சசிகலா அதிரடி நீக்கத்தின் பரபரப்பு பின்னணிதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்,
டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன், மிடாஸ் மோகன், மகாதேவன் மற்றும் தங்கமணி ஆகிய 14 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. நீக்கப் பட்ட 14 பேருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுகவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
சமீப காலமாகவே ஜெயலலிதா - சசிகலா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் உளவுத் துறையின் டி.ஐ.ஜி யாக பொறுப்பில் இருந்த பொன் மாணிக்கவேல் அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டு விழுப்புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஐ.ஜி யாக நியமிக்கப் பட்டார். மதுரையில் திரைப் பட பைனான்சியர் அன்புச் செழியன் கைது செய்யப்பட்ட போது பொன் மாணிக்க வேல் தலையிட்டு மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க்கிடம் அன்புச் செழியன்மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆஸ்ரா கார்க் அதற்கு உடன்படாததோடு ஆட்சியின் மேலிடத்திற்கு இத்தகவலைக் கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.
வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக அறியப்பட்ட அன்புச் செழியனை விடுவிக்க உளவுத் துறை டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேல் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாகவே பொன் மாணிக்கவேல் அதிரடியாக மாற்றப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஓய்வு பெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர் செல்வம் கடந்த 13 அன்று தம் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி அதிரடியாக நீக்கப் பட்டார். பன்னீர் செல்வம் மற்றும் திருமலைச் சாமி இருவருமே சசிகலாவுக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் என்று கூறப் படுகிறது.
சசிகலாவுக்கு நெருக்கமான பன்னீர் செல்வம்தான் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் மோனோ ரயில் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் கவனித்து வந்ததாகவும் அவர் செய்த குளறுபடியால் பசுமை வீடுகள் திட்டத்தின் தொடக்க விழா இரு முறை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், மோனோ ரயில் திட்டத்தைச் சசிகலாவுக்கு நெருக்கமான சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவர் டெண்டர் எடுப்பதற்கு வசதியாக காலதாமதம் செய்யப் பட்டு சில விதிமுறைகள் திருத்தப் பட்டுள்ளதாகவும் முதல்வர் காதுகளுக்கு எட்டவே பன்னீர் செல்வம் அதிரடியாக விலக்கப் பட்டுள்ளார் என்றும் தெரிகிறது.
மேலும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக பெங்களூரு சென்ற சசிகலாவை வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் கோபத்துக்கு உள்ளான சசிகலா குடும்பத்தினர் சிலர் சந்தித்துப் பேசிய செய்திகளும் உளவுத் துறை மூலம் ஜெயலலிதாவின் காதுக்குப் போகவே தம்மைச் சுற்றி சதிவலை பின்னப் படுவதை தாமதமாகவே உணர்ந்துள்ளார் ஜெயலலிதா. அன்றைய தினமே சென்னையில் தங்கி இருந்த சில அமைச்சர்களை அழைத்து இனி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது என்றும் அவருடைய உத்தரவுகளை நிறைவேற்றத் தேவை இல்லை என்றும் எந்நேரமும் தம்மிடமே ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாகவும் கூறப் படுகிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்து ஜெயலலிதா பதவி விலக நேரிட்டால் முதல்வராக சசிகலாவின் கணவர் நடராஜனை நியமிக்கவும் அதற்கு உதவியாக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வளைத்துக் கட்சியைக் கைப்பற்றவும் சசிகலா தரப்பு முயன்று வருவதாகவும் கூறப் படுகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக சார்பில் போட்டியிட்ட 160 பேரில் சுமார் பாதி பேர் சசிகலா சமூகத்தைச் சேர்ந்த முக்குலத்தொர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ க்களில் 69 பேர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப் படுகிறது. அதிகார மையத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு அமைச்சர்கள் நியமனம், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம், டெண்டர்கள் போன்ற அரசு நிர்வாக விவகாரங்களில் சசிகலா தலையிட்டதாகவும் தெரிகிறது. நிலை கை மீறி போகும் நிலையிலேயே ஓய்வு பெற்ற நம்பிக்கைக்குரிய முன்னாள் அதிகாரி ஒருவர் மூலம் உண்மை நிலவரங்களை ஜெயலலிதா தெரிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இதன் பின்னணியிலேயே சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சசிகலாவின் நீக்கத்தை அடுத்து சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சிலரும் அதிரடியாக நீக்கப் படக் கூடும் என்று தெரிகிறது. அதிரடிக்குப் பெயர் போன ஜெயலலிதா 29 ஆண்டு கால நெருங்கிய தோழி சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30 அன்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
|
No comments:
Post a Comment