Friday, April 29, 2011

சிக்கல்!ஆன்லைன் தொழில்நுட்பத்தில் கோளாறு : புது ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு தாமதம்

ஆன்லைன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருப்பூர் பகுதியில் இருந்து விண்ணப்பிக்கும் புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டு தருவிப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேலும் பல மாதங்கள் விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூரின் இடப்பெயர்வு மக்கள் தொகை, குடிமைப்பொருள் துறையை பாடாய்ப்படுத்தி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்த நடவடிக்கைகளுக்காக திருப்பூர் குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகம் முன் காத்திருக்கின்றனர்.பெயரளவுக்கு மாவட்ட அந்தஸ்தை வழங்கிய தமிழக அரசோ, தேவையான அதிகாரிகளை நியமிக்காமல் பாராமுகமாய் இருக்கிறது. மாவட்ட அந்தஸ்து வழங்குவதற்குப்பதில், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும்.பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக திருப்பூரை மாநகராட்சியாகவும், சுற்றுப்பகுதிகளை உள்ளடக்கி மாவட்ட நிர்வாகமாகவும் அறிவித்து விட்டது அரசு.

திருப்பூர் நகரின் மக்கள் அடர்த்திக்குமுன், தற்போதைய அரசு இயந்திரங்கள் நகர முடியாமல் உள்ளன. தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்; குடிமைப்பொருள் அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.அதிகபட்சம் 60 நாளில் முடிய வேண்டிய வேலையை, இரண்டு ஆண்டுகளாகியும் தற்போதைய நிலை என்ன என்று கூட அறிய முடியாத அளவுக்கு, குடிமைப் பொருள் துறை “சுறுசுறுப்பாக’ செயலாற்றுகிறது. புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால், இருக்கும் அசல் சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு, அலைவதுதான் மிச்சமாகிறது.கலெக்டர் ஆய்வு செய்த போது, 8,000 விண்ணப்பங்கள் வரை தேங் கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளில், திருப்பூர் தாலுகாவில் மட்டும் 6,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இன்னும் ரேஷன் கார்டு வராதவர்கள் பலர் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக அலைக் கழிக்கப்படுபவர்களும் உள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப் பங்கள், ஆன்லைன் மூலம் “அப்டேட்’ செய்யப்பட வில்லை. திருப்பூர் தாலுகாவில் பெறப்படும் விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் “அப்டேட்’ செய்யப்படும். இதற்கான சர்வர், கடந்த இரு மாதங்களாக பழுதடைந்திருப்பதால், திருப்பூருக்கான விண்ணப்பங்களை “டேட்டா என்ட்ரி’ செய்ய இயலவில்லை. இதனால், கடந்த இரு மாதங்களாக அச்சிடப்படுவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியவில்லை.

திருப்பூருக்கான ரேஷன் கார்டுகள், கோவை “எல்காட்’ பிரிவில் அச்சிடப் படுகின்றன. கடந்த 10 மாதங்களாக செம்மொழி மாநாட்டு பணியில் “பிசி’யாக இருந்ததால், புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடுவது தாமதமானது. இந்நிலையில், கம்ப்யூட்டர் தொழில் நுட்பக்கோளாறு, திருப்பூர்வாசிகளை மேலும் அலைக்கழித்து வருகிறது.குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “சர்வர் பிரச்னை காரணமாக, டேட்டா என்ட்ரி செய்ய முடியவில்லை. நேற்றுடன் இப்பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது. புதிய கார்டுகளை சிலர் வாங்கிச் செல்லவில்லை. முகவரியில் அவர்கள் இல்லை என தெரிகிறது. அவற்றை உடனடியாக “கேன்சல்’ செய்ய விரும்பவில்லை.”மறுவாய்ப்பு அளிக்கப்பட்டு, உரியவர்களிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்காட் பிரிவு திருப்பூரில் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. விரைவில் ரேஷன் கார்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,’ என்றனர்

No comments:

Post a Comment