Tuesday, December 14, 2010

ஒளிமயமற்ற எதிர்காலம்......... சிறுகதை.

செல்போன் ஒலித்தது. கவிதாவுக்கு தெரியும். யார் பேசக்கூடும் என்று. போனை எடுப்பதா, வேணாம்மா என்று யோசித்தாள். படுத்து இருந்தவள் எட்டி போனை எடுத்தாள். நம்பரை பார்த்தாள். நிர்மல் தான். கை நடுங்கியது. என்ன பதில் சொல்லப் போகிறேன். ஏதோ ஒரு பொய் சொல்ல முடிவு பண்ணினாள். "ஹலோ" என்றாள்.

"என்ன ரெண்டு நாளா டிமிக்கி கொடுத்துட்டு இருக்கே." நிர்மல் கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆபிஸ்ல வேலை ஜாஸ்தி" என்றாள். "என்னை வந்து பார்க்கிறத விட, உனக்கென்ன .................... வேலையா" என்று கேட்டான். காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மிக மிக அநாகரீகமான, அருவருக்கத்தக்க வார்த்தை. "நாளைக்கு ஈவினிங் வா. அப்படி மூணு நாளா என்னை பார்க்கக்கூட வர முடியாத அளவுக்கு ................. வேலை " போனை வைத்து விட்டான். கவிதாவும் வைத்தாள். எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தை. 

யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று கூட தெரியவில்லை. அதுவும் தன்னிடம், கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவளிடம் எப்படி பேச வேண்டும் என்கிற நாகரீகம் கூட தெரியாதா... இப்படி பேசுபவர்களை கண்டாலே தனக்கு பிடிக்காது. ஆனால், இது மாதிரி பேசுவதே அவனது சுபாவமாக இருந்தது. இப்படி பேசுதலையே, ஆண்மையாக நினைத்து கொண்டிருக்கிறான். பயமாய் இருந்தது- மொத்த வாழ்க்கையையும்
நினைத்து. எப்படி வாழப் போகிறோம்- இவனோடு. இது தான் தலையெழுத்தா.

மொத்த வாழ்க்கையின் மூன்றிலொரு பகுதியை தான் வாழ்ந்து முடித்து இருக்கிறோம்... அன்புள்ள அப்பாவுடன்... அன்புள்ள அம்மாவுடன்... மீதமுள்ள வாழ்க்கையை எப்படி கழிக்கப் போகிறேன்- இந்த அன்பில்லாதவனுடன். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், நம் குணத்திற்கு பொருத்தமற்றவர்களுடன் மாட்டிக் கொள்ளுதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகத்தான் உள்ளது.

மனதுக்குள்ளேயே அழுது கொண்டு இருக்கிறேன். என்ன செய்யப் போகிறோம் என்பதை உணர முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன். இந்த சில நாட்களாக அலுவலகப் பணிகளில் கூட கவனம் செலுத்த இயலாத அளவுக்கு, மனதை சங்கடங்கள்ஆக்ரமிக்க- அதன் காரணமாக பணியிடத்தில் வசவுகள்... தோழிகளின் கேலி பேச்சுக்கள். "புதுப் பொண்ணுக்கு கல்யாண கனவை பாரேன்"...

தோழிகள் சொல்வது மாதிரி கனவு வரத்தான் செய்கிறது. வருவது கல்யாணக் கனவல்ல. கெட்ட கெட்ட கனவு. என்னை யாரோ திண்பது மாதிரி கனவு. அப்பாவும், அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டார்கள்-
குசு குசுவென்று. "ஏன்டா ஒரு மாதிரியா இருக்க" அப்பா கேட்டார். "ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரியா தான் இருக்கா. கேட்டா ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்லங்கிறா" என்றாள் அம்மா. என் பயங்களை அவர்களுக்குள் விதைத்து அவர்களையும் கவலைக்குரியவர்களாக மாற்ற விரும்பவில்லை. 

அதனால் "ஒண்ணுமில்லப்பா" என்று மட்டும் சொல்லி விட்டு படுத்து கொண்டேன். இந்த ஒரு மாத நிகழ்வுகள், கண் முன்னே திரைப்படம் போல் ஓடியது. சென்ற மாதம் எட்டாம் தேதி, நிர்மல் பெண் பார்க்க வந்து இருந்தான். யாரையும் வசீகரிக்கக் கூடிய அழகு கொண்டவனாக இருந்தான். நான் அழகு தான். ஆனால் அவன் அளவுக்கு, என்னிடம் எந்த வசீகரமும் கிடையாது. எல்லோருக்கும் எங்களை பிடித்துப் போனது. உடனடியாக திருமண தேதி முடிவு பண்ணுவதில் மட்டும் ஒரு
சிக்கல் இருந்தது. 

நிர்மலின் மூத்த சகோதரி, அமெரிக்காவில் இருக்க, அவர்களுக்கு லீவ் கிடைத்து, அவர்கள் வரும் சமயமாக பார்த்து திருமணத் தேதி முடிவு பண்ண வேண்டும். மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால், மணமக்கள் சந்தித்து பேசிக் கொள்வதில், எந்த தடையுமில்லை என்பதால், தினசரி சந்திப்பு துவங்கியது. அவளது அலுவலகத்திற்கு வந்து அழைத்து செல்வான். எங்காவது வண்டியை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டு நடப்பார்கள். பிறகு காபி ஷாப்பில் கொஞ்ச நேரம்...

ஒரு நாள் கோவில், மறுநாள் பீச் என்கிற ரீதியில் ஒரு வார காலம் ஓடிய பின், கவிதாவின் மனதில் முதல் முதலாக ஒரு நெருடல். அது அவனது குணம் குறித்தான ஒரு நெருடல். ஒரு நாள் பீச்சில், "இந்தாடி ஐஸ்" என்று ஐஸ் வாங்கி கொடுத்தான். "இந்தாடியா" அப்படியா அழைத்தான் அல்லது தான் சரியாக காதில் வாங்க வில்லையோ அல்லது செல்லமாக "டி " போடுகிறானோ. செல்லமாக அழைத்தால் சரி. மற்றப்படி "டி" என்பது பிடிக்காத வார்த்தை- தனக்கு. 

மறு நாள். "ரெம்ப பசிக்குது" என்று ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்தான். "மதியம் சாப்பிட வீட்டுக்கு போனேன். இன்னிக்கு சாப்பாடு சரியில்ல பாரு. சாப்பாடு தட்டு பறந்துருச்சு. எனக்கு சாப்பாடு ருசியா, நல்லா செய்யணும். இல்ல கோபம் பயங்கரம்மா வரும். நீயும் ஞாபகம்
வைச்சுக்கோ. நல்லா சமைப்பீயா" என்று கேட்டான். "ஒரளவுக்கு சமைப்பேன்" என்றேன். "நல்லா கத்துக்க. மனுஷன் சம்பாதிக்கிறதே நல்லா சாப்பிடத்தான். அத ஒழுங்கா செய்ய முடியலன்னா அப்புறம் எப்படி" என்றவன் தொடர்ந்து, "பொம்பளைகளுக்கு சமைக்கக் கூடத் தெரியலன்னா அப்புறம் எப்படி. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா- என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக தான் டி சொல்றேன்" என்றான்.


மீண்டும் "டி". அப்பா சாப்பாட்டிற்காக ஒரு நாளும் கடிந்து கொண்டதில்லை. என்றேனும் அம்மாவால் சரியாக சமைக்க முடியாமல்
போனால் கூட, "அதனால் என்ன. ஒரு மணி நேரம் கிச்சன்ல கஷ்டப்பட்டுட்டு வர்றே. நா சுலபமா நல்லா இல்லன்னு சொல்றதுல என்ன இருக்கு. நீ வேணும்னேவா அப்படி செய்யப் போறே." என்பார் அப்பா, இருவருக்கும் இடையே பெரிய மௌனம் நிலை கொண்டது. 

"என்ன பேசாம்ம வர்றே... பயந்துட்டீயா" என்று கேட்டான்.
"இல்ல" என்பது போல் தலை அசைத்தாள். "என்னை "டி" போட்டு பேசாதீங்க" என்றாள். 
"ஏன். சொன்னா என்ன. நா என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது. நா அடுத்த பொம்பளயவா கூப்பிடுறேன். எம் பொண்டாட்டிய தானே கூப்பிடுறேன்" என்று சொன்னான். மீண்டும் இருவரிடையே கணமான மௌனம். விடை பெறும் போது, "நாளைக்கு பார்ப்போம் டி" என்று சிரித்தான். சும்மா வீம்புக்காக, "நா அப்படித்தான் கூப்பிடுவேன்" என்கிற ரீதியில் கூப்பிட்டு பார்த்தான்.

இந்த ஒரு வார உறவு, நிறைய விஷயங்களை, தெரியப்படுத்தி விட்டது. யார் எப்படி என்பதை. அழகை தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளன.
அழகு சோறு போடாது. அழகு தோழமையை தந்து விடாது. கல்யாணத்துக்கு முன்பு, சந்தித்து கொள்ளும் தன்னை மாதிரியான ஜோடிகள், என்ன வெல்லாம் பேசி கொள்வார்கள். கோபம், சண்டை இதெல்லாம் வருமா. தங்களுக்குள் எத்தனை அபிப்பிராய பேதம் வருகிறது. தவறு யாரிடம் 

"தான் சொல்வது சரியோ... தவறோ... அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்கிற மனநிலை, மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு சரியாக வருமா... அன்று எனக்கு உடல் நிலை சரியில்லை. மாலையில், அவனோடு வெளியில் சுற்றுமளவுக்கு, உடலில் வலிமை இல்லை. போன்
பண்ணி சொன்னாள். அவன் படக்கென்று போனை வைத்து விட்டான். கோபமாம். மறுநாளும் சரி வர பேசவில்லை. கஷ்டமாக இருந்தது. தான் ஏதோ தப்பு செய்தது போலவும், அதற்கு தண்டனை அளிப்பது போல் அவன பாராமுகமாய் இருப்பது, இதயத்தை வலியடைய செய்தது.

யாரும் என்னோடு பேசாமல் இருப்பதை ஒரு போதும் விரும்பாதவள் நான். யாரேனும் பகை காட்டினால் கூட, அந்த பகையை வலுக் கட்டாயமாக முறிக்க விரும்புபவள். அடுத்த இரண்டு நாட்களும் சரியாக
பேசவில்லை. ஏதோ ஒரு ஒப்புக்கு, சந்தித்தே ஆக வேண்டும் என்கிற ரீதியில் சந்திப்புகள் தொடர்ந்தன. அவனுக்கு எப்படியோ, ஆனால் தனக்கு இந்த சந்திப்புகளால் யாதொரு மகிழ்ச்சியும் கிடைப்பதாக தெரியவில்லை. அவனை குறை சொல்வதல்ல, தன் நோக்கம். 

அடுத்து வந்த நாட்களில் சில விஷயங்கள் பிடிபட்டன. இருவருமே இரண்டு துருவங்கள் என்பது. அலட்சியம், பாராமுகம், கொஞ்சம் பித்தாலாட்டம் என்பதாக இருந்தது- அவனது குணம். கண்ணுக்கு தெரியாத
ஒரு வலையில் சிக்கி கொண்டதாக தோன்றியது. இருவரும் முரண் பட்ட மனநிலை படைத்தவர்கள் என்பதை முழுமையாக உணர முடிந்தது. மணமான சில நாட்களிலேயே, மண முறிவுகள் ஏற்படுவதற்கு, இம் மாதிரியான முரண்களே காரணமா. இருக்கலாம்.

யாரும் வீம்புக்காக விவாகரத்து செய்ய போவதில்லையே. தினம் செத்து செத்து பிழைக்கும் மனநிலைக்கல்லவா நான் தள்ளப்பட்டிருக்கிறேன். அப்பா, அம்மாவிடம் இது குறித்து பேசினால், அவர்களால் என்னை புரிந்து கொள்ள முடியமா. வேறு எவரிடமாவது ஆலோசனை கேட்டால், "போக போக சரியாயிடும். நீ தேவையில்லாம்ம கற்பனை பண்றே" என்று சொல்வார்களோ. ஒரு வேளை, நான் தான் ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துகிறேனோ. இல்லை. இல்லை.

முற்றிலும் இரு வேறு குணம் படைத்தவர்கள், சேர்ந்து வாழுவதாக இருப்பின், ஒருவர் சகிப்புத்தன்மை என்கிற பெயரில், அடிமையாக வாழ வேண்டி வரும். அப்படி இருந்தால் தான் வாழ முடியும். அது தான் நிதர்சனம். இப்போதெல்லாம் நிர்மலை பார்க்கவே அச்சமாக இருந்தது. ஆனாலும் சந்தித்தாக வேண்டுமே என்பதற்காக சந்தித்தேன். 

அவனிடம் தன் மாதிரியான சிந்தனைகள் இல்லை என்றாலும், அவனது
ஆளுமை இறுகி கொண்டு வந்தது. கடைசியாக ஒரு நாள், அவனை பற்றி முழுமையாக உணர முடிந்தது. அவன் ஒரு "சாடிஸ்ட்" என்பதை. 

ப்பா தொடர்ந்து கேட்டார். கடைசியில் கெஞ்சும் விதமாக கேட்டார். "நீ நீயாக இல்லை. என்ன காரணம்". எனக்கு ஒரு பயம் இருந்தது. அப்பாவோ, அம்மாவோ என்னை புரிந்து கொள்ளாமல், "சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சிந்தனையாய்", தன் பிரச்சனைகளை
நினைத்து விட்டால்... 

சரி அப்பாவிடம் சொல்வோம். அப்பா, அம்மாவுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. அவர்கள் தன் குழப்பத்தை தீர்த்து வைக்கக்கூடும்,
சரியோ, தவறோ- அவர்கள் சொல்வதை கேட்போம் என்று நினைத்து- எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன். மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. மனப்பாரம் சற்று குறைந்த மாதிரி இருந்தது.

"எவ்வளவு பெரிய மன அழுத்தத்துல நீ இருந்து இருக்க- " இவ்வளவு நாளா... சிறுபிள்ளைத்தனம்மா நீ இதை சொல்லல. இம்மாதிரியான மனிதர்களோட வாழுவது கடினம். எங்க ஒரே மகளை நாங்க இழக்க
முடியுமா. நாங்க எல்லாம் இல்லாமலா போயிட்டோம். "

"நீ எல்லாத்தையும் உனக்குள்ள வைச்சு, வைச்சு அழுத்தி, அழுத்தி- பிரமை பிடிச்சவ மாதிரியாயிட்டே. யாருக்கும் தெரியும். இப்படியொரு பிரச்சனை வரும்னு. அடுத்த என்ன பண்ணுங்கிறதை நாங்க பார்த்துக்கிறோம். நீ போய் நிம்மதியா தூங்கு" என்றார் அப்பா. 

வெகு நாட்கள் கட்டப்பட்டிருந்த விலங்கு, அறுந்தது போல் இருந்தது

No comments:

Post a Comment