் நிரபராதிகள் என்றால் சட்டம் ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் (99%) வரதட்சணை வாங்கும் அல்லது மருமகளை கொடுமை செய்யும் குற்றவாளிகளே. அதனால்தான் நீங்கள் கூறியிருப்பதுபோல மாப்பிள்ளை வீட்டார் நிரபராதி என்று சொன்னாலும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யை நீங்களே ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் பிறகு சட்டம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இது எப்படி பொய் என்று பின்வரும் பதில்களில் விளக்கமாகப் புரியும்.

எனினும் இந்த சட்டத்தை எத்தனை பேர் சரியாக பயன் படுத்துகின்றார்கள்? எத்தனை பேர் இதனை முறைகேடாக பயன் படுத்துகின்றார்கள் ? 

இந்த சட்டங்கள் அனைத்தும் 100% சரியாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல மருமகள்கள் தங்களது அறியாமையால் இதை எப்படி பக்குவமாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் தவறு செய்துவிடுகிறார்கள். அதற்கு சிறு உதாரணம் சொல்கிறேன்: கணவனிடம் உள்ள பொருட்களை பெறுவதற்கு IPC406 என்ற குற்றப்பிரிவையும் சேர்க்க வேண்டும். ஆனால் தவறுதலாக சில மருமகள்கள் வெறும் IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் இவற்றை மட்டுமே பயன்படுத்துவதால் கணவன் வீட்டார் எங்களிடம் மருமகளின் பொருட்கள் எதுவுமே இல்லை. அதனால்தான் பாருங்கள் IPC406 இல்லை. வெறும் 498A மட்டும்தான் இருக்கிறது. அதனால் இது பொய் வழக்கு என்ற அவதூறு பேசிவருகிறார்கள்.

உங்களைப்போல இந்திய தலைமை நீதிபதியும் ஒருமுறை மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதாக கூறியதற்கு மருமகளின் அறியாமைதான் இதுபோன்ற மாயத்தோற்றத்திற்குக் காரணம் என்று தேசிய மருமகள் வாரியத் தலைவி இந்திய தலைமை நீதிபதிக்கே மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி அதற்கு எதுவும் மறுப்பு சொல்லவில்லை. தலைவி சொல்லியதுதான் உண்மை.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.(The Times of India, 1Feb 2009)

சரி அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவோரை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் . 

இதுதான் மிகமுக்கியமான கேள்வி.

எந்த மருமகளும் இந்த சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில்லை.

மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் என்பவை முழுவதும் மருமகள்களுக்காகவே இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டமாமேதைகளின் ஆலோசனைப்படி இயற்றப்பட்டு பிறகு பார்லிமெண்டின் இரு அவைகளிலும் பரிசீலனை செய்யப்பட்டு அகில இந்திய உறுப்பினர்கள் அனுமதித்த பிறகே சட்டமாகிறது. அதனை கடைசியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுமதி தந்த பிறகே நடைமுறைக்கு வருகிறது.

இப்படி இந்திய மாமேதைகளின் கடினமான பரிசீலணைக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் சட்டம் மருமகள்கள் முறைகேடாகப் பயன்படுத்தும் விதத்திலா இருக்கும்? இந்திய சட்டமேதைகளையும், தலைவர்களைம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

இந்த சட்டங்களை நீங்கள் ஒருமுறை கூர்ந்து கவனித்துப் படித்துப்பார்த்தால் இந்திய மருமகள்கள் அனைவரும் அப்பாவிகள், தவறே செய்யத் தெரியாதவர்கள் என்று உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்.

1. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று இந்த சட்டத்தில் எழுதிய சட்டமேதைகள் மருமகள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்திருந்தாலும் மருமகள் மீதோ, அவரது குடும்பத்தார் மீதோ எந்தவித சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அழுத்தமாக எழுதிவைத்திருக்கிறார்கள். அதே சமயம் கணவன் தன்னிடம் வரதட்சணை கேட்டதாக மருமகள் புகார் கொடுத்தால் கணவன்தான் தான் வரதட்சணை கேட்கவில்லை அல்லது வாங்கவில்லை என்று தன்னை நிரபராதி என்று நிரூபித்துக்கொள்ளவேண்டும். மருமகள் எந்தவித ஆதாரத்தையும் காட்டத்தேவையில்லை.

இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சட்டத்தை இயற்றிய மாமேதைகள் மருமகள்கள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். பிறகு உங்களது கேள்வி எப்படி எடுபடும்?

2. கணவன்களின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனதால் 1984ல் மீண்டும் நமது சட்ட மாமேதைகளும், பெருந்தலைவர்களும் IPC498A என்ற சிறப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்திலும் கணவனைச் சார்ந்த யார் மீதுவேண்டுமானாலும் மருமகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்ற முழு உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் மருமகள் பொய்வழக்குத் தொடர்ந்தால் அதற்கும் தண்டனை உண்டு என்று இந்த சட்டத்தில் ஒரு வரிகூட எழுதப்படவில்லை என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். மருமகள்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்ற நம்பிக்கையினால்தான் இப்படி ஒரு உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியத் தலைவர்களின் நம்பிக்கை தவறு என்கிறீர்களா?

3. இந்த சட்டங்கள் இருந்தாலும் கணவன்களின் கொடுமை தாளமுடியாமல் மருமகளின் நலன் விரும்பும் நமது தலைவர்கள் மீண்டும் 2005ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதிலும் மருமகள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் எளியோர்கள் என்றும், கணவன்கள் அனைவரும் வன்முறை மட்டுமே செய்யும் கொடிய மிருகங்கள் என்றும் வரையரை செய்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா சட்டங்களிலும் மருமகள்களுக்கு முழுச்சுதந்திரமும், நல்லவர்கள் என்ற முத்திரையையும் நம்நாட்டு சட்டமேதைகளும், தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது அவ்வளவு சாதாரண விஷயமா?

நீங்கள் கூறுவது போல மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் 1961 முதல் 2005 வரை எப்படி இதுபோல மருமகள்களுக்கு மட்டுமே சாதகமாக பல சட்டங்களை இயற்றியிருப்பார்கள்? நம்நாட்டுத்தலைவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்துதான் சட்டத்தை இயற்றுவார்கள்.

உண்மை நிலவரம் நாட்டில் இப்படி இருந்துகொண்டிருக்கும்போது மருமகள்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அவர்களை எப்படி தண்டிப்பது என்று அபாண்டமாக கேள்வி கேட்டிருக்கிறீர்களே?

உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். சிந்தித்துப் பாருங்கள். அப்போதுதான் மருமகள் அனைவரும் அப்பாவிகள், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், கணவன்கள்தான் தவறு செய்பவர்கள் என்று உங்களுக்கே புரியும்.

1. 1961 முதல் இன்றுவரை மருமகள்களுக்காக அடுக்கடுக்காக பல சிறப்புச் சட்டங்களை இயற்றிய அரசாங்கம் நீங்கள் கற்பனையாகக் கூறும் நிரபராதி மாப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் இயற்றவில்லையே? அது ஏன்?

மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அரசாங்கம் இன்றுவரை ஒரு சட்டம் கூட இயற்றவில்லை. ஆனால் மருமகள்கள் அனைவரும் நல்லவர்கள். 1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச்சட்டம் முதல் 2005ல் வந்துள்ள குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்வரை 1984ல் வந்த IPC498A உட்பட எந்த சட்டத்தையும் இன்றுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை. அதனால்தான் மருமகள்களின் பாதுகாப்பிற்காக அடுத்தடுத்து பல சட்டங்கள் வந்துள்ளன.

2. இங்கே இந்த பதிவில் நீங்கள் கேட்டிருப்பதுபோல உண்மையாகவே மாப்பிள்ளை வீட்டார் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் அரசாங்கத்திடம் இதுவரை தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தையும் கேட்கவில்லை?

மருமகள்கள் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நிரபராதி கணவன்களை சிறையில் அடைக்கிறார்கள் என்று இந்த பதிவிற்கே நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கும்போது உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை கூட்டத்தார் அரசாங்கத்திடம் என்றோ இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு பாதுகாப்பாக ஒரு சட்டத்தை கொண்டுவந்திருப்பார்களே! அதை இதுவரை யாரும் செய்யவில்லையே? அது ஏன்?

தவறு செய்யாமல் இருந்தால்தானே மாப்பிள்ளை தரப்பினர் தைரியமாக அரசாங்கத்திடம் கேட்கமுடியும்! அதனால் நீங்கள் கூறும் மாப்பிள்ளை கூட்டம் 100% தவறு செய்கிறார்கள் என்று நிரூபணமாகிவிட்டதல்லவா? அதனால்தான் தாங்கள் நிரபராதி என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மாப்பிள்ளை கூட்டத்தை சிறையில் தள்ளுகிறார்கள். இதுதான் உண்மை. இதற்கு மருமகள்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

3. ஏதோ சில வழக்குகளில் போனால் போகட்டும் என்று கணவனை மன்னித்து விடுவித்தால் அதை பொய் வழக்கு என்று சொல்வது முறையாகுமா?அப்படியே நீங்கள் கூறுவதுபோல மருமகள் பொய் வழக்குப்போட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். அப்படியிருக்கையில் பொய் வழக்குப் போட்டதாக எத்தனை மருமகள்கள் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

4. இந்தியாவில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் முதல், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வரதட்சணை வழக்குகள் செல்கின்றன. ஆனால், இதுவரை எந்த நீதிமன்றமும் பொய் வழக்கிற்காக மருமகளை தண்டித்து சிறைக்கு அனுப்பியதாக சரித்திரமே கிடையாது. அப்படியென்றால் நீதிமன்றங்கள் என்ன மருமகள்கள் போடும் பொய் வழக்குகளை வேலை வெட்டியின்றி நடத்திக்கொண்டு மருமகள்களே சபாஷ்! நன்றாகப் பொய்வழக்குப் போடுங்கள் என்று பொய் வழக்குகளை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனவா? இந்திய நீதிமன்றங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? கண்டிப்பாக இந்திய நீதிமன்றங்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள்.

5. அப்படியே நீதிமன்றங்கள் பொய் வழக்குப்போட்ட மருமகளை விட்டுவிட்டாலும் அந்த வழக்கிலிருந்து விடுதலையான நீங்கள் சொல்லும் “நிரபராதி கணவன்கள்” எத்தனை பேர் மறுவழக்குத் தொடர்ந்து பொய்யான புகார் கொடுத்த மருமகள் மீதும், அதற்குத் துணையாக பொய் வழக்குப்போட்ட காவல்துறை மீதும், பொய் வழக்கை தங்கள் மீது திணித்து வாழ்வை அழித்து சிறைக்கு அனுப்பிய அரசாங்கத்தின் மீதும் மானநஷ்ட வழக்கு போட்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அல்லது குறைந்தபட்சம் வழக்காவது தொடர்திருக்கிறார்களா?

இதற்கு உங்களிடம் இருக்கும் பதில் “ஒருவர்கூட இல்லை” என்பதுதான். நான் நிரபராதி என் மீது பொய் வரதட்சணை வழக்குப்போட்டுவிட்டார்கள் என்று சும்மா புலம்பிக்கொண்டிருக்கும் சிலரை பார்த்துவிட்டு நீங்கள் மருமகள்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால் மருமகள் பொய்வழக்குப்போடுகிறார், அவரை தண்டிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்காமல் கணவன்களையும், அவர்களது குடும்பத்தாரையும் மருமகள்களிடம் சரணடையச் செய்வது எப்படி என்று மாத்தியோசித்தால் கணவன்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

அறிவுப்பூர்வமாக தாங்கள் எழுப்பிய கேள்விக்கு மிக்க நன்றி. இதுபோல தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் தயங்காமல் எழுதுங்கள். தங்களின் கேள்வி மூலம் பல மருமகள்கள் பலன் பெறுவார்கள். நன்றி!

வாழ்த்துக்கள்! 

No comments:

Post a Comment