சினேகன் - தமிழ் சினிமா பாடலாசிரியர். ஏராளமான பாடல்களை எழுதியவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு 'யோகி’ என்ற படத்தில் நடிகராகவும் அரிதாரம் பூசினார். 'உயர்திரு 420’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார். 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...’ என்ற பாடலை 'பாண்டவர் பூமி’ படத்துக்காக எழுதிய சினேகன், தனது வாழ்க்கையிலும் இப்படி ஓர் எதிர்பாராத மாற்றம் வரும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். 'சினேகனின் பிடியில் இருக்கும் என் மனைவியை மீட்டுக் கொடுங்கள்’ என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் பிரபாகரன் என்ற தொழிலதிபர்!
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரனிடம் பேசினோம். ''சில வருஷங்களுக்கு முன்னால் ஜமுனா கலாதேவியை லவ் பண்ணினேன்.அவளும் என்னை விரும்பினா. இரண்டு வீட்டிலும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. அதனால், வீட்டைவிட்டு வெளியில் வந்து கல்யாணம் பண்ணிட்டோம். எங்களுக்கு அஞ்சு வயசில் ஒரு பொண்ணு இருக்கா. ஜமுனா நல்ல டான்ஸர். வேளச்சேரியிலும், கீழ்கட்டளையிலும் பெண்களுக்கான டான்ஸ் ஸ்கூல் நடத்துறாங்க. டான்ஸ் ஸ்கூலைத் திறந்துவைக்க சினிமா பாடலாசிரியர் கவிஞர் சினேகனைக் கூப்பிட்டிருந்தோம். அதுதான் நான் என் வாழ்க்கையில் செஞ்ச மிகப் பெரிய தப்பு.
'நீங்க நல்லா டான்ஸ் பண்றீங்க. சினிமாவில் நடன இயக்குனரா இருக்கலாமே? நீங்க விருப்பப்பட்டா, நான் நடிக்கும் 'உயர்திரு 420’ படத்தில் உங்களுக்கு சான்ஸ் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். ஜமுனா என்கிட்ட விஷயத்தைச் சொன்னா. 'உனக்கு விருப்பம்னா, தாராளமா செய்’னு சொல்லிட்டேன். அவளும் நடன இயக்குனரா மாறினா. சினிமாவுக்குப் போனதும் அவளோட நடவடிக்கைகள் மாற ஆரம்பிச்சது. எப்பவும் போனும் கையுமாவே இருந்தா. வீட்டுக்கு வந்தாலும் போன்... மெசேஜ்னு, எப்பவும் பேசிட்டே இருப்பா. அப்போகூட நான் அதை பெருசா எடுத்துக்கலை. சினேகனும் ஜமுனாவும் சேர்ந்து வெளியில் சுத்துறதை பலரும் பார்த்துட்டு என்கிட்ட சொன்னாங்க. அப்போதான் எனக்கு ஷாக்!
'சினேகன்கூட நீ சுத்திட்டு இருக்கிறது நல்லது இல்லை ஜமுனா... நமக்குக் குடும்பம் இருக்குது. நீ பண்றதெல்லாம் சரியான்னு யோசிச்சுப் பாரு’னு அட்வைஸ் செஞ்சேன். 'என்னைச் சந்தேகப்படுறீங்களா?’னு குதிச்சா. ஆனாலும் அவளோட நடவடிக்கைகள் மட்டும் மாறவே இல்லை.
ஒரு கட்டத்தில், முழுக்க சினேகனோட கட்டுப்பாட்டுக்குள் அவ போயிட்டா. சினேகன் சொல்றதை மட்டும்தான் கேட்பா. நான் எது கேட்டாலும் எரிஞ்சு விழுவா. எங்களுக்குள் சண்டை அதிகமானதும் வீட்டைவிட்டுப் போயிட்டா.
குழந்தை மட்டும் என்னோடு இருந்தது. நான் வீட்டில் இல்லாத நேரமாப் பார்த்து, குழந்தையையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க. இப்போ ஜமுனாவும் என் குழந்தையும், சினேகனோட கட்டுப்பாட்டில்தான் இருக்காங்க. என் குடும்பத்தைச் சீரழிச்ச சினேகன் மேல் நடவடிக்கை எடுத்து என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத்தரக் கோரிதான் கமிஷனர்கிட்ட புகார் கொடுத்திருக்கேன்'' என்று கலங்கினார்.
ஜமுனா கலாதேவியைத் தொடர்புகொண்டு பேசினோம். தனது கணவர் பிரபாகரனுக்கு எதிராகத்தான் அவர் பேசினார். ''அந்த ஆள் ஒரு சந்தேகப் பேர்வழிங்க. அவர்கூட வாழ்வதற்கு இனி வாய்ப்பே இல்லை. அதனால்தான், விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிட்டேன். குழந்தையை என்கூட அனுப்பாம வெச்சிருந்தார். அதுபத்தியும் நான் போலீஸில் புகார் கொடுத்திருக்கேன். சினேகன் சாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவை இல்லாம இதில் அவரையும் இழுத்து அசிங்கப்படுத்துறாரு. உண்மையான அன்பு இருக்கிற புருஷனா இருந்தா, இப்படி எல்லாம் பண்ணுவாரா சொல்லுங்க...'' என்று நம்மிடம் அழுதார்.
கவிஞர் சினேகனோ அவரது நண்பர்கள் வட்டாரத்தில், ''பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். அந்தப் பெண் ஒரு நாள் மட்டும்தான் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். கொஞ்ச நேரத்திலே பிரபாகரனும் பின்னாடியே வந்து சந்தேகப்பட்டு சண்டை போட்டார். அதனால் அந்தப் பெண்ணிடம், இனி வரக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டேன். மற்றபடி அவர்கள் குடும்ப பிரச்னை எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருடைய மனைவி, குழந்தைகளைக் கடத்தவில்லை. நான் விசாரிச்ச போது அந்தப் பெண், அவங்களோட அம்மா வீட்டில் இருப்பதாகத் தெரிந்தது. நான் அந்தப் பெண்ணிடம் சுற்றியதாகச் சொல்வது அப்பட்டமான பொய். அவர்களது குடும்ப பிரச்னையில் என்னை அசிங்கப்படுத்தியதற்காக பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் போலீஸில் புகார் தரப்போகிறேன்'' என்று சொல்லி வருகிறாராம்.
யார் சொல்வது உண்மையோ?
|
No comments:
Post a Comment