ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. அதற்கு கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பற்றி தான் கவலை. பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி அல்ல. மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இரு மாநில மக்களைப் பற்றி கவலையில்லை, தேர்தல் பற்றிய கவலை தான் பெரிதாக உள்ளது.
கேரளாவுக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களையும், அங்கு வசித்த தமிழர்களையும் பாதுகாக்க தேரள அரசு தவறிவிட்டது. கேரளாவில் வாழும் தமிழர்களை சமூக விரோதிகள் தாக்குவதை அம்மாநில அரசு வேடிக்கைப் பார்க்கிறது.
எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக போராடுகின்றனர். திமுக, அதிமுக அரசுகள் இந்த பிரச்சனையை பல ஆண்டுகளாக தீர்க்கமால் உள்ளன என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
மக்களின் போராட்டம் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது. முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நமது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. அணையை பாதுகாக்க ராணுவத்தை கொண்டு வர வேண்டும்.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. தமிழக அரசின் தீர்மானங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் சும்மா தீர்மானம் மற்றும் நிறைவேற்றி என்ன பயன்? ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள்.
கூடங்குளம் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் அந்த மக்களை சந்தித்து அவர்கள் அச்சத்தைப் போக்காமல் ரஷ்யாவில் இருந்து கொண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கும் என்று கூறியிருப்பது முறையன்று. கூடங்குளம் அணுமின் நிலையத்தை ராணுவத்தின் பாதுகாப்பில் விடுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் கூறியதை அமல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால் அதே கலாம் முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பொறுப்பை ராணுவத்திடம் விடுமாறு கூறியதை மத்திய அரசு ஏற்காமல் இரட்டை வேடம் போடுகிறது.
தமிழக அரசு எதிர்கட்சிகள் கூறுவதை காது கொடுத்து கேட்பதே இல்லை. தேர்தல் மூலம் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளது, ஆள் மாறவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு நான் தாமதமாக வந்ததற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசல் மட்டுமே காரணம். வேறு ஒன்றும் கிடையாது என்றார்.
|
No comments:
Post a Comment