காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.
காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.
படிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:
திருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.
காதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.
காதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
பேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள்.
உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.
விடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி.
எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.
வாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.
|
No comments:
Post a Comment