'நதியா?’ -
ஒற்றை வார்த்தை கவிதை தோன்றுகிறது நதியாவைப் பார்க்கும்போது! வசீகரப் புன்னகை, உறுத்தாமல் மிளிரும் அழகு, கூடுதலாக ஒரு இன்ச் சதைகூடப் போடாத உடல்வாகு... அப்போது எப்படிப் பார்த்தோமோ... இப்போதும் அப்படியே இருக்கிறார் நதியா!
''வயதே ஏறாமல் இருக்க வரம் வாங்கி வந்தீங்களோ?'' எனக் கேட்டால், கன்னக்குழி காட்டிச் சிரிக்கிறார். ''வரம் வாங்கி வரலை... ஆனால், பாரம்பரியம் வாங்கி வந்திருக்கேன். என் அம்மா - அப்பா இருவருமே வயசான பிறகும் ஒரிஜினல் வயசைக் கண்டுபிடிக்க முடியாத இளமையோடு இருக்காங்க. அதே பாரம்பரியம்தான் என் இளமைக்குக் காரணமா இருக்கலாம். 14, 10 வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கணவர், குழந்தை களோடு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோ ஷமாக் கழிக்கிறதும் என் பொலிவுக்குக் காரணம்!''
''உடம்பை எப்படி இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?''
''சிம்பிளான பயிற்சிகளைத் தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுலயே விளையாட்டுல எனக்கு ஆர்வம் அதிகம். காலையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் டிரெய்னிங் பண்றதோட வீட்டு வேலைகளும் எடுத்துக்கட்டி பண்ணுவேன். குடும்பத்தினரோட சந்தோஷமா பேசிச் சிரிக்கிறப்ப, ஆழ்நிலை தியானம் பண்ண மனநிறைவு கிடைக்கும். பெட்ல விழுந்த உடனேயே தூக்கம் வரணும். அப்பதான் நம்ம உடம்பு நல்ல நிலையில் இருக்குன்னு அர்த்தம். நம்ம உடம்பு சரி இல்லைன்னா, அதோட அறிகுறிகள் பசி, தூக்கம் இரண்டிலும் தெரிஞ்சிடும். அது இரண்டும் சரியா இருந்தால், நாம சரியா இருக்கோம்னு அர்த்தம்!''
''உணவு விஷயத்தில் எப்படி?''
''எந்த உணவையும் ஏத்துக்கிற உடம்பு எனக்கு. மும்பை உணவை எந்த அளவுக்கு ரசிச்சுச் சாப்பிடுவேனோ, அதே மாதிரி தென் இந்திய உணவுகளையும் சாப்பிடுவேன். இத்தாலி, ஜப்பானிய உணவுகளும் ரொம்பப் பிடிக்கும். என்னதான் சுவையாக இருந்தாலும், உடலுக்கு எவ்வளவு தேவையோ அதோட நிறுத்திக்குவேன். நிறைய சாப்பிடுறது தப்பு இல்லை. ஆனா, அதில் கிடைக்கிற சக்தி எரிக்கப்படுகிற அளவுக்கு நல்லா வேலை பார்க்கணும். உடல் உழைப்பையும் உணவு அளவையும் ஒப்பிட்டாலே, வீணாக சதை போடுவதை நிச்சயம் தடுத்துரலாம்!''
''முகப் பொலிவு, கூந்தல் மினுமினுப்பு... ரகசியம் சொல்லுங்களேன்?''
''எனக்கு இயல்பாவே ஸ்மைலி ஃபேஸ். அதனால பால்யம் மாறாத தோற்றம். மத்தபடி எந்த வயசுலயும் நம்ம முகத்தை ஒரே மாதிரி வெச்சுக்க முடியாது. அப்படி வெச்சுக்க நினைச்சு நாம தடவுற கண்ட கண்ட க்ரீம்கள் தான் முகத்தைப் பாழாக்கும். ஃபேஷியல்ங்கிற பேர்ல முகத்தை ரசாயனத்தால் நனைக்கிறோம். இயற்கைக்கு மாறான எந்த விஷயமுமே அப்போதைக்கு அழகாத் தெரியுமே தவிர, நிலைச்சு நிக்காது. சொன்னா நம்ப மாட்டீங்க, முகத்துக்குன்னு நான் பயன்படுத்துறது நல்ல தண்ணீர் மட்டும்தான். அடிக்கடி முகம் கழுவுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெயால் தலையை மசாஜ் பண்ணுவேன். ஷாம்பு, பவர்ஃபுல் ஹேர் ஆயில்னு எதுவும் பயன்படுத்த மாட்டேன்!''
''திருமணத்துக்குப் பிறகு உடலைக் கவனிக்கும் எண்ணமே பெண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?''
''குடும்பச் சூழல்தான் காரணம்! கணவர் தொடங்கி குழந்தைகள் பராமரிப்பு வரை ஒரு குடும்பப் பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலை. எத்தனை குடும்பங்களில் பெண்களுக்கு உதவியாக கணவர்கள் கைகொடுக்கிறார்கள்? சுதந்திரமாக இருந்த ஒரு பெண் வீட்டுக்குள் அடைபடும்போது, அவளுடைய உடல்வாகு மாறிவிடுகிறது. ஒரு நாளைக் குக் குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி ஒவ்வொரு பெண்ணும் சின்னச் சின்ன பயிற்சிகளையாவது மேற் கொள்ளணும். எப்பவும் ப்ரிஸ்க்கா இருக்கணும்னு மனசுல நினைச்சுட்டே இருக்கணும். உணவு தொடங்கி, உடை வரை நம்ம உடலை நாம முதல்ல நேசிக்கக் கத்துக்கணும்!''
''மனசை ரிலாக்ஸா வெச்சுக்க டிப்ஸ் சொல்லுங்க?''
'' 'எதுக்காக நமக்கு இந்தக் கஷ்டம்?’ ரொம்ப டென்ஷனான நேரத்தில் இந்தக் கேள்வியை மனசுக்குள் எழுப்பிப் பாருங்க. ஆபீஸ் கிளம்புற அவசரத்தில் மகளைத் திட்டி இருப்போம். ஆனா, அந்த மக நல்லா இருக்கணும்னுதானே ஆபீஸுக்கு வர்றோம்.
'நமக்குத் தேவையானதைக் கடவுள் கொடுத்திருக்கான்’னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு லேசா மாறிடும். 'போதும்’கிற வார்த்தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!''
|
No comments:
Post a Comment