சஞ்சனா சிங் நடிக்க வந்தாரா... இல்லை, அடிக்க வந்தாரா? பரபரவென உடலைச் சுழற்றுகிறார்; தலைகீழாக பல்டி அடிக்கிறார்; உடம்பை மட்டையாக மடக்கிச் சுருள்கிறார். அறை முழுக்க உருள்கிறார். இந்தியில் '120 மினிட்ஸ்’, கன்னடத்தில் 'சேலஞ்ச்’, தமிழில், 'யாருக்குத் தெரியும்’ படங்களில் நடித்து வரும் சஞ்சனா சிங், ஜிம்னாஸ்டிக்கில் செமத்தியாகக் கலக்குகிறார்.
''சின்ன வயசுல இருந்தே உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும்னு எனக்கு ஆர்வம் அதிகம். ஜிம்முக்குப் போகவோ, யோகா கிளாஸ் போகவோ, அப்போ நேரமும் இல்லை... வாய்ப்பும் இல்லை. அதனால், ஃபிட்னெஸ் சம்பந்தமான டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்து, நானே சுயமா கத்துக்க ஆரம் பிச்சேன். மும்பையில் படிக் கிறப்ப, ஸ்கூல் பெஞ்ச்சில்கூட பல்டி அடிச்சுப் பழகி இருக்கேன். வீட்ல, இந்த மாதிரி நான் பண்ணும் சேட்டைகளைப் பார்த்து, 'குரங்கு வாலு’னு கிண்டல் பண்ணுவாங்க. அந்தக் கிண்டலே ஒரு கட்டத்தில் ஆச்சர்யமான பேச்சா மாறுச்சு. 'உடம்பை இப்படி வளைக்கிறியே... நீ ஜிம்னாஸ்டிக்கில் பெரிசா சாதிக்கலாம்’னு என்கரேஜ் பண்ணினாங்க. இப்போ, நடிப்பு, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ்னு பட்டையைக் கிளப்பிட்டு இருக்கேன்!'' என்கிறார் இந்தப் பளீர் பாப்பா.
''என்னோட உடம்பு ரப்பர் மாதிரி. நான் பண்ற ஜிம்னாஸ்டிக் சேட்டைகளைப் பார்க்கிறீங்களா..?'' என்றவர், கைகளைப் பின்புறமாக வளைத்து உள்ளங்கைகளை ஒன்று சேர்த்து, ''முதலில்... நமஸ்காரம்'' என்கிறார். உடலைப் படுக்கைவசமாக்கி மணிக்கட்டின் பலத்தில் நிறுத்திக் காட்டுகிறார். இரு கால்களையும் இடது, வலது திசையில் அகல விரித்து, ஒரே நேர்க்கோடாக்கிக் காட்ட, நமக்கு மூர்ச்சையாகாததுதான் பாக்கி.
''இன்னும் என்னென்ன வித்தைகள் கற்றுவெச்சிருக்கீங்க சஞ்சனா?''
''உடம்பை எப்பவும் சுறுசுறுப்பா வெச்சுக்க எத்தகைய பயிற்சிகளையும் பண்ணலாம். பயிற்சிகளை வகை பிரிச்சு, வழக்கமாக்கிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில நாட்களில் காலையில் எழுந்த உடனேயே டேபிள் டென்னிஸ் விளையாடப் போயிடுவேன். கைகளுக்கும் கால்களுக்கும்தான் அதில் வேலை. ஆனால், கவனத்துக்கு மிகுந்த பக்குவம் கிடைக்கும். உடம்பு முழுக்க எனர்ஜி பெருக்கெடுக்கும். ஷூட்டிங் சமயத்தில் ஃப்ரீ டைம் கிடைச்சா, சட சடனு ஜிம்னாஸ்டிக் பண்ண ஆரம் பிச்சிடுவேன். யோகா பண்ணுவேன். ஆர்வமா டென்னிஸ் விளையாடுவேன். மரம் ஏறுவதைத் தவிர, மற்ற பயிற்சிகள் எல்லாமும் பண்ணுவேன். உடம்போட இன்ஜின் எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கணும்!''
''பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வதால், உடல் வலி எடுக்காதா?''
''நிச்சயம் வலி எடுக்காது. ஆரம்பத்தில் பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்யும்போது, அதில் சிரமம் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், ஒருநாள் விளையாட்டு, அடுத்த நாள் ஜிம், அதற்கடுத்து டான்ஸ் என மாற்றி மாற்றிச் செய்யும்போது உடலின் அத்தனை உறுப்புகளும் சுறுசுறுப்பாகின்றன. எந்த உறுப்பையும் எப்படியும் வளைக்கிற பக்குவத்தைப் பழகிட்டால், உடலின் ரகசியம் நமக்குப் பளிச்சுனு தெரிஞ்சிடும். நான் ரொம்ப ரசிச்சுப் பண்ற பயிற்சியே டான்ஸ்தான். வெரைட்டி டான்ஸ் தொடங்கி கிளாஸிக்கல் வரைக்கும் ரொம்ப ரசிச்சு ஆடுவேன்!''
''வயிறுன்னு ஒரு உறுப்பு இருக்கிறதாவே தெரியலையே... இவ்வளவு ஸ்லிம்மா எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க?''
''கட்டுப்பாடுங்கிற பெயரில் உடம்பைப் பட்டினி போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலையில் வெஜிடபிள் ஜூஸ் குடிப்பேன். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இனிப்பு இல்லாத க்ரீன் டீ அவசியம் வேணும். மதியம் பச்சைக் காய்கறிகளும் ரொட்டி யும் சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவை ப்ளாக் டீ குடிப்பேன். ஐந்து முட்டைகளின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிடுவேன். மஞ்சள் கரு சாப்பிட்டால், கொழுப்பு சேர்ந்துடும். வெள்ளைக் கருவில் வேண்டிய அளவுக்கு புரோட்டீன் இருக்கு. எப்போதாவது சிக்கன் சாப்பிடுவேன். ஆயில் சேர்க்காதபடி நெருப்பில் வாட்டி சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் நேரத்தில் கேரட் ஜூஸ் குடிப்பேன். தண்ணீர் நிறையக் குடிப் பேன். உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்க க்ரீன் டீயும் தண்ணீரும் பெரிசாக் கை கொடுக்கும்.
உடம்பில் கொழுப்பு சேராமல் கட்டுக்கோப்பா மெயின்டெயின் பண்ண, உணவுக் கட்டுப்பாடுதான் முக்கியம். என்னதான் மணிக்கணக்கில் பயிற்சிகள் பண்ணாலும் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு தவறிட்டா, ஸ்லிம் உடம்பை மெயின்டெய்ன் பண்ண முடியாது. யோகாவில் பசிக்கு ஒரு பயிற்சி, ஜீரணத்துக்கு ஒரு பயிற்சினு வகை வகையா இருக்கு. அந்த மாதிரி செலெக்டிவ் வான பயிற்சிகளைக் கத்துக்கிட்டா, உடம்பை நரம்பு மாதிரி நிச்சயம் வெச்சுக்கலாம்!''
''எப்பவும் புன்னகை மாறாமல் இருக்கீங்களே... எப்படி?''
''இது ரொம்பப் போட்டியான உலகம். நாம நினைக்கிறது எல்லாம் அடுத்த நிமிஷமே நடந்திடாது. அதுக்காக நாம சோர்ந்துடவும் முடியாது. வருகிற வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அதிலும் எப்படி ஸ்கோர் பண்ண முடியும்னு போராடணும். 'ரேனிகுண்டா’ படத்தில் அக்கா கேரக்டர்தான் கிடைச்சது. ஆனாலும், 'யார்றா இந்தப் பொண்ணு?’னு கேட்கிற அளவுக்குப் பண்ணினேன். இந்த மாதிரி போராட்டம், முயற்சினு மனசுக்குள் ஆயிரம்ஆயிரம் பரபரப்புகள் இருந்தாலும், நம்ம முகம் எப்பவுமே பளிச்சுனு இருக்கணும். காஸ்ட்லியான மேக்கப்பும் உயர்தர உடைகளும் கொடுக்காத மதிப்பை சின்னப் புன்னகை கொடுத்துடும். தனிப்பட்ட என்னோட எல்லா புகைப்படங்களிலும் நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நான் பியூட்டி பார்லர் போறதே இல்லை. தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தவிர, காஸ்ட்லியான எதையும் பயன்படுத்துறது இல்லை. காரணம், முக அழகுக்கு அவசியமான ஒண்ணே ஒண்ணு... சிரிப்புதான்!''
|
No comments:
Post a Comment