Friday, November 25, 2011

மார்பகப்புற்று... நீங்களே கண்டறியலாம்!


பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வும், ஆலோசனைகளும் அவசியத் தேவையாக இருக்கும் சூழல் இது. இதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தை, 'உலக மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்' என்று கடைப்பிடிக்கிறார்கள்.

சென்னை, பேட்டர்ஸன் கேன்சர் சென்டரில், கடந்த அக்டோபர் 13 முதல் 20 வரை மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடந்த இலவச முகாமில், மார்பகப் புற்றுநோய் பற்றி அறியப்பட்ட விவரங்கள் அதிகம். அதை 'அவள் விகடன்’ வாசகிகளுக்கும் பகிர்ந்தார் சென்டரின் இயக்குநர், டாக்டர் விஜயராகவன்.

''1995-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12 - 14 சதவிகிதமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, இப்போது 26 - 28 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, மார்பகப் புற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதிப்பின் முதல் கட்டத்துக்குக் காரணம், பெண்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த கவலையில்லாமல் இருப்பதுதான். குடும்பம் என்ற அமைப்புக்குள்ளேயே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்களின் உடல்நிலையைப் பொருட்படுத்துவதே இல்லை. மார்பகப் புற்றைப் பொறுத்தவரை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால், முழுமையான தீர்வு பெற முடியும். அந்த விழிப்பு உணர்வை உண்டாக்கவே... ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முகாம் இது!'' என்றவர், மார்பகப் புற்று ஏற்படும் விதத்தை விளக்கினார்.

''உடலில் எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் நிறைய இருக்கின்றன. இவற்றில் மார்பகத்தில் உள்ள 20 - 22 சுரப்பிகள், பருவமடைகின்ற வயதில் பால் சுரப்பிகளாக மாறுதல் அடையும். அங்கு சுரக்கும் திரவத்தாலோ, அந்த பால் சுரப்பிகளில் அடைப்புகள் ஏற்படும்போதோ கட்டிகள் உண்டாகி, வலி ஏற்படுத்தும். இந்த வகையான கட்டிகளை 'ஃபைப்ரோமா' என்பார்கள். இவை சாதாரண சிகிச்சையிலேயே குணமாகக்கூடியவை.

வேறு சில காரணங்களால் ஏற்படும் கட்டிகளாலும், அடைப்புகளாலும் மார்பகத்தில் வீக்கம் ஏற்படலாம். அந்த வீக்கப் பகுதிக்குள் ஒருவித நீர் சுரந்து, அது காலப்போக்கில் உருண்டையாகத் திரண்டு, அதுவே மார்பகப்புற்றாக மாறக்கூடும். இதை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் விடும்போது, மார்பகம் முழுக்கப் பரவுவதோடு, அக்குள் பகுதியையும் பாதிக்கும். எனவே, மார்பகத்தில் சிறிய அல்லது வலியே இல்லாத கட்டி இருக்கிறது என்றாலும், உடனடியாகப் பரிசோதித்து... ஃபைப்ரோமா அல்லது புற்றுக்கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டே பரிசோதனையைத் தள்ளிப்போடும் மனநிலை, ஆபத்தானது!'' என்று புரியவைத்த டாக்டர், மார்பகப்புற்றை கணிக்கும் சுயபரிசோதனைகளையும் பேசினார்.

''மார்பகப் புற்றின் முதல் அறிகுறி, அதன் அமைப்பில் ஓர் ஒழுங்கின்மை ஏற்படும். குறிப்பாக, இரண்டு காம்புகளும் சம நிலையில் உள்ளனவா, அல்லது மேலும், கீழுமாக இருக்கிறதா என்பதைக் கவனிக்கலாம். மார்பிலோ, மார்புக்காம்பிலோ வலியை உணர்ந்தால், மார்புக்காம்பை அழுத்திப் பார்த்தால் பச்சையாகவோ, நீலமாகவோ, சமயங்களில் ரத்த நிறத்திலோ நீர் கசியலாம். அக்குள் பகுதியில் கட்டிகள் ஏதாவது தென்படுகின்றனவா என்பதைச் சுயமாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது கைகளைத் தூக்க முடியாதபடி வலி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 35 வயது முதல் 65 வயது வரையிலான ஒவ்வொரு பெண்ணுமே மேற்கூறிய பரிசோதனைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என, வருடத்துக்கு நான்கு முறை தாங்களாகவே பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏதேனும் மாறுதல்கள் தெரிந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

கருத்தடை மாத்திரைகள், மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் உள்ளிட்ட ஹார்மோன் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கும் பரிசோதனை அவசியம். மற்றவர்களைவிட, கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு 50 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்'' என்று அலார்ம் அடித்தார் டாக்டர்.

கேம்ப்பின் ஹைலைட், பெண்களுக்குப் புற்றுநோயைக் கண்டறிய, 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலம் இலவசமாக ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டதுதான். இதைப் பற்றி பேசிய டாக்டர் விஜயராகவன், ''பொதுவாக புற்றுநோய்க்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு 1,750 - 7,000 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. ஆனால், 'இன்ஃப்ரா ரெட் கேமரா' மூலமான டெஸ்ட்டுக்கு... வெறும் 200 ரூபாய்தான் செலவு. இதை எல்லா கேன்சர் மருத்துவமனைகளிலும் பயன்படுத்த, அரசுக்குப் பரிந்துரையும் செய்துள்ளோம்!'' என்றார் அக்கறையுடன்!

No comments:

Post a Comment