Monday, December 5, 2011

திரையை விலக்கி...! எச்.ஐ.வியோடு வாழும் பெண்ணின் உணர்வுகளின் உடைப்பு!!(படங்கள் இணைப்பு)


முதலில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. உலகிலுள்ள எல்லா ஆண்கள் மீதும் இனம் புரியாத கோபம் வந்தது. இந்தக் கோபத்தில் என்னால் முடிந்தவரைக்கும் ஆண்களுக்கு எய்ட்ஸை பரப்பவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. ஆனாலும் அந்த எண்ணம் மாற்றம் அடைந்து, குடும்பத்தோடு தற்கொலை செய்யத் தீர்மானித்தேன்.

எய்ட்ஸ்' என்ற உடனேயே இனம் புரியாத அச்சம் எல்லோரிடத்தும் ஏற்பட்டு விடும். போருக்குப் பின்னான சூழலில் எய்ட்ஸ் நோயின் பரவுகை வேகம் நமது பிரதேசத்தில் ஏறுமுகம் கண்டுள்ளது. உலகிலேயே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் போலவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நோக்குவதே அனேகரது இயல்பாக இருக்கிறது. சமூகத்தின் நச்சுப்பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக எந்தவொரு எய்ட்ஸ் நோயாளியும் தன்முகத்தை வெளிப்படுத்த விரும்புவதில்லை 
நோயாளியின் நலனுக்காக மருத்துவ வட்டாரங்களும் அவர்களை வெளிப்படுத்த முனைவதில்லை. ஆனாலும் துணிச்சலோடு அந்த இரும்புத் திரையை விலக்கிக்கொண்டு எய்ட்ஸ்க்கு எதிராக விழிப்புணர்வு செய்து வருகின்றார் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி தமிழ் (வயது 35) என்கின்ற எச்.ஐ.வியோடு வாழும்பெண். எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுக்காக சுகவாழ்வுக்கான பயணம், வட்டுக்கோட்டை அபிவிருத்தி நிறுவனம், சேவாலங்கா, அலையன்ஸ் அபிவிருத்தி நிலையம் மற்றும் பிராந்திய சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு கடந்த வாரம் வந்திருந்த எச்.ஐ.வியுடன் வாழும் பெண்ணை உதயன் வாசகர்களுக்காக நேர்கண்டோம். இந்த உரையாடலின்போது, " ஹோப் நிதியத்தைச் சேர்ந்த மருத்துவர் அசோக்குமார் பிரபாத்தும் கலந்து கொண்டார்.

கேள்வி: நீங்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட விடயம் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?

தமிழ்: எனது திருமணம் காதல் திருமணம். இரு வீட்டாரின் பெற்றோரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இதனால் கணவரின் பெற்றோரும், எனது பெற்றோரும் எங்களோடு உறவு கொண்டாடுவதில்லை. இருந்த போதிலும் மகிழ்வாகவே இருந்தோம். எங்கள் மகிழ்வின் அடையாளமாக சந்தோஷி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தோம். இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அந்த ஆனந்தத்தில் திளைத்திருக்கையில் தலையில் இடி விழுந்தது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 45 நாள்களில் திடீரென இறந்துபோனது. எங்களுக்கு அதிர்ச்சி. ஆனால் அதன் பின்னர் குழந்தை இறந்தமைக்கான காரணத்தை அறிய முற்பட்டபோதுதான் 1998 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நானும் என் கணவரும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதை அறிந்துகொண்டோம். என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்த தொடர்புதான் எங்கள் இருவருக்கும் எய்ட்ஸை பரிசளித்து விட்டது.



கேள்வி: உங்களுக்கு எய்ட்ஸ் என்று அறிந்துகொண்ட அந்த கணத்தில் உங்கள் மனோநிலை எப்படி இருந்தது?

தமிழ்: முதலில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருந்தது. உலகிலுள்ள எல்லா ஆண்கள் மீதும் இனம் புரியாத கோபம் வந்தது. எந்தப் பாவமும் செய்யாத எனக்கு கணவரின் தவறால் உயிர் கொல்லும் நோய் ஏற்பட்டு விட்டதே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே அது.இந்தக் கோபத்தில் என்னால் முடிந்தவரைக்கும் ஆண்களுக்கு எய்ட்ஸை பரப்பவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. ஆனாலும் அந்த எண்ணம் மாற்றம் அடைந்து, குடும்பத்தோடு தற்கொலை செய்யத் தீர்மானித்தேன். ஆனால் என் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொல்ல ஒரு தாயாக எனது மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. எங்களது குழந்தைக்காகவேனும் வாழமுடிவெடுத்தோம். ஆனால் அதன் பின்னர் நாங்கள் கொடுத்த விலை மிகப் பெரியது. அதுவரை சந்தித்திராத அவமானங்களையும், புறக்கணிப்பையும், கஷ்டத்தையும் நாங்கள் தாங்கவேண்டி இருந்தது.

கேள்வி: எத்தகைய புறக்கணிப்புக்கள், அவமானங்கள் உங்களை நோக்கி எய்யப்பட்டன?

தமிழ்: எங்களது உறவினர்கள் எல்லோருமே தீண்டத்தகாதவர்கள் போல் எம்மை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். தண்ணீர் எடுக்கும் பொதுக் குழாயைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த என்னுடைய மூத்த பிள்ளையை எங்களுக்கு எய்ட்ஸ் என்பதால், எந்தக் காரணமும் சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இதற்கிடையில் எனது கணவரும் இறந்து விட்டார். எனவே தொடர்ந்தும் ஊரில் இருந்தால் நான் மட்டுமல்லாது எனது குழந்தையும் இத்தகைய பாதிப்புக்களை சந்திக்கவேண்டி இருக்கும் எனவே குழந்தையின் எதிர்காலத்துக்காக எங்களைப்பற்றி அறிந்திராத நகரத்துக்கு குடி வந்தேன். எச்.ஐ.வி தொடர்பாக விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபடும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. எனது கணவர் எச்.ஐ.வி யால்தான் இறந்தார் என்ற உண்மையை மறைத்து அவர் மஞ்சள் காமாலை நோயால்தான் மரணித்தார் என்று சொல்லி மகளை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்தேன். சென்றாண்டுவரை அதனை எல்லோரும் நம்பினர். எனினும் கடந்த வருட இறுதியில் தொலைக்காட்சியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டதால் இப்போது எல்லோருக்கும் உண்மை தெரிந்துவிட்டது. எனினும் நான் பயந்ததுபோல் மகளை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தவில்லை. முன்னர் இருந்ததைவிட மக்களிடம் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதே இதற்கு காரணம் என நினைக்கிறேன்.

கேள்வி: நீங்கள் எச்.ஐ.வியோடு வாழ்வது உங்கள் மகளுக்கு எப்போது தெரியப்படுத்தினீர்கள்? அவளுக்கும் உங்களுக்கு இடையிலான உறவு நிலை பற்றி....

தமிழ்: சிறு வயதில் அவளுக்கு எச்.ஐ.வியை விளங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதனால் "அப்பாவைப்போல நானும் விரைவில் இறந்து விடுவேன். அதனால் உன்னுடைய வேலைகளை நீயே செய்யப்பழகிக்கொள்ள வேண்டும்" என்று கூறுவேன். மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஒரு தாய் பிள்ளைக்கு செய்யவேண்டிய பல வேலை களை தவிர்த்து, அதனை அவளே கற்றுச் செய்யும் படி வளர்த்தேன். எனினும் அவள் உலக விடயங்களை புரிந்துகொள்ளக் கூடிய நிலைக்கு வந்தவுடன் நான் எச்.ஐ.வி யுடன் வாழ்பவள் என்ற உண்மையை சொன்னேன். அவள் அதை பாரதூரமான விடயமாக நோக்கவில்லை . எனினும் மனதுக்குள் ஒரு கவலை அவளுக்கு இருக்கத்தான் செய்யும். நான் எப்போதும் தன்னை விட்டு பிரியக் கூடும் என்ற நினைப்பு அவளை வாட்டுகிறது. இப்போது அவள் ஒரு தாய்போல் என்னைப் பராமரிக்கிறாள்.

கேள்வி: நீங்கள் பணி புரியும் எய்ட்ஸ் உடன் வாழ்வோர் கூட்டமைப்பில் எத்தனைபேர் பயனாளிகளாக இருக்கிறார்கள்? உங்கள் நிறுவனத்தின் செயற்பாடுகள் எத்தகையன? 

தமிழ்: ஏறக்குறைய 2500 இற்கும் மேற்பட்டோர் எங்கள் அமைப்பின் மூலம் பயன் பெற்று வருகின்றார்கள். இவர்களில் 22 பேர் இலங்கை அகதிகள் என்பது முக்கியமான விடயம். இந்த அமைப்பை ராமபாண்டியன் என்பவர் 13 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கினார். 

அவரும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான். சமூகம் அவரை ஒதுக்கி, எய்ட்ஸ் நோயாளி என்று காறி உமிழ்ந்தது. எந்தவொரு ஆதரவான கரமும் அவரைத் தூக்கி விடவில்லை. எனவே தன்னைப்போல சமூகத்தின் இருளில் புதைந்து கிடக்கும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்காக அவர் எச்.ஐ.வியோடு வாழ்பவர்களின் கூட்டமைப்பை உருவாக்கினார். எச்.ஐ.வி. என்ற கொடிய எதிரியை நம்பிக்கையோடு எதிர்கொள்வது எப்படி என்பதை எங்கள் நிறுவனம் பயிற்றுவிக்கிறது. அந்தப் பயிற்சிகளின் விளைவாக எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கை அவர்களின் ஆயுளையும் அதிகரிக்கிறது. உதாரணமாக எனக்கு எச்.ஐ.வி தொற்று உண்டாகி 11 வருடங்களாகியும் சிகிச்சை எதுவும் பெறாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எங்கள் அமைப்பின் பயிற்சிகளே காரணம். அத்துடன் எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகள் தொடர்பாகவும் விளக்கமளித்து வருகின்றோம். குடும்பம் ஒன்றை அமைத்துக்கொள்ளல், குழந்தையொன்றை பெற்றுக்கொள்ளல், தமக்குரிய சிகிச்சைகளை பெறுதல் என்பன அவர்களுக்குரிய உரிமைகளாகும். இது பலருக்கு தெரியாமலே இருக்கிறது. எய்ட்ஸ் தொடர்பான சரியான விவரங்கள் பலருக்கு இன்னமும் தெரியாமல் இருக்கிறது. 

கேள்வி: எச்.ஐ.வியோடு வாழ்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாதா? 

அசோக்குமார்: இல்லை. முன்னர் அப்படித்தான் நம்பப்பட்டது. எனினும் நவீன மருத்துவ முறைகள் மூலம் எச்.ஐ. வி யோடு வாழும் தம்பதியருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லாத குழந்தைகளைப் பிரசவிக்கும் வழி ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய் மூலமாகவே எச்.ஐ.வி தொற்று ஏற்படுகிறது. பால் ஊட்டுதல், தொப்புள் கொடி மூலமான பரிமாற்றம், பிரசவத்தின் போதான இரத்தப் பரிமாற்றம் எனும் மூன்று காரணிகளே தாயிடமிருந்து சேய்க்கு எச்.ஐ.வி யை கொண்டு செல்கின்றன. இம் மூன்று காரணிகளையும் தடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை கிடைக்கிறது. 

ஆனால் இதற்கு அதிதீவிரமான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவை. குறிப்பாக சாதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தியே உடலுறவில் ஈடுபடும் இவர்கள் மருத்துவர்கள் நிர்ணயிக்கும் தினங்களில் மாத்திரமே இயல்பான உடலுறவை மேற்கொண்டு கருவை உருவாக்கலாம். அதிநவீன சிகிச்சைகள் மூலம் எச்.ஐ.வியின் வீரியம் குறைக்கப்பட்ட தினம் ஒன்றில்தான் கருவை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் ஏறக்குறைய இது ஒரு கூட்டு முயற்சி மூலமே சாத்தியமாகும்.

எனினும் உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் "ஸீரோ எய்ட்ஸ்'' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் எந்தவொரு எய்ட்ஸ் மரணமோ அல்லது எய்ட்ஸ் பரம்பலோ ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவுள்ளன. எய்ட்ஸ் இரத்தப் பரிமாற்றம் நிகழ்கின்ற சந்தர்ப்பங்கள் மூலமே அதிகம் பரவுகிறது. அதிலும் தவறான பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி தொற்றுக்கு பிரதான களத்தை அமைக்கிறது. எனவே திருமணத்துக்கு முன்னர் பாலியல் தொடர்பில் ஈடுபடுதல், திருமணத்துக்குப் பின்னர் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் உண்மைத் தன்மையோடு செயற்படல் என்பவற்றின் மூலம் எய்ட்ஸ் பரம்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இவ்விரண்டையும் சரியாக நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் தமது துணை தவிர்ந்த வேறு நபர்களுடன் உடலுறவு கொள்பவர்கள் ஆணுறையை பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போது எய்ட்ஸைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எங்களுக்குள்ள ஒரேஒரு ஆயுதம். 

கேள்வி: எச்.ஐ.வி தொற்றுள்ள ஆணும், எந்தவித பாதிப்புமில்லாத பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ முடியுமா?

அசோக்குமார்: உண்மையில் அது எச்.ஐ.வி பரவுகைக்கு வழிவகுக்கும்என்பதால் இதனை நாங்கள் ஆதரிப்பதில் லை. எனினும் குறித்த பெண் தன்னுடைய துணைக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரிந்தும் திருமணம் செய்யச் சம்மதித்தால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.


தமிழ்: இவ்வாறான ஒரு சம்பவத்தை நான் கையாண்டிருக்கின்றேன். அவர்கள் இருவரும் காதலர்கள். எனினும் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் அந்த இளைஞனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தது. எனவே அவளை வேறு திருமணம் செய்யச்சொல்லி அவன் வற்புறுத்தினான்.
எனினும் அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை இறுதியில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வியால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கி அவளின் முடிவை மாற்றுமாறு நான் உளவள ஆலோசனை வழங்கினேன். அதற்கும் சம்மதிக்காமல் இறுதியில் அந்த இளைஞனையே அந்தப் பெண் திருமணம் செய்தாள். கடவுள் கிருபையால் இதுவரைக்கும் அவளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லை. கூடவே ஆரோக்கியமான குழந்தை ஒன்றும் அவர்களுக்கு இருக்கிறது. எனினும் இத்தகைய திருமணங்கள் எப்போதுமே எச்.ஐ.வியின் பரவுகைக்கு வழிகோலுவதற்கான சந்தர்ப்பங்களையே கொண்டிருக்கின்றன. 


கேள்வி: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் அது பிறருக்கு பரவும் சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கச்செய்யாதா?

அசோக்குமார்: உண்மையில் நோயாளிகளை இந்த சமூகம் தன்னுடைய கொடூரப் பார்வையாலேயே கொன்றுவிடும் என்பதால்தான் எச். ஐ. வியால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் ரகசியமாகப் பேணப்படுகின்றன.எனினும் அவர்கள் (எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர்) தாங்களாகவே தங்களை எச்.ஐ.வியோடு வாழ்பவர்கள் என்று வெளிப்படுத்தும் அளவுக்கு உளரீதியான வழிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் ஒவ்வொரு எய்ட்ஸ் நோயாளரும் தம்மைப் பகிரங்கப்படுத்துவதோடு அது தொடர்ந்தும் பரவாமல் இருக்கச் செய்வதற்கான விழிப்புணர்வுக் கருவிகளாகவும் செயற்படுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எய்ட்ஸ் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

நன்றி 
உதயன் பத்திரிக்கை.....

No comments:

Post a Comment