தற்கொலை வழக்கில் அவருடைய பழைய காதலனை போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் அனுப்பிய இ-மெயிலால் அந்த காதலன், போலீஸ் பிடியில் இருந்து தப்பியுள்ளார். இச்சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் அஞ்சலி. ஐ.டி. கம்பெனி ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிபவர். சந்தீப். உத்தரபிரசேத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர். முறைப்படி அஞ்சலியை திருமணம் செய்துகொள்ள சந்தீப் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் ரயில் பயணம் ஒன்றில் அஞ்சலிக்கு வேறு ஒரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. சந்தீப்பிடம் காதலை முறித்துக் கொண்டு புதிய நண்பருடன் காதலைத் தொடர்ந்தார் அஞ்சலி.
ஒரு கட்டத்தில் புது காதலன், அஞ்சலியின் காதலை தவிர்த்தார். இந்த விஷயம் சந்தீப்புக்கு தெரியவந்தது. காதலால் நொந்து போயிருந்த அஞ்சலியிடம் சந்தீப் போனில் உருக்கமாக பேசினார். ‘உண்மைக் காதல் எது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு விட்டாய். பரவாயில்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இப்பவும் உன்னை என் காதலியாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். இல்லறத்தில் இருவரும் இணைவோம்’ என்று சந்தீப் கூறினார். ‘முக அழகிலும், கவர்ச்சி பேச்சிலும் மயங்கி முதல் காதலை துறந்தது எவ்வளவு பெரிய தப்பு’ என்பதை உணர்ந்த அஞ்சலி, சந்தீப்பிடம் மனதார மன்னிப்பு கேட்டார். காதலை மாற்றியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருந்து விடுபட முடியாமல் புழுங்கித் தவித்தார். சந்தீப் மனதை புண்படுத்தி விட்டதற்காக வருந்தினார். உடனே சந்தீப்புக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அதை அவரது இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தார். ‘காதலை மாற்றியதால் கண்கலங்கி நிற்கிறேன். நம்பியவன் ஏமாற்றியதால் வாழ்க்கையே வெறுத்து விட்டது. தற்கொலை மட்டுமே எனது தவறுக்கு சரியான தீர்வாக இருக்கும்’ என்று அந்த இ-மெயில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக சந்தீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு இ-மெயில் அனுப்பி இருக்கிறேன். அதை கண்டிப்பாக படித்து பாருங்கள்’ என்று கூறினார். ஆபீசில் இருந்து வீடு திரும்பியதும் அஞ்சலி அனுப்பிய இ-மெயிலை படித்தார் சந்தீப். அதிர்ச்சி ஆனார். உடனே அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றார். முடியவில்லை.
அவர் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றார். வீட்டுக்குச் செல்ல தயங்கி நின்ற அவர், அஞ்சலி வெளியே வந்தால் சந்திக்கலாம் என்று எண்ணினார். ஆனால், அதுவும் முடியவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் அஞ்சலி தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானது. அதைப் பார்த்து கதறி அழுதார் சந்தீப். இதற்கிடையில், ‘என் தங்கையின் தற்கொலைக்கு சந்தீப்தான் காரணம். அவரால் என் தங்கைக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தம்கூட நின்றுவிட்டது. உடனே அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று அஞ்சலியின் அண்ணன் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். அன்றுதான் சந்தீப்புக்கு அலுவலகத்தில் புரமோஷன் கிடைத்திருந்தது. ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு 6 லட்சமாக சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. ‘நான் அப்பாவி. அஞ்சலி தற்கொலைக்கு நான் காரணம் இல்லை’ என்று எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் தங்கள் ‘கடமை’யை செவ்வனே செய்து சந்தீப்பை சிறையில் தள்ளினர். பின்னர் விசாரணை முடுக்கி விடப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சந்தீப்புக்கு அஞ்சலி அனுப்பிய இ-மெயில் விவரங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ள சந்தீப் தயாராக இருந்தது பற்றிய போன் உரையாடல் விவரமும் தெரியவந்தது. இதையடுத்து சந்தீப் விடுதலை ஆகியிருக்கிறார்.
|
No comments:
Post a Comment