சமூகப் பிரச்சனைகளைத் தொட மறுக்கும் தொடை நடுங்கி திரைப்பட உலகத்தினைக் கடந்து துணிவுடன் விமர்சித்த தமிழன் முருகதாசுக்கு முதலில் வீர வணக்கத்தை செலுத்தி விட்டு இயக்குநர் முருகதாசுக்கு வருவோம்.
முதல் இருபது நிமிட திரைப்படம் … கடைசி பத்து நிமிட திரைப்படம் .. இரண்டுக்கும் சேர்த்து இயக்குநருக்கு 90/100 வழங்கி விடலாம். இடையில் ஒரு ஒண்றரை மணி நேர திரைப்படத்திற்கு நாம் மைனஸ் 30 தரலாம்.
90/100 - 30/100 = 60/100
ஆக மொத்தம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திரைப்படம் என்ற போதும் இயக்குநர் முன்பு நாம் வைக்கும் கேள்விகள்...
1. படத்தின் விறுவிறுப்பை உருவாக்கிய சீன உளவாளி நம் தேசத்திற்குள் வருவதற்கு முன் 1 மணி நேர திரைப்படம் ஓடி விடுகிறதே...?
2. சீன உளவாளி ஒரு காவல்நிலையத்தையே சுக்கு நூறாக்கி விட்ட பின்பும் காவல்துறை அவரை துரத்தாமல் இருப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதே...?
3. போதி தர்மன் எனும் கனமான பாத்திரத்தை உருவாக்கி விட்டு, சராசரி காதல்... சராசரி காதல் தோல்விப் பாடல்... சராசரி டூயட் ... என்று ஒரு மணி நேர விரயத்தை தவிர்த்து சீன உளவாளியை முன்பே களமிறக்கி... தோழா! தோழா! பாடல் தவிர்த்து அனைத்துப் பாடலையும் நீக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்குமே...?
4. ஊடகங்களும் விமர்சனங்களும் ஆஹா ஓஹோ வென சுருதிஹாசனை உயர்த்தி பிடிக்கும் போது நமக்கு ஓர் விசயம் நினைவுக்கு வருகிறது.
“சலங்கை ஒலி” திரைப்படத்தில் நடன கலைஞர் (எஸ்.பி.சைலஜா) நடனத்திற்கு கமல் ஒரு விமர்சனத்தை தனது பத்திரிகையில் பதிவு செய்திருப்பார். அந்த விமர்சனத்தைப் பார்த்து எஸ்.பி.சைலஜா கொதித்துப் போய் கமலின் பத்திரிகை அலுவலகம் வந்து பேயாட்டம் போடுவார். பஞ்ச பூதங்களும் முகவரி காட்டும்... என்ற வரியினை சுட்டிக்காட்டி கமல் விளக்கும் காட்சி … திரையரங்கே அதிரும்….
சுருதிஹாசனின் நிலையும் அதே நிலை... ஆரம்பம் முதல் கடுமையான முயற்சி செய்து பார்த்தும் நடிப்பு வரவில்லை இருந்தும் பார்வையாளர்கள் அறியா வண்ணம் கமல் மீதுள்ள நேசத்தில் இயக்குநர் முழுவதும் வெளியில் தெரியா வண்ணம், சுருதிஹாசன் பாத்திரத்தை சூர்யாவுக்கு நிகராக இயக்குநர் கட்டமைத்து மறைத்து விட்டாரே..?
5. போதி தர்மனாக எழும் போது சூர்யாவின் கண்களில் உள்ள ஈர்ப்பு, இதர காட்சிகளில் இல்லையே…?
எது எப்படி இருந்த போதும் ! ஒரு புதுமையான திரைப்படத்தை தமிழருக்கு அளித்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் திரைப்பட கலைஞர்களையும் உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும். குறிப்பாக தமிழ் சார்ந்த வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.
“ஈழத்தமிழர் பிரச்சனை” தேசிய இன கண்ணோட்டம்.
மொழிவழி தேசியம்...! என தமிழ் திரையுலகம் கண்டிராத புதிய வழியை .. இப்படம் காட்டியுள்ளது. முதுகெலும்பு இருந்தும் தொடை நடுங்கி தமிழ் இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் முருகதாஸ் தமிழ் தேசியத் தலைவனின் தம்பியாய் காட்சியளிக்கிறார்
|
No comments:
Post a Comment