சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்து, செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போது, தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
'இந்தியாவில் ஆண்டுதோறும் 90,000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 10,000 பேர் இருக்கின்றனர். இவர்களில் 22.5 சதவிகிதம் நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 2.5 சதவிகிதம் நபர்களுக்குத்தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கப் பலர் முன் வந்தாலும், அதில் 25 சதவிகிதம் பேரின் சிறுநீரகங்கள்தான் தானமாகப் பெறத் தகுதியுடையதாக உள்ளன!’ என்று நேஷனல் கிட்னி ஃபவுண்டேஷன் இந்தியா தகவல் தெரிவிக்கிறது.
தானமாகப் பெறும் சிறுநீரகத்தை உடல் ஏற்றுக்கொள்வதிலும் பிரச்னை உள்ளது. உடலுக்கு சம்பந்தம் இல்லாத பொருள் என்று பெரும்பாலான நேரங்களில் தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தை நிராகரித்துவிடுகிறது. இந்தக் குறைபாடு புதிய ஸ்டெம்செல் தொழில்நுட்பம் காரணமாக நீக்கப்படுகிறது. அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் இருந்தே சிறுநீரகம் வளர்க்கப்படுவதால், உடலால் நிராகரிக்கப்படும் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜெமி டேவிஸ் கூறுகையில். ''உடல் உறுப்பு செயற்கையாக உருவாக்குவதை அறிவியல் உலகின் கற்பனை என்று முன்னர் சொல்வார்கள், ஆனால், அது இப்போது சாத்தியமாகிவிட்டது. தாயின் கருவறையில் உருவாவதுபோன்றே, சிக்கலான சிறுநீரகத்தை உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். தாயின் கருவறையில் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் உள்ள ஸ்டெம் செல் மற்றும் விலங்கின் திசுக்களைப் பயன்படுத்தி, சிறுநீரகத்தை உருவாக்கி, வளர்த்து வருகிறோம். இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவடைந்து, மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற அளவுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், இதற்கு அதிகச் செலவாகும் என்று கருத வேண்டாம். சிறுநீரக நோயாளி ஒருவர் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்துகொண்டே இருப்பதைக் காட்டிலும் செலவு குறைவாகத்தான் இருக்கும்!'' என்றார்.
இந்தியாவில் இதன் சாத்தியம் குறித்து லைஃப் செல் இன்டர்நேஷனல் முதன்மை விஞ்ஞானி டாக்டர் அஜித்குமார் கூறுகையில், ''ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் போன்று பல்வேறு உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. மனித சமுதாயத்தின் எதிர்கால நம்பிக்கையாக, இந்தத் தொழில்நுட்பம் விளங்கும். ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்லுக்கே முக்கியத்துவம் இருந்தது. தற்போது, தொப்புள்கொடி, பனிக்குட நீர் என்று முன்னேற்றம் கண்டுள்ளது.
இங்கிலாந்தில், கருநீர் என்று சொல்லப்படும் பனிக்குட நீரில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்
செல் மற்றும் விலங்குகளின் திசுவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லைக்கொண்டு, சிறுநீரகத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவே, மனிதனின் தொப்புள்கொடி திசு மற்றும் பனிக்குட நீர் இரண்டையும் சேர்த்துச் செய்யும்போது, ரிசல்ட் இன்னும் நன்றாக இருக்கும். இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, உறுப்பு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் காத்துக்கிடக்கின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம் வெளிநாட்டில் அறிமுகமான உடனேயே, இங்கேயும் வந்துவிடும். இந்திய அரசும் இதற்கு ஆதரவு அளிக்கும். எப்படி தொலைத் தொடர்புத் துறைக்கு டிராய், பங்குச் சந்தைக்கு செபி உள்ளதோ, அதே போன்று ஸ்டெம் செல் ஆராய்ச்சியை ஒழுங்குபடுத்த ஓர் அமைப்பை மத்திய அரசு உருவாக்க உள்ளது. இதன் பிறகு, இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மேலும் மேம்படும். சிறுநீரகம் வளர்த்து எடுக்கும் தொழில்நுட்பம், நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக டிசெல்லுலாரைசேஷன் என்று புதிய முறை வந்துவிடும் என்றே நாங்கள் கருதுகிறோம். டிசெல்லுலாரைசேஷன் என்பது இதய நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும். இந்த முறையில், நோயாளியின் பழுதுபட்ட இதயத்தில் உள்ள செல்லை செயல் இழக்கச் செய்துவிட்டு, அவரது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, இதயத்தில் செலுத்தி செயல்படவைக்க முடியும். அவர் உடலில் ஸ்டெம் செல் கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு பொருந்தக்கூடிய நன்கொடையாளரிடம் இருந்து ஸ்டெம் செல் எடுத்தும் செயல்படுத்த முடியும். இதனால், நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைவு!'' என்றார்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் போதிய அளவு உடல் உறுப்புகள் தானமாகக் கிடைக்காததால், பல நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளும் உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர். அமெரிக்காவில் மனித இதயத்தை உருவாக்கும் முயற்சியிலும், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணின் கருவிழியை உருவாக்கும் முயற்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்!
|
No comments:
Post a Comment