பெண்ணாக பிறந்த அனைவருக்கும் 'மாதவிலக்கு’ என்பது தவிர்க்க முடியாத அனுபவம்! மாதவிலக்கு ஏற்பட்ட நாட்களில் மனமும், உடலும் சோர்ந்து மூலையில் முடங்கிக் கிடந்ததெல்லாம் மலையேறி வெகுகாலமாகி விட்டது. 'அந்த’ நாட்களுக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு புன்சிரிப்போடு பெண்களை வலம் வரச் செய்து கொண்டிருக்கின்றன பலவிதமான சானிட்டரி நாப்கின்கள். இந்த நிலையில், 'சானிட்டரி நாப்கின் பயன்படுத்துபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்’ என்றொரு கருத்து, பெண்கள் மத்தியில் மெள்ள அதிர்ச்சி அலைகளைப் பரவவிட்டுக் கொண்டிருக்கிறது.
'இது எந்த அளவுக்கு உண்மை?' என்று மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் பாவ்னாவிடம் கேட்டோம்.
''கெமிக்கல் கலக்காத பஞ்சு, மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிற வுட் பல்ப் போன்ற பொருட்களை வைத்து, சுத்தத்தையும், சுகாதாரத்தையும் காப்பதற்காக தயாரிக்கப்படுபவைதான் நாப்கின்கள். இவற்றின் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கிற சதைப் பகுதியான யூட்ரஸ் (Uterus) உள்ளே உருவாகிற ஒரு மெல்லிய படலம்தான் எண்டோமீட்ரியம் (Endometrium).இதுதான் பெண்கள் தாய்மை அடைவதற்குக் காரணமாக இருக்கிறது. புற்றுநோயானது முதலில் இந்த எண்டோமீட்ரியத்தையே தாக்குகிறது. அதன்பின் சதைப் பகுதியான யூட்ரஸுக்குள்ளும் பரவி கர்ப்பப் பையையும் தாக்கிவிடும். இதைத்தான் கர்ப்பப்பை புற்றுநோய் (Endometrial cancer or Uterine cancer) என்கிறோம்.
கர்ப்பப்பை புற்றுநோயானது, 50 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் அதிகமாக வரும் வாய்ப்பு உள்ளது. கரு முட்டைப் பையில் நீர்க்கோத்தல், உடம்பில் கொழுப்பு அதிகரித்தல், மெனோபாஸ் பிரச்னைகள்... போன்றவை கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஒழுங்கற்ற மாதவிடாய் வரும் பெண்களுக்கு எண்டோமீட்ரியம் 5-மில்லி மீட்டரையும் தாண்டி வளர்ந்துவிடும். கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுவும் முக்கியக் காரணி.
இதைத் தவிர, அம்மா, பாட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்தம் சந்ததியினருக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றபடி புற்றுநோய்க்கும் நாப்கின் பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, 'இறுக்கமான பிரா அணிபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும்’ என்கிற வதந்தி நாடெங்கும் பரவியது. இப்போது 'நாப்கினால், கர்ப்பப்பை புற்றுநோய்’ என்ற புரளி கிளம்பியிருக்கிறது அவ்வளவுதான்'' என்று அதை ஒதுக்கித் தள்ளிய டாக்டர் பாவ்னா,
''மாதவிடாய் நாட்களில் வெளிவருகிற ரத்தம், அசுத்த ரத்தம் என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் நிரம்பி இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் உதிரமானது சுத்தமானதாகவே இருக்கும். ஆனால், நாம் பயன்படுத்தும் நாப்கின் அல்லது துணியில் அந்த ரத்தமானது அதிகநேரம் தேங்கும்போதுதான் அசுத்தமடைகிறது. அதில், பாக்டீரியாக்கள் வளர்ந்து வஜைனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலவித நோய்களை ஏற்படுத்தும்; கர்ப்பப் பைக்கு அருகில் இருக்கும் வால்வுகளையும் அடைத்துவிடும். இதனால் குழந்தையின்மை மற்றும் யுட்ரஸ் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை நாப்கினை மாற்றிக்கொள்வது நல்லது. துணிகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், அதையெல்லாம் தவிர்த்து, நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவதுதான் நோய்கள் வராமல் தவிர்ப்பதற்கான சிறந்த வழி!'' என்றார் அக்கறையோடு!
''அம்மா, பாட்டி காலத்திலிருந்தே மாதவிலக்கின்போது எல்லோரும் துணியைத்தானே பயன்படுத்தினார்கள். அதனால் எந்த பிரச்னையும் வந்துவிடவில்லையே?'' என்ற கேள்விக்கு...
''அதில் ஆரோக்கியமில்லை என்பதுதான் என் கருத்து'' என்று ஆணித்தரமாக ஆரம்பித்தார் மாதவிடாய் ஆரோக்கிய அமைப்பின் எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினராக இருக்கும் ராணி முரளிதரன்.
''மாதவிலக்கின்போது பெண்களுக்கு ஏற்படும் ரத்த வாடையை மோப்பம் பிடித்தே விலங்குகள் மனித நடமாட்டத்தைக் கண்டுபிடித்துவிடும் என்பதால்தான்... ஆதிவாசிகள் காலத்தில் பெண்களுக்கு ஓய்வும் மறைவிடமும் கொடுத்து, தனிமைப்படுத்தினர். அது பரிணாமம் பெற்று... தனி அறை, தனி படுக்கை, தனி தட்டு, தனி டம்ளர் என ரொம்பவே 'தனி'மைப்படுத்தியது. விளைவு... மாதவிடாய் துணிகள்கூட யார் கண்ணிலும் படக்கூடாது குறிப்பாக... காகம், கருடன் போன்ற பறவைகள் பார்த்தால் தோஷம், குழந்தை பிறக்காது என்கிற கட்டுக்கதைகளும் கிளப்பிவிடப்பட்டன. இதனால், சூரிய ஒளியே படாத இடங்களில் துணிகளைக் காய வைத்தார்கள். இதில், பாக்டீரியாக்கள் மறுபடியும் பல்கிப் பெருகி நோய்களைத்தான் ஏற்படுத்தியது.
இன்றும் எத்தனையோ கிராமங்களில் சாக்குத் துணியை பயன்படுத்துகின்ற அறியாமை இருக்கிறது. மேலும் பயன்படுத்திய துணிகளை மீண்டும் பயன்படுத்துவதற்காக வீட்டுக் கூரை, இடுக்குகள் போன்ற மறைவான இடங்களில் செருகி வைக்கிறார்கள். இவற்றில் பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் குடியேறிவிடும். இதைக் கவனிக்காமல் பயன்படுத்தி பல பெண்கள் இறந்திருக்கிறார்கள். இது கர்ப்பப் பை புற்று நோயைவிடக் கொடுமையான விஷயம். முப்பது ரூபாய் கிடைத்தாலும் உடனே செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்வதற்கு தயாராக இருக்கும் நம் சமூகம், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நாப்கின்களுக்கு சிறு தொகையைக்கூட செலவு செய்யத் தயங்கலாமா?'' என்று நியாயமான கேள்வியை எழுப்பிய ராணி,
''கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தியபோது, மாதவிலக்கின்போது துணி பயன்படுத்தும் மாணவிகள் படும் அவஸ்தையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இதை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவுதான்... வரும் நவம்பர் மாதத்திலிருந்து இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிட்டுள்ளது நம் அரசு'' என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
|
No comments:
Post a Comment