வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் அருட்கொடை. பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஒரே நாட்டிலுள்ள பல மாநிலத்தவர்கள் அவர்களிடையே மாறுபடும் பழக்கவழக்கங்கள்,கலாச்சாரம், பண்பாடு இவைகளை மிக எளிமையாக பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் செய்யாமலே அவர்களுடன் கொஞ்சம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நெருங்கி பழகும் குணமும் இருந்தால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம். ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு தமிழனை நீ எந்த நாட்டுக் காரன் என்று விசாரித்தால் யோசிக்காமல் நான்(இந்தி) இந்தியன் என்று சொல்வார்கள், (நானும் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்). அதற்கு பிறகு இந்தியாவில் நீ எங்கே என்று அவர் மேலும் தொடங்கும் போது மெட்ராஸி என்று சொல்லுவார்கள். ஆனால் இதே கேள்வியை மலையாளிகளிடம் கேட்டால் எடுத்தவுடனே நான் கேரளா என்பார்கள். அப்புறம் கேரளா எங்கு இருக்கிறது என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிறது என்பார்கள்.
இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரூமை உள்வாடகை விடுவதற்காக பொது இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டும் போது South Indian Only என்ற வாசகத்தை பயன்படுத்துவர்கள். அதே மலையாளிகள் கேரளா ஒன்லி என்று மலையாள மொழியில் நோட்டீஸ் அடித்து ஒட்டுவார்கள். மலையாளம் வாசிக்க தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். அப்படியொரு குறுகிய மாநில,இன,மொழி வெறி கொண்டவர்கள்.
அதே போன்று பத்திரிக்கை வாசிப்பது செய்திகளை தெரிந்துக் கொள்வது இதில் மலையாளிகளுக்கு ஆர்வம் ஆதிகம். இரண்டுக்கும் மேற்பட்ட மலையாள நாளிதழ்கள் சவூதியில் அச்சடிக்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் முழுநேரமும் செய்தி சானல்கள் ஒடிக் கொண்டு இருக்கும். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்ற ஹோட்டல்களில் முக்கால்வாசி டிவி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் அழுகுனி டிவி சீரியல்களும், குத்து பாட்டுக்களும் ஓடிக் கொண்டு இருக்கும். இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.
இது ஒரு வகையான ஊடகத்தை வளைத்து திரித்து தங்கள் கருத்தை திணிக்கும் கள்ளத்தனம். இந்த முல்லை பெரியாறு விவாகரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க, பிழைக்க துடிக்கும் பிழைப்புவாதிகள். இரு மாநில மக்களின் நல்லுறவை குலைத்தாவது லாபமடைய நினைக்கும் மனநிலை அரசியல், ஆன்மிக, மாநில, மொழி, இனம் என்ற போர்வையில் எத்தனை வகையான கள்ளத்தனங்கள்.
இதில் மீடியாக்களின் பொறுப்பற்ற விளம்பரத்தனமான பார்வைகள் மிக அசிங்கமானவை. காலையில் சிற்றுண்டி சாப்பிட இங்குள்ள (சவூதி - ரியாத்திலுள்ள) கேரளா ஹோட்டலுக்கு போயி சேட்டா ஒரு செட் புரோட்டா என்று ஆர்டர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் கேரளா கைராளி டிவி நியூஸ் சானலில் முல்லை பெரியாறு ஒடிக்கிட்டு இருந்தது.
அதில் தமிழக கேரளா எல்லையில் உள்ள மலையாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கவர் ஸ்டோரி செய்தி. பேட்டி எடுப்பவர்களிடம் தமிழ் கலந்து பேசும் மலையாளிகள் எங்கள் வீட்டுக்குள் தமிழ்காரவுங்கே புகுந்து ஆடு, கோழி பணம் இவைகளை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள் பாதுகாப்பில்லை என்று அழுகிறார்கள். அதை பார்த்து விட்டு ஆபிஸ்க்கு வந்து தமிழ் செய்திகளை பார்த்தால் தமிழக மக்கள் மலையாளிகளால் பாதிக்கப்பட்ட செய்திகளை கதை கதையாக செய்தி சானல்கள் ஒப்பித்து பாதிக்கப்பட்டவர்களை செய்தியாளர் களத்தில் சந்தித்து கள செய்திகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
மலையாள செய்தி சானல்களை தொடர்ச்சியாக பார்க்கும் மலையாளி, தமிழர்கள் இன வெறியர்கள் அவர்களுக்கெதிராக எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பது போலவே தமிழ் நியூஸ்களை பார்க்கும் தமிழக மக்களும் உசுப்பேத்தப்படுகிறார்கள். இருபக்கமும் கொம்பு சீவி விடும் வேலையை மீடியாக்கள் திறம்பட செய்கின்றன.
எத்தனையோ தமிழர்கள் கேரளாவில் பல தலைமுறையாக அங்கேயே பிறந்து வளர்ந்து மாநில மொழி பேசி மலையாளிகளாக மாறி போயிருக்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மலையாளிகள் அவர்களின் மொழி மறந்து தமிழ் பேசி தமிழர்களாக மாறி இருக்கின்றனர். இப்படி இருக்கிறவர்களை இது போன்ற தருனங்களில் அங்கு தமிழர்கள்கிறுக்கர்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பக்கத்து வீட்டு தமிழனாகி போன மலையாளியை தூக்கி போட்டு மிதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நன்மொழிகளை வழங்கியவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல இது. நியாயமான முறையிலான போராட்டங்களின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரியான வழிமுறையாகும். ஆனால் இதுபோன்ற அநீதியான செயல்களை யார் இரு பக்கமும் செய்கிறார்கள்? இங்கு தான் கள்ள பயல்கள் வருகிறார்கள்.
முதல் வகையான கள்ளர்கள் சமூக விரோதிகள்.
சுனாமி, இயற்கை பேரழிவு நடந்த போது இரக்கமுள்ள அனைத்து மக்களும் உதவி செய்து கொண்டு இருக்கும் போது சில சமூக விரோதிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். பிணங்களின் கையில் இருந்த மோதிரத்திற்காக விரலை அறுத்தவர்கள், தோட்டிற்காக காதை அறுத்தவர்கள்.
மங்களுர் விமான விபத்து நடந்து பல உயிர்கள் கருகி இறந்து கிடக்க உறவினர்கள் பிணத்தை கூட அடையாளம் காண முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் போது சில திருட்டு சமூக விரோதிகள் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள், நகைகளை கருகிய உடல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள்.
எகிப்து புரட்சி நடந்தபோது இது போன்ற சமூக விரோதிகள் கடைகளில் புகுந்தும் வீடுகளில் புகுந்தும் கொள்ளையடித்தனர். ஆனால் இதனை தொடர விடாமல் போராட்டக்காரர்களே ஒரு குழு அமைத்து சமூக விரோதிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
இலண்டன் கருப்பு இனத்தவரின் போராட்டங்களின் போது ஊடுருவி சமூக விரோதிகள் கடைகளை கொள்ளையடித்தை இங்கிலாந்தின் மீடியாக்கள் கருப்பர்கள் கொள்ளையர்கள், திருடர்கள். அதற்காகத்தான் கலவரம் செய்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தியது. அதன் பிறகு சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்தவர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
முல்லை பெரியாறு போன்ற போராட்ட பிரச்சனைகளை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மலையாளிகள் வீடுகளில் புகுந்தும், கேரளாவில் தமிழர்கள் வீடுகளில் புகுந்தும் திருடுகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள் இந்த சமூக விரோதிகள் தான். இவர்களை அடையாளம் காண வேண்டும். அதை விட்டு விட்டு இதை ஒரு மாநிலத்தவரின் பன்பாக பார்க்கக் கூடாது
இரண்டாவது கள்ளர்கள் சந்தர்ப்பவாத,வகுப்புவாத அரசியல்வாதிகள்.
திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்டக்காரர்கள் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணைகட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்ட ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்.
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "டேம்-999 " என்ற இந்த படத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மத்திய அரசு தயாராக இல்லையெனில் தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் குழுக்கள் பலமுறை சோதனை நடத்தி அணை பலமாக உள்ளது என தெளிவுப்படுத்தியும் கூட மக்களிடம் பீதியை ஏற்படுத்த கேரள அரசு செயல்பட்டு வருவதாக ஊருக்கு ஊரு பேச்சு என்பது போல் அறிக்கை விடுகிறார்.
நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் சுத்த அரசியல் கள்ளத்தனங்கள்.
இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அதனுடைய நியாயங்களை ஆதரிப்போம்.
நன்றி: நண்பர் ஹைதர் அலி
ரியாத்
|
No comments:
Post a Comment