Friday, November 25, 2011

விசாரணைக்குப் பின் கைதானவன் - 4 : தீபத் தீவு!


"சிலிர்த்துப் போனேன்.. உன் 'மகா'னுபவத்தைப் படித்து" என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன் அவனுக்கு.

"செல்லரித்துப் போகின்றன இப்படிப்பட்ட பாராட்டுகள்.." என்று பதில் கொடுத்தான்.

"மனிதன் வார்த்தைகளாலும் வாழ்கின்றான்" என்றேன்.

"வார்த்தைகள் இன்றியும் வாழ நிர்பந்திக்கப்படுகிறான்" என்றான்.

"எப்படி?" என்றேன்.

"வார்த்தைகள் வெளிப்படாமல் காதலை உன்னால் உணரவோ உணரச் செய்யவோ முடியுமா? நான் உணர்ந்தேன். உணர்த்தினாள்" என்றான்.

இது அவனது மூன்றாவது கைது!
தீபத் தீவு!

'தீபங்களின் தீ

தீபமாக நீ

தீபா நீ..'

இப்படித்தான் தொடங்கியது அவளுக்காக நான் எழுதிய முதல் காதல் கடிதம்.

நினைவு, கனவு, கண்ணீர், குருதி, உயிர், உடல் என்று மனதுக்குள் குதித்த வார்த்தைகளை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டு, இடையே சில சினிமா வரிகள், கிரேக்கத் தத்துவங்கள், ஹைக்கூ கவிதைகள் என கலந்துகட்டி எழுதி இருந்தேன். ஒரு துளி உண்மையைக் கூட விட்டுவிடாமல் வடித்துவிட வேண்டுமென்ற வேகத்தில் எழுதினேன். அது கடிதமாக இருந்ததோ இல்லையோ... காதல் அதில் நிறைந்திருந்தது உண்மை!

'இப்படிக்கு அன்புடன்

உன் காதலன்.' என்று எழுதி வழக்கம் போல குருவி பறக்கும் வடிவத்தில் கையெழுத்துப் போட்டிருந்தேன்.

சரி.. காதல் பிறந்தாயிற்று. அவள் கூந்தலின் ஒற்றை இழையைச் சேகரித்தாயிற்று. நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாயிற்று. பிறகு? அவளிடம் எப்படிச் சொல்ல?

காலம் காலமாக கடிதம் கைகொடுப்பதைப் போல வேறொன்றும் நம் உணர்வுகளை மிகச் சரியாகப் பதிய வைப்பதாக இல்லை. மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் போன்றவை எல்லாம் காகித மலர்களாகத்தான் ( இல்லை.. எலக்ட்ரானிக் மலர்களாகத் தான் ) இருக்கின்றன என்பதை எப்போதும் என்னால் உறுதியுடன் சொல்ல முடியும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை சமயம். நூலகத்தின் படிகளை நான் முத்தமிடத் தொடங்கியிருந்தது அந்தக் காலத்தில் தான். சாண்டில்யனும், கல்கியும், பாலகுமாரனும், சுஜாதாவும் அறிமுகமாயிருந்த நாட்களும் அப்போதுதான். வார்த்தை மடிப்புகளாய் தினமும் எதையாவது எழுதி எழுதி கவிதை என்று சொல்லி சேகரித்து வைக்கத் தொடங்கிய தினங்களும் அப்போதுதான். அவளைச் சந்திக்கும் வரம் தந்ததும் அந்த விடுமுறை தான்!


வேறோர் ஊரில் எட்டாம் வகுப்பு வரை படித்து வந்தாள். பெற்றவர்கள் அதே ஊரில் இருக்க, இவள் மட்டும் தன் சித்தி இருக்கும் ஊருக்கு வந்தாளாம். இனி இங்குதான் படிக்கப் போகிறாளாம். சுற்றிச் சுற்றி வந்தாலும் ஐம்பது வீடுகள் மட்டுமே இருக்கும் அந்த ஊரில் எந்த வீட்டில் எது நடந்தாலும் அது அடுத்த நிமிடம் அடுத்த வீட்டில் 'ஃப்ளாஷ் நியூஸ்’ ஆக மனிதர்கள் வாயில் ஓடும்.

என் வீட்டைத் தாண்டித்தான் அவள் வீடு இருந்தது. லாங் சைஸ் நோட்டுக்களை மார்பில் அணைத்தபடி, ரெட்டை ஜடை பின்னப்பட்ட கூந்தலில் ஒன்று முன்புறமிருக்க, பச்சைக் கலர் யூனிஃபார்ம் துப்பட்டா காற்றில் பறந்தாட, கொஞ்சமே கொஞ்சம் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்த மருதாணிப் பாதங்கள் ஒவ்வொரு முறையும் என் தெரு தொடும் போதெல்லாம் 'ஜில் ஜில் ஜில் மனதில்... ஒரு ஜல் ஜல் ஜல் காதல்...!’

கண்கள் பேசியதோடு சரி. வாய் திறக்கவில்லை இருவரும். விரல் கோக்க முடியவில்லை எங்களால். தனிமையில் 'உம்’ கொட்ட வாய்ப்புகள் இல்லை.

தெருவில் அவள் தன் சக தோழிகளுடன் தாண்டித் தாண்டி பாண்டி ஆட்டம் ஆடி... என்னைப் பார்த்தவுடன் லேசாய் உதடு கடித்து வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பாள். அவள் பார்க்கிறாளா என்ற எதிர்பார்ப்புடனே நானும் ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு என் வீட்டுக்குள் நுழைவேன். அவளும் பார்த்தாள். ஹா.. ' மின்சாரம் பாய்ச்சியது போல ' என்ற வாக்கியத்தின் உண்மைப் பொருளை புரிந்து கொண்டது அந்த வேளைகளில் தான்.

" ஹேய்... அந்தச் செம்பருத்தி அழகா இருக்குல்ல...? " -------அவள்.

" ஆமான்டி.. ஆனா அது கிளர்க் ராமசாமி அங்கிள் வீட்டுல இல்ல இருக்கு.." ஒருத்தி.

" அவரு ஒரு மாதிரி முசுடுடி.." இன்னொருத்தி.

" பத்தாததுக்கு அங்க சித்தெறும்பு அதிகம்டி.. ஒரு தடவ நான் ட்ரை பண்ணினேன்.. கால்ல கோலிக்குண்டு கணக்கா அங்கங்க வீக்கமா வந்துடுச்சு " இன்னும் ஒருத்தி.

பேசிக்கொண்டே, விநாயகர் கோயில் படிக்கட்டில் அமர்ந்திருந்த என்னை தாண்டிச் சென்றார்கள். ' உனக்கு செம்பருத்தி தான வேணும்... நான் கொண்டார்றேன்..' என்று மனதுக்குள் கறுவிக் (முண்டாசு கட்டி) கொண்டு வேட்டியை மடித்துக் கொண்டு கிளர்க் சார் வீட்டுக்குச் சென்றேன்.

வெற்று உடம்பும், மலையாளக் கரையோர கைலியும், தேங்காய்ப் பூ துவாலையுமாக என்னை ஏறெடுத்தவர் "என்னடா?" என்றார். பொதுவாக இளம்பெண்கள் முன் என்னை யாராவது ' டா ' போட்டு அழைத்தால் கோபம் பொத்துக் கொண்டு வரும். தற்சமயத்தில் பெண்கள் யாரும் இல்லை என்பதாலும், நான் வந்திருப்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காரியத்துக்காக என்பதாலும் இப்போது என் கோபம் ' கப்சிப்'.

" செம்பருத்தி பறிக்கணும்.. " துருத்தி இருந்த இரண்டு பற்களோடு சேர்த்து மீதி முப்பது பல்லும் தெரியும் அளவுக்கு அகலச் சிரித்து வைத்தேன்.

"என்னாத்துக்கு?"

"அது..." உண்மையைச் சொல்ல முடியுமா..? " நான் சித்த வைத்தியம் செய்யப் போறேன்... செம்பருத்தி தின்றால் ஹார்ட் அட்டாக் வராது" மேதாவித்தனத்துடன் பதில் சொல்லிவிட்டதாய் நெளிந்தேன்.

"கம்னாட்டி பயலே... பத்தாங்கிளாஸ் ரிசல்ட் இன்னும் வரல்லே... அதுக்குள்ள டாக்டராயிட்டீயளோ.." எள்ளலும், ஏளனமுமாக கேள்வி பறந்து வந்தது.

" ஆ... நான் இப்பல்லாம் லைப்ரரிக்குப் போறேனாக்கும்.. சித்தர் பாடல்கள் புத்தகத்திலே ஒரு க்ளூ இருக்கு பெரியப்பா..." ஒரு விதத்தில் அவர் எனக்கு உறவினரும் கூட. ' இவராவது சித்தர் பாடல்களைப் படிக்கிறதாவது ' தோன்றியதெல்லாம் எடுத்துவிட்டேன். என் பதிலைக் கேட்டு ஒரு விசேஷ ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்த்தார்.

" ம்... போ... போ... எறும்பெல்லாம் இருக்கு பார்த்து. கைல கால்ல ஊறி எசகு பிசகா எங்கயாவது கடிச்சு வெக்கப் போவுது " கரிசனமும், கேலியும் தெறித்தது.

சில எறும்புக் கடிகளுக்குப் பிறகு செம்பருத்தி என் கையில். அவள் கையில் எப்படி ஒப்படைக்க? யோசித்துக் கொண்டே வீடு திரும்பினேன். செம்பருத்தியைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சைக்கிளை மிதித்தேன். என் வீடு தாண்டி அவள் வீட்டின் முன்புதான் பிரேக் அடித்து நின்றேன்.

சுமார் ஐந்து மணி இருக்கும். நல்லவேளையாக அவள் வீட்டில் யாருமில்லை. எனினும், அவள் மாமன் பற்றி நினைவு வந்ததால் உள்ளே செல்லும் துணிச்சல் வரவில்லை. முன்புற ஜன்னல் கம்பிகளில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்து கூந்தல் பின்னிக் கொண்டிருந்தாள் அவள். ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் பூவை விழச்செய்தேன். அவள் விரல்களோ கம்பிகளைப் பிடித்திருந்தன. லேசாக அவள் விரல்களைத் தடவிவிட்டுச் சென்றேன்.

கார்த்திகை மாதத்தின் அன்றைய இரவில் செம்பருத்தியைச் சூடிக் கொண்டு விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டிருந்த தருணத்தில் மயங்கினேன். அப்போது எழுதியதுதான் அந்த மூன்று வரிக் கவிதை. அடுத்த நாளே கடிதம் எழுதி அவளுக்குத் தர நினைத்தேன்.

அடுத்த நாள் அவள் வீட்டின் முன்புறம் கூட்டம் கூடியிருந்தது. அவளின் தந்தை இறந்து போனாராம். ஐந்து பெண்களைப் பெற்றெடுத்து விட்டு கரைசேர்க்க முடியா கையறு நிலையில் சாராயத்துடன் விஷம் கலந்து குடித்துச் செத்துப் போனாராம். அழுதபடி அவள் பேருந்து ஏறினாள். பிறகு அவள் எப்போதும் திரும்பவேயில்லை.

உன்னைப் பற்றிய கனவுகள் சூழ தீவு போல நான் தனித்திருந்தேன் தீபா. எழுதிய முதல் கடிதத்தைக் கூட அவளிடம் சேர்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக நான் மாறிப்போனேன். அந்த வடு இன்றும் வாழ்க்கையில் இருக்கிறது. என் பெட்டிக்குள் பத்திரமாக மடித்து வைத்திருக்கும் அந்தக் கடிதத்தை இப்போது எடுத்துப் படித்தால்... கடிதத்திற்கான கலையும் இல்லை. காதலுக்கான சந்தோஷமும் இல்லை.

செம்பருத்தி கொடுத்த அந்த நாளின் பின்னிரவில் என் வீட்டின் பக்கவாட்டுத் திண்ணையில் 'ஞி' என்று வெள்ளைப் பெயின்டில் குறியிட்டு, நீ வைத்துச் சென்ற விளக்கு இப்போது வரை அணைந்தே இருக்கிறது தீபா... நீ என்னில் கடந்து சென்றதுக்கான சாட்சியாய்!

No comments:

Post a Comment