Thursday, December 22, 2011

கேபிள் டிவியின் வரலாறு பாகம் 2

2 கேபிள் டிவி உருவான கதை. 

வீட்டிற்கு வீடு விடியோ கேசட் டெக் பிரபலமாகி, கலர் டிவி இருந்தால் டெக்கும் ஓர் அத்யாவசியமான விஷயமாய் போய்விட்டிருந்த காலம். வீடியோ கேசட் வாடகைக்கு விடும் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாரும் மிக செழிப்பாக வியாபாரம் நடந்தி கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தி காதில் விழுந்தது. அமெரிக்காவிலிருப்பது போல கேபிள் ஒயரின் மூலமாய் படம் காட்டப்படும் டெக்னாலஜி இந்தியாவுக்கு வரப் போகிறது என்று. ஏற்கனவே பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வர ஆரம்பித்தது.

திருவான்மியூரில் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராய் வேலைப் பார்த்துக் கொண்டே, சென்னையில் முக்கியமில்லாத ஒரு இடத்தில் பரபரப்பாக வீடியோ கேசட் நூலகம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சூரியாவாகிய எனக்கு மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது. இம்மாதிரியான டெக்னாலஜி விஷயங்களில் எல்லாம் எனக்கு பெரிய ஆர்வம் உண்டு. உடனே இதை பற்றிய விஷயங்களை தேட ஆரம்பித்தேன். 
கேபிளின் ரிஷிமூலம்
இன்று அமெரிக்காவின் 90 சதவிகித மக்கள் கேபிள் டிவி பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு மில்லியன் இணைப்புக்கள் இருக்கும் என்கிறார்கள். 1948ல் அமெரிக்காவில் உள்ள பென்சிலேனிவியா மாநிலத்தில்தான் முதல் முதலாக கேபிள் டிவி என்கிற முறையை வைத்து ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


அதற்கு காரணம் மலைகளால் சூழப்பட்ட, மாநிலமாக இருந்ததால், அமெரிக்க நேஷனல் ப்ராட்காஸ்டிங் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை தெளிவாக பெற முடியவில்லை. அதற்காக் அங்கிருந்த மக்கள் மிக உயரமான ஆண்டனாக்களை வைத்து சிக்னல்களை பெற முயற்சி செய்தார்கள். நாம் இலங்கை கூட்டு ஸ்தாபனத்தின் ரூபாவாஹினியை பிடிக்க செய்த முயற்சி போலத்தான்.


இப்படி கஷ்டப்பட்டு சிக்னல் பெற வேண்டியிருந்தாலும் பெருவாரியான மக்களுக்கு தெளிவான படம் கிடைக்கவில்லை. அப்போது தான் ஜான் வால்சனுக்கும், மார்கெரெட் வால்சனுக்கு ஒரு யோசனை வந்தது. ஏன் நான் ஊரில் உள்ள ஒரு உயரமான இடத்தில் நல்ல பெரிய ஆண்டனாவை வைத்து சிக்னல் பெறக்கூடாது என்று. இந்த யோசனையை செயல்படுத்த துவங்கினார்கள்.


ஜான் வால்சன் மற்றும் மார்கெரட் வால்சன் நடத்திய சர்வீஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனம் தான் முதன் முதலில் பென்சிலிவேனியாவில் உள்ள மஹாநோய் எனும் நகரத்தில் உள்ள மக்களுக்கு கேபிள் மூலம் சிக்னல்களை கொடுக்க ஆரம்பித்தார். இவர்களுடன் மில்டன் ஷாப் என்பவர் சேர்ந்து அதற்கான கோஆக்ஸில் கேபிள்கள், சிக்னல் பூஸ்டர்களை கண்டுபிடித்து இத்தொழில் மேலும் உறுதிபட உழைத்தார்.



மலைநகரங்களில் சிக்னலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கேபிள் டிவி கொஞ்சம், கொஞ்சமாய்1950களில் ஒவ்வொரு ஊர்களிலும் சின்ன, சின்ன ஆட்கள் கேபிள் ஆப்பரேட்டர்களாக உருவாகி, சில நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மாநிலங்களில் தெரியும் சேனல்களை நேனஷனல் ப்ராட்காஸ்ட் நெட்வொர்கை தவிர குவாலிட்டி நிகழ்ச்சிகளை கொடுக்கும் சேனல்களை பெரிய பெரிய ஆண்டனாக்களை ஒரு சேர வைத்து ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்கள். அந்த காலத்தில் மாதம் 3$ சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொண்டு ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


கேபிளின் கதை 
இப்படி கேபிள் தொழிலை பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் என்னுள் இன்னும் வேகம் ஆரம்பித்தது. மேலும் இதை பற்றி யாரிடம் கேட்பது என்ற தேடல் ஆரம்பமானது. மெல்ல இதன் தொழில் நுட்பம் இந்தியாவில் இருக்கிறதா? என்று விசாரிக்க ஆரம்பித்த போது, பம்பாயில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக சொன்னார்கள். இத்தொழிலை ஆரம்பிக்க என்ன முதலீடு வேண்டும்? என்ன என்ன விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதுவும் தெரியாமல் மேலும் சில மாதங்கள் இது பற்றி படித்துக் கொண்டும், பம்பாயில் இருக்கும் என் நண்பர்களிடத்தில் போனிலோ, அல்லது நேரில் வரும் போது அவர்கள் இருக்கும் ஏரியாவில் கேபிள் டீவி ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்போது தான் பம்பாயில் கேபிள் ஆக்டபஸ் தன் ராட்சஸ கரங்களை விரிக்க ஆரம்பித்திருந்த நேரம்.

மெல்ல தன் கரத்தினை இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான டெல்லி, கல்கத்தா, சென்னை என்று படர ஆரம்பித்தது. எப்போதுமே சென்னை மட்டுமில்லாது தெற்கு இந்தியாவில் ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு புது விஷயம் வந்தாலும் அதில் மிகப் பெரிய ஈடுபாடு காட்டமாட்டார்கள். பழைய விஷயங்களையே விட்டு வெளியே வர மிகவும் யோசிப்பார்கள். அதனாலயே தான் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை தெற்கில் முதலில் மார்கெட் செய்வார்கள். கன்சர்வேட்டிவான இந்த மார்கெட்டில் ஒரு சிறிய அளவு மாற்றம் தெரிந்தால் நிச்சயம் அகில இந்திய அளவில் வெற்றிக்கான உறுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவில் மார்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் நம்பும் விஷயம்.

சினிமா மோகம் அதிகம் உள்ள மாநிலமான ஆந்திராவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க, மெல்ல சென்னையிலும் காலெடுத்து வைகக் ஆரம்பித்தது. அடடா.. நாம் எதிர்பார்த்த தொழில் புரட்சி ஆரம்பிக்கப் போகிறது என்று உற்சாகத்துடன் பணம் கொஞ்சம் புரட்டி ஆரம்பிப்பதற்குள் உன்னை பிடி என்னை பிடி என்றிருக்க, அதற்குள் சென்னையில் முக்கியமான திருவல்லிக்கேணி, வடசென்னை போன்ற நெருக்கமான மக்கள் தொகையுள்ள ஏரியாக்களில் தெருவுக்கு ஒன்றாய் கேபிள் டீவி முளைக்க ஆரம்பித்த நேரத்தில் நானும் தைரியமாய் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் தயார் செய்து கொண்டு களமிறங்கினேன்.

சென்னையின் எலக்ட்ரானிக் மார்க்கெட்டான ரிச்சி தெருவில் சாதாரண கேசட் கடைகள் எல்லாம் மெல்ல அடுத்த வியாபாரமான கேபிள் டீவி உபகரணங்கள் விற்க ஆரம்பித்துக் கொண்டிருந்த நேரம். இதற்குள் நண்பர் ஒருவர் பம்பாயிலிருந்து வந்து வடசென்னை ஏரியாவில் கேபிள் டீவி கட்டுப்பாட்டு அறையை நிர்ணையிக்க வந்த ஒருவருடன் வேலை பார்த்து அவர் கொஞ்சம் விஷயம் தெரிந்த டெக்னீஷியனாய் உருவாகியிருந்தார். நானும் அவரின் உதவியுடன் கேபிள் டீவி ஆரம்பிப்பது என்று முடிவு செய்து என் வீடியோ கேசட் கடையின் அருகில் புதிதாய் கட்டப்பட்டு, 250 குடியிருப்புகளை கொண்ட வளாகம் இருந்தது. ஒரே இடத்தில் நிறைய குடியிருப்புகள் இருப்பதால் இத்தொழிலை ஆரம்பிக்க சரியான இடம் என்று முடிவெடுத்தேன். ஏற்கனவே அங்கிருந்த அசோசியேஷன் முக்கியஸ்தர்கள் எனக்கு தெரிந்தவர்களாகவும், என்னுடய வீடியோ கடை வாடிக்கையாளர்களாகவும் இருந்ததால் அவர்களிடம் சென்று இம்மாதிரியான புதிய டெக்னாலஜி வரப் போகிறது என்றும் அதை உங்களை போன்ற அப்பர் மிடில் க்ளாஸ் மக்களால் தான் ஆதரவு தெரிவித்து போற்ற முடியும் என்று பேசி அங்கு கேபிள் டீவி ஆரம்பிக்க அனுமதி கேட்டேன். அவர்களூம் இரண்டொரு நாளில் மற்றவர்களுடன் கலந்து பேசி சொல்கிறோம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. அவர்களும் ஒரு சில கண்டீஷன்களோடு சரி என்று சொன்னார்கள். ஆனால் அப்போது தெரியவில்லை அந்த கண்டீஷன்கள் எல்லாம் என் கால் கட்டுக்கள் என்று.

No comments:

Post a Comment