ஜனவரி 1ம் தேதி என்றால் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது புத்தாண்டை ஜாலியாக கொண்டாடுவது, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை, நண்பர்கள், குடும்ப நபர்களுடன் சேர்ந்து மகிழ்வது, டூர் செல்வது என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சிலர் புத்தாண்டு அன்று கோவில், சர்ச், மசூதி என்று பக்தி பரவசமாகவும், சிலர் புத்தாண்டை கொண்டாடுவதாக கூறி 'புல்' போதையில் கவிழ்ந்து கொண்டு, கிடக்கும் சம்பவங்களை தற்காலத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் வரலாற்றில் இந்த ஜனவரி 1ம் தேதிக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்த தேதியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளன.
ஜனவரி- 1 பிறந்தது எப்படி?
ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் கொண்ட நாட்கள் காட்டியை அறிமுகப்படுத்தியவர் கிறிஸ்தவ தலைமை மதக் குருவான போப் கிரிகோரி XIII. இவர் கடந்த 1582ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த கால அட்டவணையை வெளியி்ட்டார். அதன்பிறகு அந்த கால அட்டவணை பிரபலமாகி உலகம் எங்கும் பரவியது.
இந்த நாள் காட்டியானது, கிரிகோரியன் காலண்டர் என்றும், கிறிஸ்டியன் காலண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜூலியன் காலாண்டரை தழுவி தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது. கிரிகோரி காலண்டர் கணக்குபடி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.
அந்த காலண்டர் வழக்கத்துக்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். கிரிகோரியன் காலண்டர் வெளியான பிறகும் ரஷ்யா, கிரேக்கம் உள்ளிட்ட சில நாடுகள் பழைய முறையை தான் பின்பற்றி வந்தன.
இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்தினரும் ஒரு வகையான ஆண்டு முறையை கடைப்பிடித்து வருகின்றனற். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் சித்திரை மாதம் 1ம் தேதியை (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க சபையில் இருந்து 15ம் நூற்றாண்டில் பிராட்டஸ்டன்டு சபை பிரிந்தது. இதனால் பிராட்டஸ்டன்டு பிரிவினர் கிரிகோரியன் காலண்டரை பின்பற்ற மறுத்து, வேறு பல முறைகளை பின்பற்றி வந்தனர். 20ம் நூற்றாண்டில் தான் இந்த பிரிவிணைகள் நீக்கப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவாக கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றும் வழக்கம் தோன்றலாகியது.
இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது.
சரி இனி, ஜனவரி 1ம் தேதி நடந்த சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்...
வரலாற்றில் ஜனவரி 1ம் தேதி பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. கிமு 42ம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஜூலியன் காலாண்டர் பின்பற்று முறை வழக்கில் வந்தது. அதன்பிறகு அதே நாளில் 1522ல் வெனிஸ் குடியரசு, 1544ல் ரோம பேரரசு, 1556ல் ஸ்பெயின், போர்ச்சுகல் அரசுகள் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கொண்டாட துவங்கின.
மேலும் பெர்சியா, சுவீடன் நாடுகளில் 1559லும், பிரன்சு குடியரசில் 1564லும், ஸ்வாட்லாந்தில் 1600லும், ரஷ்யாவில் 1700லும், இங்கிலாந்து பேரரசின் பகுதிகளில் 1752ம் ஆண்டு முதல் ஜனவரி 1ம் தேதியை ஆண்டின் முதல் தேதியாக அங்கீகரிக்கப்பட்டது.
1800ம் ஆண்டு டச்சுக்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. 1804ம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களிடம் இருந்த ஹைதி சுதந்திரமடைந்தது. மேலும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் 1956ம் ஆண்டிலும், ப்ரூனை நாடு 1984லும் வந்த ஜனவரி 1ம் தேதிகளில் சுதந்திர நாடுகளாக மாறின.
இந்தி சினிமா நடிகர் நானா படேகர் 1951ம் ஆண்டும், இந்திய நடிகை சோனாலி பிந்த்ரே 1975ம் ஆண்டும் இதே நாளில்தான் பிறந்தனர்.
இதே ஜனவரி 1ம் தேதிதான் அமெரிக்காவின் சீல் கடற்படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து போட்டுத் தள்ளினார்கள் என்பது நினைவிருக்கலாம்.
இப்படி ஜனவரி 1ம் தேதியின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்...
|
No comments:
Post a Comment